BATS: தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 15, 2017 அன்று கலிஃபோர்னியா மாகாணத்தின் பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. மில்பிடாஸ் நகரின் ஜெயின் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி திரு. குமார் பாடிய இறை வணக்கத்தோடு துவங்கியது. அதனைத் தொடர்ந்தன, அஷ்வினி சுந்தர்ராஜின் புஷ்பாஞ்சலியும், சிறுவன் அனிருத் பாடிய "காற்றினிலே வரும் கீதம்" பாடலும். "வள்ளிக்கணவன் பேர்" சொல்லி பரதநாட்டியம் ஆடினார் கண்ணன் சுவாமிநாதன், அதை வடிவமைத்திருந்தார் ரயன் நாதன். மேலும் நித்யாலக்ஷ்மி மற்றும் ஜெயேந்திர கலாகேந்திரா வழங்கிய நடனங்கள் கண்களுக்கு விருந்து.

இனிய குரலில் சுருதி சுத்தமாய்ப் பாடினர் காயத்ரி பாஸ்கர், அபிநயா செந்தில் மற்றும் நாவிஷா பத்ரிநாராயணன். ப்ரீத்தி ராகுல் மற்றும் தரணியின் இசைக்கு அரங்கமே குதூகலித்தது. சிறுவன் அழகு சுப்ரமணியன் தானே வடிவமைத்து ஆடிய ஆட்டம் வெகு அழகு! நிறைவாக, ரோஹித் ரவி ஆடிய நடனம் மிகச்சிறப்பு. குருவரம் இசைப்பள்ளியின் வீணை நிகழ்ச்சி ரம்மியமாக இருந்தது.

'மணல் கயிறு 2' புகழ் நடிகை ஜெயஸ்ரீ பங்குகொண்ட புடவை அலங்கார அணிவகுப்பு கண்களுக்கு விருந்து. அதில் பங்கேற்ற அந்தச் சிறுவனும் சிறுமியும் கொள்ளை அழகு. விழாவின் முத்தாய்ப்பாக ஜெயஸ்ரீ 'திருவாளர் திருமதி' நிகழ்ச்சியை நடத்தினார். பங்கேற்ற ஜோடிகள் சந்தித்த சவால்களும், அசத்தலான பதில்களும் நேரம் போனதே தெரியவில்லை. அறுபது நொடி ஆர் யு ரெடி, நடித்துக் காட்டு என்று இன்னும் பல கேளிக்கை நிகழ்ச்சிகளோடு இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது.

ஸ்ரீவித்யா

© TamilOnline.com