நெய்ப்பாயசம்
சிறு அளவிலான இறுதிச் சடங்குகள் நடந்தேறின. அலுவலக நண்பர்களுக்குப் போதுமான அளவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு இரவில் வீட்டுக்குத் திரும்பும் அந்த மனிதனை நாம் இனி அப்பா என்று நினைவுகொள்வோம். ஏனெனில், அந்த நகரத்தில் அவனது விலையை அறிந்தவர்கள் மூன்று குழந்தைகள் மட்டும்தான். அந்த மனிதனை அவர்கள் அப்பா என்றுதான் அழைப்பார்கள்.

பஸ்சில் முன்பின் தெரியாதவர்களிடையே அமர்ந்திருந்த அவன் அன்றைய நாளின் ஒவ்வொரு நிமிட நிகழ்வையும் தனித்தனியாகப் பிரித்துச் சோதனை செய்தான்.

காலையில் எழுந்தது அவளது சத்தம் கேட்டுதான்: "மூடிப் புதைச்சிட்டுப் படுத்திருந்தா முடியுமா இன்னைக்கும்? திங்கள்கிழமைதானா?" அவள் மகனை உசுப்பிக்கொண்டிருந்தாள். பிறகு கசங்கிய வெள்ளைச் சேலையையும் உடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்து வேலையில் மூழ்கினாள். தனக்கு ஒரு பெரிய கோப்பையில் காப்பி கொண்டுவந்து தந்தாள்.

பிறகு… பிறகு என்னவெல்லாம் நடந்தது? மறந்துவிட முடியாதபடி ஏதாவது வார்த்தைகளை அவள் பயன்படுத்தினாளா? எவ்வளவுதான் முயற்சி செய்த பிறகும் பிறகு அவள் சொன்ன எந்த வார்த்தையுமே நினைவுக்கு வரவில்லை. மூடிப் புதைச்சிட்டுப் படுத்திருந்தா முடியுமா இன்னைக்கும்? திங்கள் கிழமைதானா? இந்த வார்த்தை மட்டும் மாயாமல் நினைவில் பதிந்துகிடக்கிறது. அதை ஏதோ இறைநாமம்போல் அவன் உச்சரித்தான். இதையும் மறந்து போய்விட்டால் தன்னுடைய இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாதுபோல் அவனுக்குத் தோன்றியது.

அலுவலகத்திற்குப் போகும்போது குழந்தைகளும் கூடவே வந்தார்கள். அவர்களுக்குப் பள்ளிக்கூடத்தில் வைத்துச் சாப்பிடுவதற்கான பலகாரங்களை சிறு அலுமினியப் பாத்திரங்களில் அவள் எடுத்துக்கொண்டு வந்தாள். அவளது வலதுகையில் சிறிது மஞ்சள்தூள் அப்பியிருந்தது.

அலுவலகத்திலிருக்கும்போது அவளது நினைவு ஒருதடவைகூட வரவில்லை. ஒன்றிரண்டு வருடங்கள் தொடர்ந்த காதலின் முடிவில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். இரு வீட்டுக்காரர்களின் சம்மதமில்லாமலேயே! ஆனாலும் அதைப்பற்றி வருத்தப்பப்படுவதற்குத் தோன்றியதே இல்லை. பணமுடை, குழந்தைகளின் ஆரோக்கியம் இப்படியாகச் சில பிரச்சனைகள் அவர்களைச் சோர்வடைய வைத்ததுண்டு. அவளுக்கு ஆடை அலங்காரங்களில் சிரத்தை குறைந்தது. அவனுக்கு வாய் விட்டுச் சிரிப்பதற்கான திறன் கிட்டத்தட்ட இல்லாமல் போனது.

இருந்தாலும் அவர்கள் பரஸ்பரம் பிரியத்துடன்தான் நடந்துகொண்டார்கள். மூன்று குழந்தைகள். அவர்களுடனும் அன்பாகவே இருந்தார்கள். உண்ணிக்குப் பத்து வயது, பாலனுக்கு ஏழு வயது, ராஜனுக்கு ஐந்து வயது. முகத்தில் எப்போதுமே எண்ணெய் புரண்டிருக்கும் மூன்று குழந்தைகள். சொல்லிக் கொள்ளும்படியான அழகோ திறைமையோ இல்லாதவர்கள். ஆனால், அம்மாவும் அப்பாவும் தங்களுக்குள் சொல்லிக்கொள்வார்கள்:

"உண்ணிக்கு எஞ்சினீயரிங்கில்தான் ஆர்வம். பாருங்க, எப்பப் பாத்தாலும் எதையாவது செய்துட்டிருக்கான்."

"பாலனை டாக்டராக்கணும். அவன் நெற்றியைப் பாத்தீங்களா? இவ்வளவு அகலமான நெற்றி புத்திசாலித்தனத்தோட அறிகுறியாக்கும்."

"ராஜன் இருட்டுலே எல்லாம் துளிகூட பயமில்லாம நடக்குறான். நல்ல மனத்திடம். மிலிட்டரிக்காரனா வருவான்."

அவர்கள் தங்கியிருந்தது, நகரத்தில், மத்தியதர வகுப்பினர் வசிக்கும் ஒரு சிறு தெருவில், கீழ்த்தளத்தில் மூன்று அறைகள் கொண்ட ஒரு ஃபிளாட்டில். ஒரு அறையின்முன் சிரமப்பட்டு இரண்டு பேர் நிற்பதற்கான இடத்தில் ஒரு சிறு வராந்தாவுமிருந்தது. அதிலொரு பூந்தொட்டியில் அம்மா நீரூற்றி வளர்க்கும் பன்னீர் புஷ்பம் வளர்ந்துகொண்டிருந்தது. ஆனால் இதுவரையிலும் அது பூக்கவில்லை.

சமையலறைச் சுவரில் ஆணியடித்துப் போடப்பட்டிருந்த கொக்கிகளில் பித்தளைச் சட்டுவங்களும் கரண்டிகளும் தொங்கிக்கிடந்தன. ஸ்டவ்வின் பக்கத்தில் அம்மாவுக்கு உட்காருவதற்கான ஒரு தேய்ந்துபோன பலகை கிடந்தது. அவள் அதிலமர்ந்து சப்பாத்தி உருட்டிக் கொண்டிருக்கும் போதுதான் பெரும்பாலும் அவன் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவான்.

பேருந்து நின்றதும் அவன் இறங்கினான். கால் மூட்டில் லேசாக வலிப்பது போலிருந்தது. வாதக் கோளாறாக இருக்குமோ? தான் படுக்கையிலானால் குழந்தைகளுக்கு வேறு யாரிருக்கிறார்கள்? திடீரென்று அவனது கண்கள் நிறைந்தன. அழுக்கடைந்த ஒரு கைத்துண்டால் முகத்தைத் துடைத்துவிட்டு வேகமாக நடந்தான்.

குழந்தைகள் தூங்கியிருப்பார்களா? ஏதாவது சாப்பிட்டிருப்பார்களா? அல்லது அழுதழுது தூங்கியிருப்பார்களா? அழுவதற்கான மனவுறுதியும்கூட அவர்களுக்கு வந்திருக்கவில்லை. அதனால்தானே அவன் அவளையும் தூக்கிக்கொண்டு டாக்சியில் ஏறும்போது அழாமல் அப்படியே பார்த்தபடி நின்றிருந்தார்கள்? சின்னவன் மட்டும் அழுதான். அதுகூட, டாக்சியில் நானும் வருவேன் என்றுதான். மரணத்தின் அர்த்தத்தை நிச்சயமாக அவன் அறிந்திருக்கவில்லை.

அவனாவது அறிந்திருந்தானா? இல்லை. தினமும் வீட்டில் எதிர்பார்த்திருக்கும் அவள் அன்று சாயங்காலம் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தரையில் ஒரு துடைப்பத்தின் பக்கத்தில் விழுந்து இறந்துகிடப்பாள் என்று அவன் நினைத்திருந்தானா?

அலுவலகத்திலிருந்து வந்ததும் சமையலறையின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தான். அங்கே அவள் இல்லை. முற்றத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. உண்ணி சத்தமாகச் சொல்கிறான்: "ஃபர்ஸ்ட் கிளாஸ் ஷாட்."

அவன் சாவியை எடுத்து முன்பக்கக் கதவைத் திறந்தான். அப்போதுதான் அவள் கீழே கிடப்பதைக் கண்டான். வாயை லேசாகத் திறந்து தரையில் சரிந்து படுத்திருந்தாள். விழுந்ததில் தலையில் அடிபட்டிருக்கலாம் என்று நினைத்தான். ஆனால், ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனதும் டாக்டர் சொன்னார்: "ஹார்ட் அட்டாக். இறந்து ஒன்றரை மணி நேரமாகுது."

ஏதேதோ உணர்வுகள்… இனம்புரியாத ஏதோ கோபம் அவள்மீது… இப்படி எந்த முன்னறிவிப்புமில்லாமல் எல்லாப் பொறுப்புகளையும் தன்னுடைய தலையில் சுமத்திவிட்டுப் போய்விட்டாளே?

இனி குழந்தைகளை யார் குளிப்பாட்டுவார்கள்? அவர்களுக்கு யார் உணவு தயார்செய்து கொடுப்பார்கள்? உடம்புக்கு ஏதாவதென்றால் யார் கவனிப்பது?

'என்னுடைய மனைவி இறந்துபோய் விட்டாள்.' அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்: "என் மனைவி இன்னைக்குத் திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாள். எனக்கு ஒரு இரண்டு நாள் லீவு வேணும்."

எவ்வளவு நியாயமான காரணத்துடனான விடுமுறை விண்ணப்பமாக இருக்கும் அது. மனைவிக்கு உடம்புக்கு சரியில்லை என்றுகூட இல்லை. மனைவி இறந்து போய்விட்டாள் என்று. உயரதிகாரி ஒருவேளை தன்னை அவரது அறைக்குள் அழைக்கவும் கூடும். "உண்மையாகவே நான் ரொம்ப வருத்தப்படுறேன்." என்று அவர் சொல்லலாம். ஹும்! அவருக்கென்ன வருத்தம்! அவளை அவருக்குத் தெரியவே செய்யாது. அவளுடைய நுனி சுருண்ட தலைமுடியும் சோர்ந்துபோன புன்சிரிப்பும் மெதுவான நடையும் எதுவுமே அவருக்குத் தெரியாது. இதெல்லாமே தன்னுடைய இழப்புகள்…

வாசலைத் திறந்ததும் சின்னவன் படுக்கையறையிலிருந்து ஓடிவந்து சொன்னான்: "அப்பா, அம்மா இன்னும் வரலை."

அவன் இவ்வளவு சீக்கிரம் எல்லாவற்றையும் மறந்துவிட்டானா? டாக்சியில் ஏற்றிய அந்த உடல் தனியாகத் திரும்பி வருமென்று நினைத்திருக்கிறானா?

அவன் மகனின் கையைப் பிடித்துக்கொண்டு சமையலறைக்கு நடந்தான்.

"உண்ணீ," அவன் கூப்பிட்டான்.

"என்னப்பா?"

உண்ணி கட்டிலிலிருந்து எழுந்து வந்தான்.

"பாலன் தூங்கிட்டாம்பா."

"ம்… நீங்கள்லாம் ஏதாவது சாப்பிட்டீங்களா?"

"இல்லேப்பா."

அவன் சமையறைத் திண்டில் வைத்திருந்த பாத்திரங்களின் மூடியைத் திறந்து பார்த்தான். அவள் தயார்செய்து வைத்திருந்த சப்பாத்தி, சோறு, உருளைக்கிழங்குக் கூட்டு, உப்பேரி, தயிர், ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் குழந்தைகளுக்காக அவ்வப்போது வைக்கும் நெய்ப்பாயசமும் இருந்தது.

மரணத்தைத் தொட்டுணர்ந்த பதார்த்த வகைகள். வேண்டாம். அதைச் சாப்பிடக் கூடாது.

"நான் கொஞ்சம் உப்புமா வச்சித் தர்றேன். இதெல்லாம் குளிர்ந்து போயிருக்கு." அவன் சொன்னான்.

"அப்பா." உண்ணி அழைத்தான்.

"ம்…"

"அம்மா எப்பப்பா வருவா? அம்மாவுக்கு சரியாகலையாப்பா?"

உண்மையை ஒரு நாளாவது மறைத்து வைக்கும் பொறுமை கைவர வேண்டும். அவன் நினைத்துக்கொண்டான். இப்போதே, இந்த இரவே உண்மையைச் சொல்லி, குழந்தையை வேதனைப்படுத்துவதால் என்ன கிடைத்து விடப்போகிறது?

"அம்மா வருவாள்."

அவன் கோப்பைகளைக் கழுவி கீழே வைத்தான். இரண்டு கோப்பைகள்.

"பாலனை எழுப்ப வேண்டாம். தூங்கட்டும்." அவன் சொன்னான்.

"அப்பா, நெய்ப்பாயசம்" ராஜன் கேட்டுவிட்டு அந்தப் பாத்திரத்தில் தனது ஆட்காட்டி விரலை அமிழ்த்தினான்.

அவன் தனது மனைவி அமருகிற பலகையில் அமர்ந்தான்.

"உண்ணி எடுத்து வைப்பியா? அப்பாவுக்கு முடியலே, தலை வலிக்குது."

அவர்கள் சாப்பிடட்டும். இனி அவள் வைத்துக்கொடுக்கும் உணவு அவர்களுக்குக் கிடைக்கவா போகிறது?

குழந்தைகள் பாயசத்தை சாப்பிடத் தொடங்கினார்கள். அவன் அதைப் பார்த்தபடியே சலனமற்று உட்கார்ந்திருந்தான். சில நிமிடங்கள் கழிந்தபோது அவன் கேட்டான்: "சோறு வேண்டாமா உண்ணி?"

"வேண்டாம். பாயசம் போதும். நல்ல ருசியா இருக்கு," உண்ணி சொன்னான்:

ராஜன் சிரித்தபடியே சொன்னான்: "ஆமா… அம்மா நெய்ப்பாயசம் சூப்பரா வெச்சிருக்கா."

தனது கண்ணீரைக் குழந்தைகள் கவனித்து விடாமலிருப்பதற்காக அவன் எழுந்து குளியலறைக்கு நடந்தான்.

மலையாள மூலம்: கமலா சுரய்யா
தமிழில்: குளச்சல் மு. யூசுப்

© TamilOnline.com