'சோ·பியா மெரிட் ஸ்காலர்ஷிப்ஸ் இன்க்.' கலி·போர்னியா மாநிலத்தின் ஒரு லாப நோக்கற்ற தன்னார்வ நிறுவனம். இந்தியாவில் பொறியியல், மருத்துவம் ஆகிய பட்ட வகுப்புகளில் பயிலும் வசதி குறைந்த, திறமையுள்ள மாணவர்களுக்கு நிதியளிப்பது இதன் நோக்கம். தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை நிதியுதவி பெற்ற 68 மாணவர்களில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த மாணவ மாணவியர் இருக்கிறார்கள். கல்விக் கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக்காகப் பொறியியல் மாணவர்களுக்கு 2200 டாலரும் மருத்துவ மாணவர்களுக்கு 2500 டாலரும் வழங்கப்படுகிறது.
2006-07க்கான உதவிக்காகப் பெறப்பட்ட 312 விண்ணப்பங்களிலிருந்து 14 சிறந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னையில் பிப்ரவரி 24, 2007 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தி ஹிந்து செய்தித்தாள் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. என். முரளி அவர்களின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நிதி மாணவர் களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிதியைத் திரட்டுவதற்காக சான்டா கிளாராவிலுள்ள மயூரி உணவகத்தில் ஒரு சிறப்பு விருந்தும், பல்லவி குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நவம்பர் 12, 2006 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சுமார் 100 புரவலர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் $25000 திரட்டப்பட்டதோடு, மேலும் 10 கல்விநிதிக்கான வாக்குறுதிகளும் கிடைத்தன. இந்நிகழ்ச்சியை சோ·பியாவின் இயக்குனர் களான சியாமளாவும் வெங்கடேஸ்வரனும் ஏற்பாடு செய்திருந்தனர். அமெரிக்காவிலுள்ள சுமார் 150 குடும்பங்கள் இந்த இயக்கத்துக்குப் பொருள் தந்து ஆதரிக்கின்றன.
இதற்கு முன்னர் நிதியுதவி பெற்ற பல மாணவர்கள் தங்கப் பதக்கம், உச்ச மதிப்பெண்கள் ஆகியவை பெற்று நல்ல பதவி களைப் பெற்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர். சோ·பியாவின் நோக்கம் அத்தகைய மாணவர் ஒருவர் கூறியதில் தெளிவாகிறது: 'என் வாழ்க்கையில் நீங்கள் தீபம் ஏற்றினீர்கள். நானும் ஒரு தீபமாக இருந்து பல வாழ்க்கைகளில் ஒளியேற்றுவேன்'.
மேலும் விவரங்களுக்கு: www.sophiascholarship.org
தொலைபேசி: 916.485.4238 |