TNF லாங் ஐலண்ட்: காதலர் தினம்
ஃபிப்ரவரி 12, 2017 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை லாங் ஐலண்டு (நியூ யார்க்) கிளை காதலர் தினத்தைக் கொண்டாடியது. அதில் அறுபதுக்கும் மேற்பட்ட கணவன், மனைவியர் பங்கேற்றனர். மதியம் 12 மணிக்குக் கொறிப்புத் தீனியுடனும் குதூகலமான உரையாடலுடனும் நிகழ்ச்சி தொடங்கியது.

பின்னர் டாக்டர் சந்திர குப்தா சில நிமிடங்கள் பேசினார். பின்னர் பேசிய தமிழ் நாடு அறக்கட்டளை கிளையின் துணைத்தலைவர் திரு. சோமலெ சோமசுந்தரம், அறக்கட்டளையின் தொண்டுகள் பற்றி விவரித்தார். அடுத்து முன்னாள் நியூ யார்க் கிளைத் தலைவர் திருமதி. ப்ரஹஷிதா, 99 பள்ளிக்குழந்தை தத்தெடுக்கும் திட்டம்பற்றி உருக்கமாகப் பேசினார். உடனே 4 பேர் முன்வந்து கொடையினை உறுதிசெய்தனர்.

அறுசுவை உணவுக்குப் பின்னர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 'சதர்ன் ஸ்பைஸ்' உரிமையாளர் டோஃபூ சமையல் செய்முறை செய்து காட்டினார். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப டாக்டர். ராமசந்திரன் காதலர் தினப் பாட்டுக்களைத் தொகுத்து வழங்கினார்.

டாக்டர். சந்திரகுப்தா,
நியூ யார்க்

© TamilOnline.com