சூதாட்டத்தில் பணயமாக வைக்கப்படுகிற பொருளை "இது இன்ன சிறப்புகளை உடையது. இது என்னுடைய பொருள். எனக்கு உரிமையுள்ளது. இதை வைத்தாடுகிறேன்" என்று சொல்லியே ஆடவேண்டும் என்பது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை. இதைத் தருமன் செய்வதைப் பார்க்கமுடிகிறது. பொருள் என்று மட்டுமல்லாமல், தனக்கு உட்பட்ட, உரிய, உடன்படக்கூடிய யாரையும் வைத்தாடும் போதும் இப்படிச் சொல்லித்தான் வைத்திருக்கிறான். நகுலனை வைக்கும்போது "இவன் என்னுடைய தனம் என்று அறி" என்று அறிவித்துவிட்டே வைத்ததைப் பார்த்தோம். அதாவது, எனக்கு உரிமையுள்ளதைத்தான் ஆட்டத்தில் வைக்கிறேன் என்பதை எதிராளியும் மொத்தச் சபையும் அறியும் வண்ணமாக அறிவித்த பின்னரே ஆட்டத்தில் வைக்கமுடியும் என்பதைப் பார்த்தோம். இந்த நடைமுறை நகுலனை வைக்கும் வரையிலே கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது. சகதேவனை வைக்கும்போது இந்த வார்த்தை பேசப்படவில்லை; மாறாக, 'பந்தயத்துக்குத் தகாதவன் ஆனாலும் இவனை வேண்டாதவனைப் போலப் பந்தயம் வைத்தாடுகிறேன்' என்று சொல்லித்தான் தருமன் அவனைப் பணயம் வைக்கிறான். Ownership should not be assumed; it must be announced openly என்பது இந்த நடைமுறையின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.
அப்படியே இருந்தாலும், தருமன் சகதேவனை வைக்கின்றபோது 'இவன் எனக்குரியவன்' என்று சொல்லி வைக்கவில்லை. பீமனையும் அர்ச்சுனனையும் ஆட்டத்தில் வைக்குமாறு தருமனை நைச்சியமாக உந்தியவன் சகுனி. ஆகவே இந்த இருவரும் அப்படிச் சொல்லியபிறகு ஆட்டத்தில் வைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. சூதாட்ட நடைமுறை இங்கேயே பிறழத் தொடங்கிவிட்டது. இந்தப் பிறழ்வுக்குத் தருமனுடைய தருமசங்கடமான நிலைமையும் அப்படிப்பட்ட நிலையில் அவனை மேலும் மேலும் நெருக்கிக் கொண்டிருந்த சகுனியின் சாமர்த்தியமுமே முதன்மைக் காரணங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். "நளன், 'சூதொழிந்தேன்' என்று சொன்னதைப் போல இவனும் சொல்லிருக்கலாமே" என்று கேட்கத் தோன்றும். நளன் ஆட்டத்தில் ஈடுபட்டது சுயவிருப்பத்தின் பேரில்; இங்கே தருமன் ஆடிக்கொண்டிருப்பது, திருதிராஷ்டிரன் சபையைக் காண வருமாறு அழைத்ததனாலும்; அந்த அழைப்பிலேயே சூதாட்டத்தில் ஈடுபடுமாறு மறைமுக அழைப்பு இருந்ததனாலும். இவற்றோடு, 'பெரியவர்கள் என்ன சொன்னாலும் தட்டமாட்டேன்' என்று தருமபுத்திரன் மேற்கொண்டிருந்த சபதம் ஏற்படுத்திய நிர்பந்தங்களும் நளனுக்கு இருந்திருக்கவில்லை. ஆகவே நளனால் சட்டென்று ஆட்டத்தை நிறுத்த முடிந்தது.
நிறுத்துங்கள் என்று திருதிராஷ்டிரன் சொன்னாலொழிய ஆட்டத்தை நிறுத்தமுடியாத நிலையில் தருமன் இருந்தான். இதில் சூழ்நிலை தந்த நெருக்கடியால் தன்னிலை மறந்து ஆட்டத்தில் ஈடுபட்டது தருமனுடைய தவறுதான் என்றாலும், அவ்வளவு பெரிய சபையில் விதுரன் மட்டுமே திரும்பத் திரும்ப 'சூதாட்டத்தை நிறுத்துங்கள்' என்று மன்றாடிக் கொண்டிருந்தாலும், விதுரன் சொன்னது தருமனிடத்தில் அல்ல. சூதாட்டத்தை நிறுத்தச் சொல்லி உத்தரவிடுமாறு திருதிராஷ்டிரனிடத்தில்தான் கோரிக்கை வைக்கிறான். இதை பாரதி வாக்கில் பார்த்தால்,
தம்பி மக்கள் பொருள் வெஃகு வாயோ, சாதற் கான வயதினில் அண்ணே? நம்பி நின்னை யடைந்தவர் அன்றோ? நாத னென்றுனைக் கொண்டவர் அன்றோ? எம்பி ரானுளங் கொள்ளுதி யாயின் யாவுந் தான மெனக்கொடுப் பாரே! கும்பி மாநர கத்தினி லாழ்த்தும் கொடிய செய்கை தொடர்வதும் என்னே?
"அண்ணா! சாகவேண்டிய வயதிலே தம்பியின் மக்களுடைய பொருள்மீது பேராசை கொள்ளலாமா? அவர்கள் உன்னையே நம்பிச் சரண்புகுந்தவர்கள் அல்லரா? வேண்டுமானால், 'கொடு' என்று கேட்டாலே அத்தனையையும் கொடுத்துவிடுவார்களே! கும்பி என்னும் நரகத்தில் வீழ்த்தக்கூடிய இந்தக் கொடிய செய்கையை ஏன் இன்னமும் தொடர்கிறீர்கள்" என்று அண்ணனைத்தான் விதுரன் கேட்டுக்கொண்டிருந்தான். அங்கே ஆட்டத்தை நிறுத்தச் சொல்லித் தடுக்கும் வலிமை அவனுக்கே இருந்தது; மனம்தான். இல்லை. விதுரன் ஒருவனைத் தவிர்த்து பீஷ்மர், துரோணர் உள்ளிட்ட அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும், 'சூது போதும்; இத்தோடு நிறுத்துங்கள்' என்று எதிர்க்காததையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆகவே தருமனுக்குப் 'பெரியப்பா சொல்லை மீறாமல் இருக்க வேண்டிய கட்டாயம்' ஒருபக்கமும், 'அடுத்த ஆட்டத்திலாவது இழந்த அனைத்தையும் மீட்டுவிட மாட்டோமா' என்ற பதற்றம் இன்னொரு பக்கமும் இருந்தன. தம்பியரையும் வைத்து இழந்ததுமே இந்த நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்துவிட்டது. ஆகவே தன்னையே வைத்திழந்தான்.
அப்படியானால் தம்பியர்கள் தருமனுடைய உடைமையா என்று கேட்கத் தோன்றும். நான்கு தம்பியரும் இதனை ஒப்புக் கொள்கிறார்கள். திரெளபதியைப் பந்தயம் வைத்ததைப் பற்றி மனம்கொதித்துப் பேசும்போது, "..... அநேக அரசர்கள் காணிக்கையாகக் கொண்டுவந்து கொடுத்த உயர்ந்த பொருள்கள், ரத்னங்கள், வாகனங்கள், கவசங்கள், ஆயுதங்கள் முதலியவையும், ராஜ்யமும், உமது சரீரமும் நாங்களும் எதிரிகளால் சூதினால் எடுத்துக்கொள்ளப் பட்டோம்; எனக்குக் கோபம் உண்டாகவில்லை. ஏனெனில் எங்களுடைய எல்லாவற்றிற்கும் நீர்தாம் அதிகாரி" என்று பேசுகிறான். இப்படித்தான் நான்கு தம்பியர்களும் நினைத்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களைச் சூதில் வைத்ததுபற்றி அவர்களுக்கு எந்த மறுப்பும் இருக்கவில்லை. இதைத்தான் பாரதி, "நாட்டை யெல்லாம் தொலைத்தாய் - அண்ணே//நாங்கள் பொறுத்திருந்தோம்.//மீட்டும் எமையடிமை - செய்தாய்//மேலும் பொறுத்திருந்தோம்" என்று வியாசரை எதிரொலிக்கக் காண்கிறோம்.
சரி. அப்படியானால் மனைவியைப் பந்தயம் வைத்ததை எப்படி ஏற்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது. காலகாலமாக விவாதிக்கப்பட்டு வரும் வினா இது. பல பெரியோர்களும் அவரவர்களுக்குத் தோன்றிய நியாயங்களை, வாதங்களை, மறுப்புகளை தருமனை ஆதரித்தும் எதிர்த்தும் சொல்லியிருக்கிறார்கள். இந்த உணர்ச்சிமயமான கட்டத்திலே தராசை நேராகப் பிடிப்பது யாராலும் இயலாத ஒன்று. என்னால் இயன்ற வழியிலே வியாசர் காட்டுகின்ற காட்சிகளின் அடிப்படையில் துலாக்கோலைப் பிடிக்க முயல்கிறேன்.
தங்களைப் பந்தயமாக வைத்ததைத் தம்பியர் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்காக, மனைவியைப் பந்தயமாக வைப்பதா? மனைவி என்ன உடைமையா? பாரதி பாஞ்சாலி சபதத்தில் சொல்வதைப் போல பீஷ்மர் "ஒருவன்தன் தாரத்தை//விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம். "தன்னை அடிமையென விற்றபின்னுந் தருமன் நின்னை அடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு" என்பதை ஒத்துப் பேசினாலும் அவர் பேச்சிலே தடுமாற்றம் தென்படுகிறது. "தருமபுத்திரன் செய்வது தருமமாகத்தான் இருக்கவேண்டும்" என்றெல்லாம் பேசுகிறார்.
ஆனால் பாஞ்சாலி மிகத்தெளிவாக இருக்கிறாள். தன்னை ஆட்டத்தில் வைத்தது ஏன் செல்லாது என்பதை வெட்டொன்று துண்டு இரண்டாக விளக்குகிறாள். ஒன்று கவனிக்கவேண்டும். தருமன் செய்தது தவறு என்று பேசவில்லை. அவனுக்கு ஏற்பட்டிருந்த நிர்பந்தத்தைத் தெளிவாகவே சுட்டிக் காட்டுகிறாள். 'மாட்டை வாங்கினால் கன்றையும் சேர்த்து வாங்கியதாகத்தான் பொருள்' என்று கர்ணன் வாதிடும்போது, 'அப்படியானால் என்னை வெல்வதற்காக இன்னொரு ஆட்டம் ஆடியிருக்க வேண்டியதில்லையே. நீங்களெல்லோரும் என்னை வைக்குமாறு இன்னொரு ஆட்டம் ஆடச் சொல்லி வற்புறுத்தியதிலேயே, என் கணவர்கள் அடிமைப்பட்டதும் நானும் அடிமையாகிறேன் என்பது பொய் என்று வெளிப்படையாகத் தெரிகிறதே' என்று மடக்குகிறாள்.
இதையெல்லாம்விட, தருமன் ஏற்கெனவே அடிமையாகி இருந்தான். அடிமைக்கு உடைமை இல்லை என்பதால் அவன் வைத்தாடியது எதுவாக இருந்தாலும் செல்லாது என்பதே உண்மை. இதையெல்லாம்தான் பாஞ்சாலி கேட்கப் போகிறாள். அது ஒருபுறமிருக்க, நகுலனை வைக்கும்போதாவது 'இவன் என்னுடைய தனம் என்று அறி' என்று சொல்லி ஆடிய தருமன், பாஞ்சாலியை வைக்கும்போது இவ்விதமாகச் சொன்னானா? பாஞ்சாலியை ஆட்டத்தில் வைக்கும்போது தருமன் என்ன சொல்லி வைத்தான்? இந்தச் சொற்களில் எதையேனும் சொன்னானா? பார்ப்போம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |