ஃபிப்ரவரி 5, 2017 அன்று பாஸ்டன் அருகேயுள்ள நாஷுவா நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தில் ஸ்ரீ பைரவசுந்தர சிவாசாரியார் தலைமையில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை, பிரதிஷ்டாங்க பூஜை, ஆவஹந்தி ஹோமம், ஏகாதச ருத்ரம், பிராண பிரதிஷ்டை, கலச அபிஷேகம், கல்யாண உத்சவம் என்று பல விசேஷச் சடங்குகள் அடங்கிய இந்த விழாவில் அன்பர்கள் பக்தியுடன் கலந்துகொண்டனர்.
ஆலய நிறுவனர் திரு. வீரமணி ரங்கநாதன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய ஆலய விரிவாக்கத் திட்டம் வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்ததை அறிவித்தார். இந்தக் கட்டத்தில் ஸ்ரீ காஞ்சி பரமாசாரியார், ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி, நவக்கிரகங்கள் ஆகியோருக்கு மூன்று புதிய சன்னிதிகள் கட்டப்பட்டன. நகரச் சட்டங்களுக்கு உட்பட்ட அழகான ஹோமகுண்டமும் நிறுவப்பட்டது. இந்த விக்கிரங்கள் தமிழ்நாட்டின் பிரபல சிற்பக் கலைஞர் திரு. ராதாகிருஷ்ண ஸ்தபதி அவர்களால் இந்த ஆலயத்துக்கெனவே செதுக்கப்பட்டன. நவக்கிரக சன்னிதியில் உள்ள கிரகங்கள், தம்பதி மற்றும் வாகன சமேதராகக் காட்சி தருவது சிறப்பு.
நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயம் இறை வழிபாட்டுடன் சமூக, கலாசார சேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த மாதம் நியூ ஹாம்ப்ஷயர் மாநில சட்டமன்றத்தில் இந்துமுறையில் வழிபாடு நடத்த ஆலயத்திற்கு விசேஷ அழைப்பு வந்திருக்கிறது. மூன்றாவது வருடமாக அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு (veterans) நிதி திரட்ட 'Bike for Dharma – Team Maruti' என்ற பதாகையின் கீழ் சைக்கிள் பேரணியில் பங்கேற்க இருக்கிறது. வறியோர்க்கு உணவளிக்கும் Project Bread நிறுவனம் நடத்தும் 'Walk for Hunger' என்ற பாஸ்டன் நடை உலாவில் பங்குபெற இருக்கிறது. சென்ற ஆண்டு சென்னை வெள்ள நிவாரண நிதிக்குச் சுமார் $20,000 நிதி திரட்டி உதவியது.
குடமுழுக்கு விழா: goo.gl/Qe9NuG சிவராத்திரி விழா: goo.gl/3oksE1
அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, நாஷுவா, நியூ ஹாம்ப்ஷயர் |