தென்றல் பேசுகிறது...
புவியின் சராசரி வெப்பநிலை ஏறிக்கொண்டே போகிறது. இதனால் உலக அளவில் ஏற்படும் துயரங்கள் அளவிறந்தன. உலகின் அனைத்து நாடுகளும் கைகோத்து, வெப்பநிலை ஏற்றத்தை 2.0 டிகிரி செல்சியஸ் அளவை மீறாமல் பார்த்துக்கொள்ளவும், அதையே 1.50 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டிப்போடவும் முயல்வதற்கென பாரிஸ் ஒப்பந்தம் டிசம்பர் 2015ல் 195 உலக நாடுகளால் ஏற்கப்பட்டன. அதில் அமெரிக்காவும் சீனாவும் அடங்கும். இயற்கைப் பேரழிவுகளுக்கும், பருவநிலை தவறுதலுக்கும், விவசாயம் பொய்ப்பதற்கும் எனப் பலவகை அச்சுறுத்தலான விளைவுகளுக்குக் காரணமான புவி வெப்பநிலை உயர்வைத் தடுப்பது ஒவ்வொரு அறிவார்ந்த நாட்டின் கடமை. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென்று பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாகக் கூறியிருப்பது அமெரிக்க மக்களிடையே மட்டுமல்லாமல், உலக நாடுகளிடையே பெரிய ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

புவிச் சூடேற்றத்துக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று வாகனங்கள் வெளிவிடும் கார்பன் டை ஆக்ஸைடு. பல ஆண்டுக்கால நெறிப்படுத்தலில் வாகனத் தயாரிப்பாளர்கள் வாகனப் புகையில் நச்சுப் பொருட்களின் சதவிகிதத்தைக் குறைத்து வருவதோடு, புதைபடிவ (fossil) எரிபொருள் மீதான சார்பைக் குறைத்துப் பிற ஆற்றல்களைப் பயன்படுத்தும் வாகனங்களைத் தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வாகனப்புகை வெளிப்பாட்டுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நோக்கத்தில் ட்ரம்ப் ஒரு மீள்பார்வைக்கு ஆணையிட்டுள்ளார். காலத்துக்கு ஒவ்வாத பிற்போக்குச் செயல்பாடுகளில் நிச்சயம் இவற்றைச் சேர்க்கலாம். நிறுவனங்கள் தம்மிடம் பணிபுரிவோருக்குக் கருத்தடைச் சாதனங்களுக்கான முழுக் காப்பீடும் தரவேண்டும் என முந்தைய அரசு கொண்டுவந்த ஒபாமா கேர் சட்டத்தை விலக்கவும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ஓர் அறிவுசார் சமுதாய முன்னோடியாக அமெரிக்கா தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் இத்தகைய புவி நலத்துக்கும் மக்கள் நலத்துக்கும் எதிரான செயல்பாடுகளில் அரசு ஈடுபடுவதைச் சட்டரீதியான வழிகளில் குடிமக்கள் தடுக்க வேண்டும். அதுவும் ஜனநாயகக் கடமைதான்.

*****


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 12 வயதான அனன்யா வினய் Scripps National Spelling Bee போட்டியை வென்றுள்ளார். 2008ம் ஆண்டு தொடங்கி, 10 போட்டிகளின் வெற்றியாளர்களில் 13 பேர் (இணை வெற்றியாளர்களையும் சேர்த்து) இந்திய அமெரிக்கர்கள் என்பது பெருமைக்குரியது. இறுதிச்சுற்றில் marocain என்ற சொல்லுக்குச் சரியான எழுத்துக்களைக் கூறி அவர் 40,000 டாலர் பரிசை வென்றார். வாழ்த்துக்கள் அனன்யா வினய்!

*****


இந்திய கிராமத்தில் விவசாயம் மட்டுமல்ல, கணினித் தொழிலும் நடத்தலாம் என்பதைச் செய்துகாட்டி, தமிழக அரசின் கணினித் தமிழ் விருதைப் பெற்றுள்ளார் இளைஞரான செல்வமுரளி. இடைஞ்சல் என்பது தடைக்கல் அல்ல என்பதைப் புரிந்து வைத்திருக்கும் அவர், மிகுந்த உழைப்பில் பெற்றுள்ள உயர்வுகளை அவரது நேர்காணல் விவரிக்கிறது. டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தனது வயதுப்பிரிவில் பெண்களுக்கான தேசிய சேம்பியன்ஷிப்பை வென்று, மற்றொரு 12 வயது அமெரிக்கத் தமிழர் நமக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவர்தான் சுவாதி கிரி. இன்னும், சுய உழைப்பில் பெருஞ்செல்வப் பெண்மணியாக Forbes பட்டியலில் இடம்பெற்ற ஜெயஶ்ரீ உள்ளால், அருட்பெருந்தகை பாம்பன் சுவாமிகள் எனப் பலர் நாம் சிந்தனையை ஒருபடி மேலேற்ற உள்ளே காத்திருக்கிறார்கள். ரமலான் சிறப்புச் சிறுகதையும் உண்டு. இன்னும் ஏன் தாமதம்? நுழையுங்கள்....

வாசகப் பெருமக்களுக்கு ரமலான் திருநாள் மற்றும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

ஜூன் 2017

© TamilOnline.com