திருமதி. இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி அவர்களுக்கு அமெரிக்காவின் மதிப்புமிக்க எல்லிஸ் ஐலண்டு மெடல் இவ்வாண்டு வழங்கப்படுகிறது. இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பெப்சி நிறுவனத்தைத் திறம்பட நிர்வாகித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், 1980ல் கனெக்டிகட் யேல் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைக் கல்வி படித்துள்ளார். Fortune இவரை வணிகத்துறையில் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணிகள் வரிசையில் முதன்மையானவர் என 2009, 2010ம் ஆண்டுகளில் அறிவித்தது. இன்றுவரை இந்த வரிசயில் முதல் மூன்று இடங்களுக்குள் இவர் இருந்து வருகிறார். இவர் ஏப்ரல் 2015ம் ஆண்டிலிருந்து ஸ்க்லம்பெர்ஜர் என்ற பெரிய எண்ணெய் நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார்.
இந்த விருது தேசிய இன நிறுவனங்களின் கூட்டமைப்பினால் (National Ethnic Coalition of Organization - NECO) அமெரிக்காவில் குடியேறித் தத்தமது துறையில் சாதனை செய்தவர்களுக்கு (நூறு சாதனையாளர் வரை) வழங்கப்படுகிறது. 1986 முதல் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் அமெரிக்காவின் குடிவரவு வாயிலாக விளங்கும் நியூ யார்க்கில் உள்ள எல்லிஸ் தீவில் இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. இவ்வாண்டு மே 13ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பதக்கம் பெறும் 88 நபர்களில் ஃபரீத் சகாரியா, தினேஷ் பலிவல், டாக்டர். அன்னபூர்ணா கினி, யஷ்வந்த் படேல், மோகன் படேல் ஆகிய இந்திய வம்சாவளியினரும் அடங்குவர்.
அதிபர் டோனல்டு ட்ரம்ப் உட்படச் சில அமெரிக்க ஜனாதிபதிகளும், ஹில்லரி கிளிண்டன், ரோஸா பார்க், முகமது அலி ஆகியோரும் இதற்கு முன்னர் எல்லிஸ் ஐலண்டு மெடல் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
தெய்வானை சோமசுந்தரம் |