தெரியுமா?: கனடா: 'தமிழர் தகவல்' ஆண்டு விழா விருதுகள்
கனடாவின் மூத்த தமிழ் இதழான 'தமிழர் தகவல்' சஞ்சிகையின் 26வது ஆண்டு பூர்த்தி வைபவமும், விருதுகள் வழங்கும் நிகழ்வும் ஃபிப்ரவரி 19ம் திகதி ரொறன்ரோ நகர சபையின் அங்கத்தவர் சபாபீடத்தில் நிகழ்ந்தேறியது.

விழாவில், 70வரையான துறைசார் பிரமுகர்களின் கட்டுரைகளைக் கொண்ட 'இளவேனில் சுவடு' ஆண்டுமலர் வெளியிடப்பட்டது. அத்துடன் எட்டுச் சாதனையாளர் விருதுகளும் தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. கனடா தமிழ் மருத்துவ அமைப்பின் தலைவர் டாக்டர் அ. சண்முகவடிவேல் தலைமையில் முதலாவது அமர்வு நடந்தது. ஒலிபரப்பாளர் சக்தி பரமலிங்கம், நடனக்கலைஞர் ஐஸ்வரியா சந்துரு, ஆலய பிரதமகுரு விஜயகுமார குருக்கள், மார்க்கம் நகரசபை உறுப்பினர் லோகன் கணபதி ஆகியோர் இவ்வமர்வில் பங்குபற்றினர். இளவேனில் சுவடு ஆண்டுமலரைத் தமிழிலக்கியத் தோட்டத்தின் அமைப்பாளரான எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். புலம்பெயர்ந்த தமிழரின் கால் நூற்றாண்டுக் கால வரலாற்றை இம்மலர் பதிவு செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சஞ்சிகையின் உதவி ஆசிரியர் திரு. சசிகரன் பத்மநாதனிடமிருந்து மூத்த எழுத்தாளர் திரு. எஸ். ஜெகதீசன் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது அமர்வு விருதுகள் வழங்கும் நிகழ்வாக இடம்பெற்றது. ரொறன்ரோ நகரசபைக் கவுன்சிலர் திரு. நீதன் சண் தலைமை தாங்கினார். ரொறன்ரோ நகரசபைக்குத் தெரிவான முதலாவது தமிழர் இவர். தொடக்க உரையைத் 'தமிழர் தகவல்' முதன்மை ஆசியர் திரு. எஸ். திருச்செல்வம் நிகழ்த்தினார். பிரதம விருந்தினராக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் கிளென் மரேயும், சிறப்பு விருந்தினராக ரொறன்ரோ நகரசபை பிரதிமேயர் பாம் மக்கொனாலும் பங்கேற்று உரையாற்றினர். இவ்வருட விருதுகளைப் பெற்றவர்கள்: திருமதி. கிருபாநிதி ரட்ணேஸ்வரன் (நடனம்), திருமதி. கல்யாணி சுதர்சன் (இசை), திரு. தங்கராஜா சிவபாலு (தமிழ் இலக்கியம்), திரு. மயில்வாகனம் ஜெகநாதன் (வணிகத்துறை), திரு. வீரசிங்கம் சிறீகாந்தன் (வணிகத்துறை), திரு. மகேசன் அரவிந்தன் (வாத்தியக்குழு), செல்வி ஆரணி ஞானநாயகன் (மாணவர்).

வாழ்நாள் சாதனையாளர் விருதை அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தின் பேராசிரியர் கலாநிதி அஜித் யோகநாதன் பெற்றுக் கொண்டார். ஈழத்தமிழரான இவர் இருதய நோயியல் பற்றிய ஆய்வில் சர்வதேச மட்டத்தில் பல சாதனைகளை நிகழ்த்திப் பல விருதுகளையும் பட்டங்களையும் கடந்த நாற்பது ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட முன்னணிப் பேராசிரியர். சட்டவாளர் யசோ சின்னத்துரை, அனோஜினி குமாரதாசன், குயின்ரஸ் துரைசிங்கம் ஆகியோர் விருதாளர்களை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றினர். செல்விகள் அமிர்தா – அருமிதா சசிகரன் சகோதரிகள் பாடிய கனடிய தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது.

Click Here EnlargeClick Here Enlarge


எஸ். திருச்செல்வம்

© TamilOnline.com