எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்
அத்தியாயம் – 7

அந்த வாரம் சனிக்கிழமை அருணும் ஃப்ராங்கும் சந்தித்துக் கொண்டார்கள். அருணின் அம்மா கீதாவும், ஃப்ராங்கின் அம்மா ரோஸும் முன்னமே பேசிச் சம்மதித்து இருந்தார்கள்.

அருண் வேனில் இருந்து இறங்கியதுதான் தாமதம், ஃப்ராங்க் ஓடிவந்து அருணை ஒரு கரடியைப்போல கட்டிக்கொண்டான்.

"Dude, thanks for coming," என்று ஃப்ராங்க் உற்சாகத்துடன் சொன்னான். "ஹலோ, மிஸஸ் மேகநாத்" என்றபடி அருணின் அம்மாவிடம் கை குலுக்கினான்.

கீதாவிற்கு ஃப்ராங்கின் நடத்தை மிகவும் பிடித்திருந்தது. அம்மாக்கள் இருவரும் பரிச்சயம் செய்து கொண்டார்கள். அவர்கள் தங்களுக்குள் பேச ஆரம்பிக்குமுன், அருணும் ஃப்ராங்கும் விளையாட ஓடிப்போனார்கள்.

"அருண், Monkey Bar விளையாடலாமா டா?" என்று ஃப்ராங்க் கேட்டான். "நிச்சயமா!" என்று துள்ளிக் குதித்தான் அருண்.

அங்கே போனதும், "ஃப்ராங்க், உன்னால என்னை மாதிரி தலைகீழா தொங்க முடியுமா?" என்று அருண் ஃப்ராங்கைச் சீண்டினான்.

"ஓ, கட்டாயமா! நீ என்ன பண்ணினாலும், என்னால இன்னும் மேலே பண்ணமுடியும்," என்று ஃப்ராங்க் பதில் கொடுத்தான்.

"எங்க செய் பார்க்கலாம்?" என்று அருண் மங்கி பாரில் தனது ஆற்றலைக் காண்பித்தான்.

ஃப்ராங்கினால் அருண் அளவு முடியாவிட்டாலும், அவனும் தனது ஆற்றலைக் காட்டினான்.

"ஃப்ராங்க், எங்கே உன்னோட மற்ற நண்பர்கள்? நீ எனக்குப் அறிமுகப் படுத்தறேன்னியே?"

ஃப்ராங்க் சற்று தூரத்தில் கையைக் காட்டி, "அதோ வராங்க பார், ஒரு பீமசேன சேனை மாதிரி. நாங்க எல்லோரும் ஒரு வண்டிக்குள்ளே உட்கார்ந்தா அந்த வண்டி கிளம்பவே கிளம்பாது" என்று சொல்லிச் சிரித்தான். "நான் உன்கிட்ட சொன்னேன் இல்லையா, நாங்க எல்லோரும் குண்டு குண்டா இருப்போம்னு."

ஃப்ராங்க் ஜோக் அடித்தாலும், அதிலிருந்த உண்மையின் வலி அவன் பேச்சில் தெரிந்தது.

"ஃப்ராங்க், உன் நண்பர்கள் எல்லாருமே ஹோம் ஸ்கூலிங்தானா?"

"ஆமாம் அருண், எங்க அம்மா, அப்பா எல்லாரும் ஹோர்ஷியானாவோட பண்ணையிலதான் வேலை செய்யறாங்க. சாதாரண வேலை இல்லை, நாள்பூரா வேலை. அம்மா, அப்பாவை காலைல பார்தோம்னா, சாயந்திரந்தான் மறுபடியும் பார்ப்போம்."

"அப்ப உங்களை யார் பார்த்துக்கறாங்க, ஃப்ராங்க்?"

"பாட்டி, தாத்தா, அத்தை, அப்படீன்னு, ஒருத்தர் மாத்தி ஒருத்தர் எங்களை கவனிச்சுகறது மட்டுமல்லாம, பாடமும் சொல்லிக்கொடுத்து ஹோம் ஸ்கூலிங் பண்றாங்க."

"ஏன் ஃப்ராங்க், உங்களுக்கு சொல்லித்தரவங்க ரொம்ப நல்லா பாடம் சொல்லித் தருவாங்களோ? நீ வகுப்புல பதில் சொன்னதைப் பார்த்து அசந்து போயிட்டேன்."

"ஆமாமாம், அற்புதமா சொல்லிக் கொடுப்பாங்க. நாங்க எல்லாரும் நல்லாவே படிக்கிறோம்."

தீடீர் என்று அருணுக்கு ஞாபகம் வந்தது. "ஃப்ராங்க், அந்த சாப்பாட்டு பாக்கெட்ஸ்?"

"ஓ, அதுவா? நான் கொண்டு வந்திருக்கேன். கிளம்பும்போது, எங்க அம்மாக்குத் தெரியாம கொடுக்கறேன்."

அருணுக்கு ஃப்ராங்க் அவ்வாறு சொன்னது சற்று பிடிக்கவில்லை. அப்பா அம்மாவிடம் எதையும் மறைக்க மறுப்பவன் அருண். மறைப்பது தப்பு என்று நினைத்தான். "ஃப்ராங்க், அம்மாக்குத் தெரியாம பண்ணப் போறேன்னா அது எனக்கு வேண்டாம். அது ரொம்பத் தப்பு".

அருண் மறுத்தது ஃப்ராங்கிற்குப் புரிந்தது. "அருண், அம்மாகிட்டருந்து மறைக்க இப்படிப் பண்ணலை. அவங்க இப்படி கஷ்டப்படறது எனக்குத் தெரியும்னு தெரிஞ்சா, அவங்க மனசு வருத்தப்படும். I don’t want to hurt her feelings, dude! Hope, you understand," அவனுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

"ஃப்ராங்க், சாரிடா. மனசுல பட்டதை சொன்னேன். உன்னைப் புண்படுத்தறதுக்காக இல்லை."

"கவலைப்படாத. கிளம்பறதுக்கு முன்னாடி ஞாபகப்படுத்து. சாப்பாட்டு பாக்கெட்டுகளைக் கொடுக்கறேன். உங்க அம்மா மூலமா, ஹோர்ஷியானா ஏதாவது கலப்படம் பண்ணுதான்னு கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லு."

"முயற்சி பண்றேன்"

"ஹோர்ஷியானா எங்களை ஒரு வெள்ளெலி மாதிரி உபயோகப்படுத்தறாங்க. ஏதோ கலப்படம் பண்றாங்க. நாங்க எதிர்த்துப் பேசமாட்டோம்னு அவங்களுக்கு நல்லாத் தெரியும். அதனாலதான்...." ஃப்ராங்க் சொல்லி முடிக்குமுன், அவனை ஆறுதலாக கட்டிக்கொண்டான் அருண். "அம்மா, எப்படியாவது உதவி செய்வாங்க. கவலைப்படாதே" என்றான்.

நேரம் ஆகிவிடவே இருவரின் அம்மாக்களும் கிளம்பச் சொன்னார்கள். ஐந்து நிமிடம், ஐந்து நிமிடம் என்று இழுத்தடித்தார்கள் அருணும், ஃப்ராங்கும். தூரத்தில் ஓர் உருவம் தெரிந்தது. அவன் கருப்புக் கண்ணாடி அணிந்து, அருணையும், ஃப்ராங்கையும் கண்காணித்துக் கொண்டிருந்தான். விளையாட்டு முடிந்து, வேனில் ஏறும் நேரம், ஃப்ராங்க் கமுக்கமாக அருணிடம் சில சாப்பாட்டுப் பாக்கெட்டுகளைக் கொடுத்தான். அருணும் அதை கமுக்கமாக வாங்கிக்கொண்டான். வீட்டிற்குப் போனவுடன் அம்மாவிடம் அதைப்பற்றி கேட்கவேண்டும் என்று நினைத்தான்.

அம்மாக்கள் விடை பெற்றுக்கொண்டார்கள். அருணும், ஃப்ராங்கும் "பை" சொல்லிக்கொண்டார்கள். இரண்டு வேன்களும் இரண்டு திசைகளில் அங்கிருந்து சென்றன. தூரத்திலிருந்து கண்காணித்துக்கொண்டிருந்த அந்த மர்மமனிதன் தனது செல்ஃபோனை எடுத்து சில பொத்தான்களை அமுக்கினான்.

"சார், நான்தான் பேசறேன். அந்த குண்டுப்பையன் ஏதோ அருண்கிட்ட மறைச்சுக் கொடுத்தான். அருணும், அந்தக் குண்டுப்பையனும் இப்ப ஒரே பள்ளிக்கூடத்துல, அதுவும் ஒரே வகுப்புல படிக்கறாங்க போலிருக்கு. உங்க உத்தரவுக்கு காத்திருக்கேன்." என்றான்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com