அ.கொ.இ.கொ. (அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்)
அமெரிக்க அவமானம்

CBS, MSNBC உள்பட 60க்கும் மேற்பட்ட வானொலி ஒலிபரப்புகளில் வெளிவந்தது 'Imus in the morning' என்ற நிகழ்ச்சி. இதை நடத்தும் டான் ஐமஸ், 'ஷாக் ஜாக்கி' என்று கருதப்பட்டார்; அதாவது அதிர்ச்சிகரமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதும், அரசியல்வாதிகளையும் மற்ற பிரபலங் களையும் கிண்டல் அடிப்பதும் இவரது நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். கிட்டத்தட்ட 30 வருடங்களாக இவரது நிகழ்ச்சி பல வானொலி அலைவரிசைகளில் ஒலிபரப்பாகி, உருமாறி வளர்ந்திருக்கிறது. இதற்கு முன் பலமுறை பிரச்சினைகளில் மாட்டி இருந்தாலும், நகைச்சுவை என்ற பெயரில் ரட்கர்ஸ் பல்கலைக் கழக பெண்கள் கூடைப் பந்தாட்டக் குழுவைப் பற்றிய இவரது விமர்சனம் அவருக்கே ஒரு பெரிய அவமானமாக முடிந்தது.

இந்த முறை பிரச்சினை பல வடிவங்களில் விஸ்வ ரூபம் எடுத்தது. முதலில் அவரது விமர்சனம் மிகவும் தரக்குறைவானது (அவர் என்ன சொன்னார் என்பதை இங்கு மீண்டும் குறிப்பிடக்கூட எனக்கு விருப்பமில்லை). அரசியல்வாதியையோ, முழுநேர விளையாட்டு வீரர்களையோ பற்றி அவர் குறிப்பிட்டிருந் தால் ஒருவேளை இவ்வளவு தாக்குதல்களுக்கு அவர் உள்ளாகி இருக்க மாட்டார்.

கல்லூரி மாணவிகளை தரக்குறைவாக பேசியது அவர் செய்த மற்றொரு தவறு. அதிலும் வெள்ளை அமெரிக்கரான அவர், ஆ·ப்ரிக்க அமெரிக்கர்களான மாணவிகளைத் தாக்கிப் பேசியது பெரிய குற்றமாகப் போய்விட்டது. கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் ஜெஸ்ஸி ஜாக்ஸன், ஆல் ஷார்ப்டன் முதல் பராக் ஓபாமா, ஹில்லரி கிளிண்டன் வரை அனைவரும் அவரை உலுக்கித் தள்ளிவிட்டார்கள்.

'இவர்மேல் ஏன் பாய்கிறீர்கள்? இதைவிட மோசமான வரிகள் ராப் பாடல்களில் இருக்கின்றன. இந்தப் பாடல்களை ஆ·ப்ரிக்க அமெரிக்கர்கள் பாடுவதால் அதைக் கண்டு கொள்வதில்லை. டான் ஐமஸ் வெள்ளை அமெரிக்கர் என்பதால் அவரைத் தாக்கு கிறீர்கள்' என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று வானொலி நிலையங்கள் விழித்தன. CBS-ம், MSNBC-யும் முதலில் தற்காலிகமாக இந்த நிகழ்ச்சியை நிறுத்த முடிவு செய்தன. ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பிரபலமான விளம்பரதாரர்கள் தங்கள் ஆதரவை திரும்பப்பெற ஆரம்பித்தவுடன் இந்த நிகழ்ச்சியை நிரந்தரமாக நீக்க முடிவு செய்தன. ஆக அவரது நடத்தையும், இனப் பிரச்சினையும் முக்கியமல்ல, விளம்பரங்களில் வரும் வருமானம் மிக முக்கியம் என்று இந்த நிறுவனங்கள் பறைசாற்றி உள்ளன.

நகைச்சுவை என்ற பெயரில் சொல்லும் சொற்கள் பிறர் மனதை எப்படிப் புண் படுத்தும் என்று அறியாமல் பேசியிருக்கிறார் ஐமஸ். தவறை உணர்ந்ததாகத்தான் தோன்றுகிறது. ரட்கர்ஸ் குழுவினரை 40 நிமிடங்கள் தனியாகச் சந்தித்துப் பேசி மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

லக்ரோஸ் நிரபராதிகள்

பலருக்கும் பரிச்சயமில்லாத விளையாட்டு லக்ரோஸ். டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லக்ரோஸ் விளையாட்டு வீரர்களான மூன்று மாணவர்கள் ரீட் செலிக்மான், டேவிட் இவான்ஸ், காலின் ·பின்னர்டி ஆகியோர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப் பட்டுள்ளனர். அவர்கள்மேல் இருந்த குற்றச் சாட்டு? ஒரு பார்ட்டியில் தன்னைக் கற்பழிக்க முயன்றதாக ஒரு மாணவி அவர்கள்மேல் குற்றம் சாட்டியிருந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து வந்த கேஸ் அவர்களுக்குச் சாதகமாக முடிந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் வாக்குமூலங்களில் இருந்த முரண்பாடும், மரபு அணு சோதனையும், மாணவர்களை நிரபராதிகள் என்று நிரூபித்து இருக்கின்றன.

இந்தக் கேஸ் தொடங்கிய பொழுது கல்லூரி மாணவர்களின் பொறுப்பு இல்லாத மோச மான நடத்தைகள் பற்றியும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தங்களது சிறப்புச் சலுகைகளை தவறான வழிகளில் பயன்படுத்துவதைப் பற்றியும் சூடான விவாதங்கள் நடந்தன. அதிலும் முக்கியமாக, குற்றம் சாட்டிய பெண் கருப்பர் என்பதும், மூன்று விளையாட்டு வீரர்களும் வெள்ளை அமெரிக்கர்கள் என்பதும் இந்த விவாதத்தை மேலும் விரிவு படுத்தின.

ஆரம்பத்தில் இருந்து தாங்கள் குற்றமற்றவர் கள் என்று கூறி வரும் இந்த மாணவர்கள் விடுதலை அடைந்தது மட்டுமல்ல; இவர்கள் மேல் கேஸ் பதிவு செய்த டர்ஹாம் மாவட்ட வழக்கறிஞர் மைக்கேல் நி·பாங் மீது, நடுநிலைமை தவறியதற்காக வடக்கு கரோலினா பார் அசோசியேஷன் நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

வளைகுடா ரசிகர்களின் இரட்டை மகிழ்ச்சி

வளைகுடாப் பகுதியில் அனைவர் கவனமும் ஷார்க்ஸ், வாரியர்ஸ் பக்கம் திரும்பி இருக்கிறது. ஹாக்கி அணியான ஷார்க்ஸ் தொடர்ந்து இரண்டாம் வருடமாக playoff போட்டிகளுக்கு முன்னேறி இருக்கிறது.

முதற் சுற்றில் நாஷ்வில்லைத் தோற்கடித்து, அரைச்சுற்றில் டெட்ராய்ட்டுடன் விளையாட இருக்கிறது. ஹாக்கி ரசிகர்கள் இந்த வருடம் ஷார்க்ஸ் இறுதிவரை முன்னேறும் என்று மிக திடமான நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

ஆனால் NHL மேற்குப் பிரிவில் இருக்கும் எட்டுக் குழுக்களும் மிகவும் திறமையானவை. அதனால் ஷார்க்ஸ¤க்குத் தொடர்ந்து கடுமையான போட்டிகள் காத்திருக்கின்றன.

Playoff போட்டிகளில் மேற்குப் பிரிவில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் எந்த அணியும் மிகவும் களைத்து இருக்கும்; இறுதி ஆட்டங்களில் சிறப்பாக ஆடுவார்களா என்று சந்தேகிக்கிறார்கள் சில விமர்சகர்கள். விளையாட்டு வீரர்கள் தயாராக இருக்கிறார் களோ இல்லையோ, ரசிகர்கள் துடிப்புடன் காத்திருக்கிறார்கள். Tank என்ற பெயரில் அழைக்கப்படும் ஷார்க்ஸ் விளையாடும் H.P. Pavilion அரங்கில் அனைத்து ஆட்டங் களுக்கான அனுமதிச் சீட்டுகளும் விற்றுப் போய்விட்டன.

1994-க்குப் பிறகு 13 ஆண்டுகள் கழித்து கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் கூடைப்பந்துக் குழுவும் playoff போட்டிகளுக்கு முன்னேறி யிருக்கிறது. முதற் சுற்றில் டல்லாஸ் மாவரிக்ஸ் குழுவுடன் மோதுகிறது.

டல்லாஸ் குழு NBA ஆட்டங்களில் சிறந்த குழுவாக முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் playoff ஆட்டங்களில் முதல் போட்டியில் வாரியர்ஸ் வென்று டல்லாஸ¤க்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். டல்லாஸ் குழுவின் கோச் ஆவரி ஜான்ஸன் சிறந்த பயிற்சியாளராக மிகக் குறைந்த காலத்திலேயே தனது பெயரை நிலை நாட்டியிருப்பவர். வாரியர்ஸ் குழுவின் பயிற்சியாளர் டான் நெல்சன், ஆவரி ஜான்ஸன் விளையாடிய காலத்தில் அவருக்கும் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், டல்லாஸ் சுலபமாக வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு. இது தற்காலிகத் தோல்விதான். தேவையான சிறிய மாற்றங்களைத் தனது குழுவில் செய்து இது போன்ற தடங்கல் களைச் சுலபமாக சமாளிப்பவர் ஆவரி ஜான்ஸன் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

சிகாகோவுக்கு வாழ்த்துக்கள்

டிசம்பர் மாத இதழில் 2016 ஒலிம்பிக் போட்டிகளைக் கொண்டுவர சிகாகோவும், லாஸ் ஏஞ்சலஸ¤ம் போட்டியிடுவதைப் பற்றிய விவரங்களை அலசி இருந்தோம். சிகாகோ இதுவரை ஒலிம்பிக் ஆட்டங்களை நடத்திய தில்லை. லாஸ் ஏஞ்சலஸ் 1984-ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி இருக்கிறது.

அமெரிக்க ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் பீட்டர் ஊபரோத் 2016-ல் போட்டிகளை நடத்த சிகாகோவை தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவித்தார். சிகாகோ அடுத்த கட்டமாக டோக்கியோ, ரோம், மட்ரிட், ரியோ டி ஜெனிரோ போன்ற நகரங்களுடன் போட்டியிட இருக்கிறது. அந்த முடிவை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எடுக்கும். அதற்கு இன்னும் நிறைய அவகாசம் இருக்கிறது. 2009-ல் கோபன் ஹேகனில் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு கூடும்போதுதான் அது தீர்மானிக் கப்படும். அடுத்த சுற்றிலும் வெற்றிபெற்று ஒலிம்பிக்ஸை அமெரிக்காவுக்குக் கொண்டுவர சிகாகோவுக்கு வாழ்த்துக்கள்.

இவருக்கு களிமண் பிடிக்கும்!

களிமண் தள டென்னிஸ் போட்டிகளில் தனக்கு நிகரில்லை என்று நிரூபித்திருக்கிறார் ர·பேயல் நடால். சமீபத்தில் நடந்து முடிந்த மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் ஓப்பனில் ராஜர் ·பெடரரைத் தொடர்ச்சியாக நான்காவது முறையாக களிமண் தளத்தில் தோற்கடித் திருக்கிறார். இதோடு 67 தொடர் வெற்றி களைக் களிமண் தளத்தில் பதித்திருக்கிறார் நடால். அவரிடம் தொடர்ச்சியாக தோற்பதைப் பற்றிக் கேட்டபோது, ராஜர் 'நடாலிடம் தோற்பதைப் பற்றி கவலைப்படவில்லை. இதுவே, நான் வேறு வீரர்களிடம் தோற்றிருந்தால் மோசமாக இருந்திருக்கும்' என்கிறார். இந்த வருடம் இண்டியன் வெல்ஸிலும், மயாமியிலும் நடந்த மாஸ்டர்ஸ் சீரிஸ் ஓப்பன்களில் கியர்மோ கான்யாஸிடம் தொடர்ந்து தோற்று அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார் ராஜர். அவை ராஜருக்குப் பிடித்த தளமான ஹார்ட் கோர்ட் போட்டிகள் என்பது குறிப்பிடத் தக்கது. இன்னும் ஒரு மாதத்தில் ·பிரெஞ்ச் ஓப்பன் வரவிருக்கும் நிலமையில், ராஜர், நடால் என்ற புதிரை அவிழ்ப்பாரா என்ற கேள்வி அனைத்து டென்னிஸ் ரசிகர்கள் மனதிலும் நிற்கிறது. அதற்கு முன்னால் இத்தாலிய ஓப்பனில் இவர்கள் இருவரும் மீண்டும் மோத வாய்ப்பு இருக்கிறது.

விடை கொடுப்போம், லாராவுக்கு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணித் தலைவரும், மிகச் சிறந்த கிரிக்கெட் வீரருமான பிரையன் லாரா கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட 16 வருடங்களாக வெஸ்ட் இண்டீசுக்காக விளையாடி வரும் லாரா, கிரிக்கெட்டில் பல சாதனைகளைச் செய்துள்ளார். 1980-களில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் மீது செலுத்திய ஆதிக்கம் இவர் காலத்தில் இல்லாததும், வெஸ்ட் இண்டீசில் நடக்கும் உலகக் கோப்பையில் வெற்றி பெறாததும் இவர் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறாததும் குறைகள்தாம். ஆனால் மிகச் சிறந்த பாட்ஸ்மேன்களில் ஒருவராக இவரது ஆட்டம் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சேசி

© TamilOnline.com