மகாபெரியவர் மணிமண்டபம்: அருணா சாய்ராம் இசை நிகழ்ச்சி
ஏப்ரல் 22, 2017, சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு நியூ ஜெர்சி ஸ்ரீ குருவாயூரப்பன் கோவிலில் (31 Wooleytown Rd, Morganville, NJ) ஸ்ரீ மகாபெரியவர் மணிமண்டபத்துக்கு நிதி திரட்டும் முகமாகத் திருமதி. அருணா சாய்ராம் அவர்கள் 'சங்கரானந்தம்' என்ற இசை நிகழ்ச்சி ஒன்றை வழங்குவார்கள்.

தமிழகத்தில் ஓரிக்கையில் அற்புதமான மணிமண்டபம் ஒன்று மகாபெரியவருக்காக எழுப்பப்பட்டுள்ளது. அதனை முன்னோடியாகக் கொண்டு, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இந்த மணிமண்டபம் எழும்பிக் கொண்டிருக்கிறது. ஏழு வருடங்களாக ஓரிக்கை மணிமண்டபத்தில் இருந்த பெரியவாளின் பஞ்சலோக விக்ரஹம், நியூ ஜெர்சி மணிமண்டபத்திற்கு மூலவராக வந்துள்ளதும், மூன்று வருடங்களுக்கு முன்பே, பாரதத்தில் கர்பக்கிரஹமாக அமையவிருந்த சன்னிதி, நியூ ஜெர்சி மணிமண்டபத்திற்கு அருளப்பட்டுள்ளதும் மிகப்பெரிய பாக்கியம் ஆகும்.

புதுப்பெரியவர் இந்தத் திருப்பணிக்காக ஸ்ரீமுகம், திருப்பாதுகை ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். மேலும், முதல் செங்கல்லை மகாபெரியவர் அதிஷ்டானத்தில் வைத்து ஆசீர்வாதம் செய்து கொடுத்துள்ளார். பாலபெரியவர் அனுக்ரஹ பாஷணம் தந்தருளினார். காஞ்சி காமகோடி சர்வக்ஞ பீடத்தை ஸ்தாபித்த ஆதிசங்கரர் முதல் எழுபது சங்கராசார்யார்களின் திருவுருவங்களைத் தஞ்சாவூர் பாணி ஓவியங்களாக இந்த மணிமண்டபத்தில் வைக்கப்படவுள்ளதும் ஒரு சிறப்பு.

இந்தத் திருப்பணிக்கு உதவ அமெரிக்காவின் பல மாகாணங்களில் பாதுகா ருத்ராபிஷேகம், பிரசாத சேவை, 'Periyava Times' என்ற பத்திரிகை போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. திரு. ராஜேஷ் வைத்யா, திரு. திருவாரூர் வைத்தியநாதன், திருமதி. சுதா ரகுநாதன், திரு. விக்கு விநாயக்ராம் மற்றும் அவரது மகன்கள், திரு. கணேஷ் மற்றும் திரு. குமரேஷ் ஆகியோர் தமது திறமைகளைத் திருப்பணி நிதி சேகரிக்க அர்ப்பணித்தார்கள். தற்போது திருமதி. அருணா சாய்ராம் 'சங்கரானந்தம்' இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்கள்.

இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு பக்தர்கள் திருப்பணிக்கு சக்திக்கேற்ப வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சரவணன் ஸ்ரீனிவாசன்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com