KKSF அரோரா: ஸ்ரீ மஹாருத்ரம்
2017 ஜூன் 9 முதல் 11 வரை ஸ்ரீ ஷீர்டி சாய் மந்திரில் (அரோரா, இல்லினாய்) ஸ்ரீ மஹாருத்ர பாராயணத்தைக் காஞ்சி காமகோடி சேவை அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. இதில் 1331 முறை ஸ்ரீருத்ரம் ஜபிக்கப்படும். நிகழ்ச்சியின் அங்கங்களாக, மஹன்யாஸ பூர்வாங்க ஸ்ரீருத்ர ஜபம், ஸ்ரீருத்ர ஹோமம், காஞ்சி சங்கராசாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சஹஸ்ரதின சதாபிஷேக மஹோத்ஸவ பூர்த்தி விழா

ஆகியவை நடைபெறும். இதில் 125க்கும் மேற்பட்ட வேதவித்துக்கள் பங்கேற்பர். நூற்றுக்கணக்கான பெண்கள் ஒருங்கிணைந்து லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வர். குழந்தைகள் பங்கேற்கும் சுலோகம் கூறுதல், பஜனை பாடுதல் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் உண்டு. தவிரச் சிறப்பு விருந்தினரின் உரைகள், வேத பாராயணம் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காஞ்சி காமகோடி சேவை அறக்கட்டளை 1990ல் துவங்கப்பட்ட 501 (C) (3) வரிவிலக்குப் பெற்ற லாபநோக்கற்ற சேவை அமைப்பாகும். சமூகநலப் பணிகள், பீடத்துடன் இணைந்த கல்விப்பணி சார்ந்த திட்டங்கள், கோவில்களைப் புதுப்பித்தல், வேத பாடசாலைகளை நிறுவிப் பராமரித்தல் ஆகிய பணிகளையும் நிறுவனம் செய்துவருகிறது. KKSF Midwest Chapter 2006ல் சிகாகோவில் துவங்கப்பெற்றுச் செயல்படுகிறது. உலகநலம், நல்லிணக்கம், அமைதி இவற்றை நோக்கங்களாகக் கொண்டு 2009ல் மஹாருத்ரம் முதன்முறையாகச் சிகாகோவில் மிகப்பெரிய அளவில் நடந்ததைத் தொடர்ந்து, அண்டை மாநிலங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அறக்கட்டளை வருடந்தோறும் சங்கர ஜயந்தி, ஆராதனை விழாக்களையும் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. நிகழ்ச்சிகள் ஸ்ரீமடத்தின் முறைகளைப் பின்பற்றித் தென்னிந்திய பாரம்பரியப்படி ஆண்கள் மட்டுமன்றிப் பெண்கள், குழந்தைகள் என்று எல்லோரும் குடும்பத்துடன் பங்கேற்கும் வண்ணம் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் விரும்பி அளிக்கும் காணிக்கையும், முயன்று திரட்டும் நிதியும் இதற்குப் பக்கபலமாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு: www.kksfmidwest.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com