குளச்சல் மு. யூசுப்
மலையாளத்திலிருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் மு. யூசுப். இவர் குமரி மாவட்டம் குளச்சலில் பிறந்தவர். குடும்பச்சூழலால் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பள்ளிக்குச் செல்ல முடிந்தது. ஆனால், படிக்கும் ஆர்வம் அதிகமிருந்தது. ஊரிலிருந்த "இந்து இளைஞர் வாசிப்பு சாலை" என்ற நூலகம் இவருக்கான அறிவுக் கதவைத் திறந்துவிட்டது. தினத்தந்தி தொடங்கி நாளிதழ்களையும், பத்திரிகைகளையும் வாசிக்க ஆரம்பித்தார். தொடர்ந்த வாசிப்பு எழுத்தார்வத்தை விதைத்தது. பின்னர் நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்தது குடும்பம். அங்கேயிருந்த மைய நூலகம் இவரது வாசிப்புக்குத் தீனிபோட்டது. ஆர்வத்தால் சிறு சிறு கவிதைகளை எழுதத் துவங்கினார். அவற்றால் கவரப்பட்ட நண்பர்களின் தூண்டுதலால் திருமணங்களுக்கு வாழ்த்துமடல், கவிதைகள் எழுதுவதில் கவனம் செலுத்தினார். வானொலிக்காகவும் கவிதைகள் எழுதினார். ஷா பானு பேகம் வழக்கு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாக இவர் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்ப அது பிரசுரமானது. தொடர்ந்து பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி அனுப்பினார். அவற்றில் சில பிரசுரமான போதிலும், குடும்பச் சூழலால் இலக்கிய ஈடுபாடு தொடரவில்லை. மளிகைக்கடை ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். அங்கு எடைக்குப் போடப்படும் தமிழ், மலையாள நூல்கள், பத்திரிகைகளை வாசித்து இலக்கிய ஆர்வத்தைக் கூர்மைப் படுத்திக்கொண்டார். மொழிபெயர்ப்பு, வரலாறு, கவிதை, உளவியல், ஆன்மிகம் என்று விதவிதமாக வாசித்ததில் எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. மலையாள மொழியின்மீது ஆர்வம் அதிகரித்தது. மலையாள மனோரமா, மங்களம் போன்ற வார இதழ்கள், திரைப்படங்கள், வைக்கம் முகம்மது பஷீர், தகழி, கேசவதேவ், கேரளத்தின் புரட்சிகர இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்கள் குறித்த நூல்கள் என இவரது வாசிப்பு விரிவடைந்தது. மலையாளத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார்.

Click Here Enlargeநுகர்பொருட்களின் முகவர், நடைபாதைக் கடை வியாபாரி, புகைப்படக் கலைஞர் எனப் பல பணிகளைப் பார்த்தாலும் இலக்கிய ஆர்வம் குறையவில்லை. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் போன்றவர்களும் இவரை ஊக்குவிக்க, மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார். சாகித்ய அகாதமி விருதுபெற்ற புனத்தில் குஞ்சப்த்துல்லாவின் புகழ்பெற்ற 'மீஸான் கற்கள்' என்னும் நாவலை மொழிபெயர்த்தார். 'காலச்சுவடு' அதை வெளியிட்டது. அவ்விதழின் ஆதரவு, வாசகர் ஊக்குவிப்பும் தொடர்ந்து எழுதக் காரணமாக அமைந்தன. தொடர்ந்து வெளியான 'மஹ்ஷர் பெருவெளி' இவரது மொழிபெயர்ப்புத் திறனை வெளிக்காட்டியது. தன் வரலாறுகளான 'நளினி ஜமீலா', 'நக்ஸலைட் அஜிதா', 'வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி', 'திருடன் மணியம் பிள்ளை' போன்றவையும், 'ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்', 'பாத்துமாவின் ஆடு', 'பர்ஸா', 'வினயா', 'கொச்சரேத்தி', 'அக்னி சாட்சி', 'உலகப் புகழ்பெற்ற மூக்கு', 'எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது', போன்ற நூல்களும் இவருக்குப் புகழைச் சேர்த்தன.

"மீஸான் கற்கள் தமிழில் இதுவரை வெளிவந்த நான்கு நல்ல மொழிபெயர்ப்பு நாவல்களில் ஒன்று. நாவலின் கதாபாத்திரங்களுக்கு வட்டார மொழியைப் பயன்படுத்தியிருப்பதன் மூலம் மொத்த நாவலுக்குமே ஓர் அசல் தன்மையை அளித்திருக்கிறார் குளச்சல் மு. யூசுப்" என்று புகழ்ந்துரைக்கிறார் ஜெயமோகன். "குளச்சல் மு. யூசுப்பின் மொழிபெயர்ப்பு குறைசொல்ல முடியாதபடிக்கு இருக்கிறது" என்பது அமரர் அசோகமித்திரனின் பாராட்டு. வைக்கம் முகம்மது பஷீரின் நாவல்களைச் சிறந்த முறையில் மொழிபெயர்த்த பெருமையும் இவருக்குண்டு. மலையாளத்தில் தமிழ் நீதி இலக்கியமான நாலடியாரைக் கொண்டு சேர்த்தவரும் இவரே. 'அழியா முத்திரை' (நாவல்), 'ஒரு அமரகதை' (நாவல்), 'வினயா' (சுயசரிதை), 'அடூர் கோபாலகிருஷ்ணன்', 'மேலும் சில இரத்தக்குறிப்புகள்' (நாவல்), 'சப்தங்கள்' (நாவல்), 'ஆனைவாரியும் பொன்குருசும்' என முப்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளை மலையாளத்திலிருந்து தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார்.

மொழிபெயர்ப்பில் தீவிரமாக இயங்கி வரும் இவரைப் பல விருதுகளும் கௌரவங்களும் தேடி வந்திருக்கின்றன. நல்லி திசையெட்டும் விருது, தமிழ்த்தொண்டர் விருது, தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்க விருது, உள்ளூர் பரமேஸ்வர ஐயர் விருது, இஸ்லாமிய தமிழியல் ஆய்வக விருது, வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது, தொ.மு.சி. ரகுநாதன் விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். சமீபத்தில் 'ஸ்பேரோ' அமைப்பு சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதை அளித்து கௌரவித்துள்ளது.

Click Here Enlargeசுந்தர ராமசாமியின் 'தோட்டியின் மகன்' இவரை மிகவும் கவர்ந்த மொழிபெயர்ப்பாகும். 'சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல்' என்பது மொழிபெயர்ப்பில் இவரது உத்தி. அதைப்பற்றிச் சொல்லும்போது, "ஒரு சொற்றொடரை அல்லது அத்தியாயத்தைப் புரிந்துகொண்டு, மொழியாக்கம் செய்வது ஆங்கிலம் போன்ற மொழிகளுக்குத் தேவையாக இருக்கலாம். மலையாளத்திலிருந்து மொழியாக்கம் செய்யும்போது இதற்கான தேவையே உருவாவதில்லை. ஒவ்வொரு சொல்லாக மொழியாக்கம் செய்து, வாக்கிய அமைப்பை மட்டும் மிக நேர்த்தியாகச் சரிசெய்யும் மொழியாக்கம்தானே உண்மையாக இருக்க முடியும்?" என்கிறார். மேலும், "மொழிபெயர்க்கப்படவிருக்கும் நூலின் தன்மை, கருப்பொருள், அதன் காலகட்டம்போன்ற அடிப்படையான விஷயங்களைக் கவனத்தில் கொண்டு பொதுத் தமிழ், வட்டார வழக்கு, மணிப்பிரவாளம், நவீன மொழிநடை என முறையியலைத் தீர்மானிக்கிறேன்" என்கிறார்.

தற்போது சிவவாக்கியரின் சிவவாக்கியத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது எனும் ஐந்து நூல்களையும் மொழியாக்கம் செய்து ஒரே நூலாகக் கொண்டு வரும் பணியையும் மேற்கொண்டிருக்கிறார். இவர் மலையாளத்தில் மொழிபெயர்த்த நாலடியார் நூலைப் பிழைதிருத்தித் தருவதாகக் கேட்டு வாங்கிய ஒருவர், தனது பெயரில் வெளியிட்டுவிட்ட அவலமும் இவருக்கு நேர்ந்திருக்கிறது. அதையெல்லாம் எதிர்கொண்டு, சளைக்காமல், ஒரு கர்மயோகியாகத் தனது எழுத்துப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் குளச்சல் மு. யூசுப், மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு அளித்துவரும் கொடை போற்றத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com