ஏப்ரல் 1, 2017 அன்று அட்லாண்டா லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் 30ஆவது ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருமதி. ரீனா ஜெரோம் வரவேற்புரை வழங்க, திருமதி. சுப்புலட்சுமி ராமமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுத் தலைமை தாங்கினார். வீட்டில் தமிழிலேயே பேச வேண்டியதன் அவசியத்தையும், இன்றைய தலைமுறை மனிதாபிமானத்தோடு இருக்கவேண்டியதன் அவசியத்தையும் தெளிவாகவும் எளிதாகவும் விளக்கினார்.
ஸ்ரீநிதி வைத்தீஸ்வரனும், சிஷ்ணுகேஷவ் பாலமுரளியும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். 'நல்லொழுக்கங்கள்', 'நான்கு பருவங்கள்', 'கடையேழு வள்ளல்கள்', 'திருக்குறள் கதைகள்', 'அகத்தியர்' போன்ற தரமான நிகழ்ச்சிகள் ஒருபுறம், தேவாரம், கந்தர் அந்தாதி, திருப்புகழ், பாரதியார் பாடல்கள் மறுபுறம் என நிகழ்ச்சி களைகட்டியது. இடையிடையே பரதநாட்டியம், சிறுமிகளின் துள்ளலாட்டம், பின்னல் கோலாட்டம், அன்னையரின் கோலாட்டம், தந்தையரின் 'தந்தை-மகள்' பாடல், 'நடிக்கப்போவது யார்?' (நாடகம்) போன்ற நிகழ்ச்சிகள் சுவை கூட்டின.
இறுதியில், வாசிப்புப் போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. திருமதி. கிருத்திகா நடராஜன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்த திருமதி. ராஜி ராமச்சந்திரன், திருமதி. லட்சுமி சங்கர், திருமதி. அகிலா சுரேஷ், தன்னார்வத் தொண்டு புரியும் ஆசிரியர்கள், சிரத்தையோடு மூன்று நடனங்களை அமைத்துத் தந்த செல்வி. அம்பிகா சங்கர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா. |