ஏப்ரல் 22, 2017 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் ஃபார்மர்ஸ் பிராஞ்சில் அமைந்துள்ள செயிண்ட் மேரீஸ் மாலங்கரா ஆர்த்தடாக்ஸ் தேவாலய வளாகத்தில், டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழாவை நடத்தியது.
இதில் பங்கேற்று நர்த்தகி நடராஜ் அவர்கள் ஓர் இனிய நடன நிகழ்ச்சியை வழங்கினார். பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், திருக்குறள்களை இணைத்து உருவாக்கிய பாடல் ஆகியவற்றுக்கு அவர் நடனமாடினார். "சின்னஞ்சிறு கிளியே" பாடலில் கண்ணனைத் தூங்கவைப்பதாகச் செய்த அவருடைய அபிநயம் பரவசப்படுத்தியது. ஒவ்வொரு பாடலுக்கு முன்னதாகவும் சிறு அறிமுகவுரை ஒன்றை ஆற்றினார். நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எழுதித் திருச்சி லோகநாதன் பாடிய 'இளந்தமிழா' பாடலுக்குச் சிறப்பு நடனம் ஆடினார்.
அடுத்து, வைத்தியலிங்கம்-கோடிலிங்கம் சகோதரர்களின் தமிழிசை சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது. தமிழிசை வரலாறு மற்றும் விவரங்களை வைத்தியலிங்கம் எடுத்துக் கூற, அதற்கான பாடல்களைக் கோடிலிங்கம் பாடினார். சிலப்பதிகாரம், நெடுநல்வாடை, குறுந்தொகைப் பாடல்கள் இவ்வாறு வழங்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில் கண்ணகியை அறிமுகப்படுத்தும் "மாசறு பொன்னே, வலம்புரி முத்தே" பாடலைத் தமிழ் ராகத்தில் கோடிலிங்கம் பாடியபோது அரங்கமே பரவசமானது.
'நளதமயந்தி' நாட்டிய நாடகத்தில் நடித்து நடனமாடிய பிரசன்னாவின் சிறப்பு நடனம் இடம் பெற்றிருந்தது. பாரம்பரிய நடனத்துடன் தொடங்கிய அவர் அடுத்து ஃப்யூஷன் நடனமும் ஆடினார். சிவனுடன் போட்டி போடுவதுபோல் இரு பாத்திரங்களாக மாறி மாறி ஆடினார். இறுதியாகச் சிவன் வெற்றிபெறுவது போலவும், பக்தன் மன்னிப்புக் கேட்பது போலவும் இடம்மாறி ஆடியது சிறப்பாக இருந்தது.
விழாவுக்கு வந்திருந்தவர்களைக் கிருஷ்ணராஜ் வரவேற்றார். புரவலர் பால்பாண்டியன் நினைவுப் பரிசுகள் வழங்கினார். டெனி மற்றும் கோமதி தொகுத்து வழங்கினார்கள். சங்கத்தலைவர் கால்டுவெல் நன்றி தெரிவித்தார்
தகவல்: சின்னமணி படங்கள்: செண்பகராமன் |