தீராத வாசனை
ஓஹேர் சிகாகோ விமானதளத்தை விட்டுப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் எட்டு மணி நேரம் கடந்து லண்டன் வந்து சேர்ந்துவிட்டேன். ஹீத்ரோ ஏர்போர்ட்டில் இரண்டு மணி நேரம் ஸ்டாப் ஓவர். நல்ல பசி. வீட்டில் கட்டிக்கொடுத்த மிளகாய்ப்பொடி தூவின இட்லி அமிர்தமாக இருந்தது. அதற்குமேல் ஸ்டார்பக்ஸ் கடையிலிருந்து மணக்க மணக்க நுரையுடன் ஒரு கப் லாட்டே காஃபி சாப்பிட்ட பிறகு சுறுசுறுப்பாக ஏர்போர்ட்டை ஒரு வலம்வந்தேன். எங்கு பார்த்தாலும் கண்ணைப் பறிக்கும் மின்சார விளக்குகள், பலவண்ணத்தில் ஆடை அணிந்து ஒயிலாக நடந்துபோகும் மாதர்கள், வேகவேகமாக நடக்கும் சூட், பூட் போட்ட மனிதர்கள். ஏசியுடன் கூடிய விஸ்தாரமான கட்டட அமைப்பு. தேவலோகம் என்பது இப்படித்தான் இருக்குமோ? எண்ணி ரசித்துக்கொண்டே மெள்ள நடந்து, சென்னை செல்லும் விமான கேட்டைச் சென்றடைந்தேன். ஒரே கூட்டம். எப்படியோ விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தேன்.

சற்று நேரத்திற்குப் பிறகு விமானம் மணிக்கு ஐந்நூறு கிலோமீட்டருக்கும் அதிக வேகத்தில் பறந்துகொண்டு இருந்தது. என் மனமோ பிறந்த நாட்டின் இனிய அனுபவங்களை நினைத்தபடி விமானத்தைவிட அதிவேகமாகப் பறந்தது.

என் பூர்விகம் தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த மஹாராஜபுரம். ஆடுதுறைக்கு அருகில் உள்ளது. செழிப்பான பச்சைப் பசேலென்ற பயிர்கள். உயரமான தென்னை மரங்கள். மகிழ்ச்சியான மக்கள். கர்நாடக இசைமேதை விஸ்வநாத அய்யர் வீட்டுக்கு அடுத்தது என் தாத்தா, கொள்ளுத்தாத்தா வசித்த வீடு. இப்போது, அங்கு என் உறவினர்கள் யாருமே இல்லை. ஆனாலும், மூதாதையர்கள் வழிபட்ட விஷ்ணு துர்கையம்மன் கோவில் மட்டும் என்னை மிகவும் ஈர்க்கிறது. அது என்ன வாசனையோ, எனக்குத் தெரியவில்லை.

கடந்த வருடம் இந்தியா போனபோது, அடுத்த ஊரான பாஸ்கரராஜபுரத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் சில புது நண்பர்களைச் சந்தித்தேன். அவர்கள் மூலமாக, என் ஊரைச் சேர்ந்த சிலர் மும்பையில் இருப்பது தெரியவந்தது. அவர்களில் மாதவன் என்பவருடன் ஃபோன் பேசினேன். அவர் உற்சாகத்துடன் பேசினவிதம் என்னை ஆச்சரியத்தில் மூழ்கவைத்தது. என்னவோ என்னைப் பல வருடங்களாகத் தெரிந்தவர் போல அன்போடு பேசினார். என்னையும், என் மனைவியையும் அவர் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து தங்கும்படி அழைத்தார்.

அவர் அழைப்பை ஏற்று, நானும் மனைவியும் மும்பை போனோம். அவரே பஸ் நிற்கும் இடத்திற்கு வந்து எங்களை எதிர்கொண்டழைத்து, தன் காரிலேயே தாணாவில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார். முன்பின் எங்களைத் தெரியாவிட்டாலும், அவரும் அவர் மனைவியும் அன்போடு உபசரித்தவிதம் எங்களைத் திக்குமுக்காட வைத்தது. நான் எப்படி அவர்களின் அன்புக்குப் பாத்திரமானேன்? சொந்த மண்ணின் வாசனையா அல்லது விஷ்ணு துர்கை அம்மன் மஹிமையா?

அவர்களைச் சந்தித்து ஒரு வருடம் ஓடிவிட்டது. இன்று என் ஊரைச் சேர்ந்த, எனக்கு முன்னர் தெரியாத பலபேர் நண்பர்கள். அவர்கள் காட்டும் அன்புக்கு எல்லையே இல்லை. இத்தனைக்கும் நான் அந்த ஊரில் வசிக்கவே இல்லை! என் மனத்திலே எழுந்த கேள்விகள் பல. எதனால் இப்படி? நான் அப்படி ஒன்றும் பெரியபுள்ளி இல்லையே. எண்ண ஓட்டத்தில் நேரம்போனது தெரியவில்லை. விமானப் பணிப்பெண் அறிவிப்பு கேட்டது. "இன்னும் சற்று நேரத்தில் விமானம் சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இறங்கும். தயவுசெய்து தங்கள் இருக்கையில் அமர்ந்து சீட்பெல்ட்டை அணிந்து கொள்ளுங்கள்."

சென்னை விமானதளத்தில் இறங்கி ஒரு டாக்ஸி பிடித்தேன். அதிகாலை வேளை. சற்று மேகமூட்டமாக இருந்தது. மழைவரும் முன்னே ஒரு மண்மணம் வீசுமே, அதை எப்படி விவரிப்பது? அதுபோல் ஒரு மணம். அத்துடன், சென்னைக்கே உரித்தான ஒருவகை வாசனையை நுகர்ந்தேன். அது மணமா இல்லை துர்நாற்றமா? அதையும் எனக்கு விவரிக்கத் தெரியவில்லை.

பொதுவாக, நாம் வாசனை என்று நினைப்பது மலர்களிலோ அல்லது அத்தர் முதலிய சென்ட்களிலோ வரக்கூடிய மணம்தான். இம்மணம் ஒரு வகையில் நம்மை ஈர்க்கும். ஆனால், மூக்கினால் நுகரமுடியாத சில வாசனைகளும் உண்டு என்று இப்போது உணர்கிறேன். நுகரமுடியாத இந்த வாசனைகள் எவ்வாறு உருவாகிறது? நம் எண்ணங்களே அதற்குக் காரணமோ! எண்ணங்கள், பேச்சு, செய்கை வடிவாக உருவெடுத்து நம்மைச்சுற்றி ஒரு புதுவித வாசனையை உருவாக்கி விடுகிறது.

மூக்கினால் நுகரமுடியாத அந்தத் தீராத வாசனை மற்றவரை நம்மை நோக்கி இழுக்கிறது அல்லது நம்மிடமிருந்து தள்ளிவைக்கிறது. குழந்தையைப் போலத் திறந்த உள்ளத்தோடு இருக்க, பழக தெரிந்தால் போதும். தீராத வாசனை தானாகவே வரும். அவ்வாசனை மற்றவர் மூலமாகப் பல இடங்களில் பகிரப் பகிரத் 'தீராதது' ஆகிறது. இப்படித்தான் எனக்குத் தெரிந்தது. உங்களுக்கு....

சுபி சுப்ரமணியன்,
சிகாகோ

© TamilOnline.com