தமிழின் மிகமூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாதமி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவருமான அசோகமித்திரன் (86) சென்னையில் காலமானார். செகந்திராபாத்தில், 22 செப்டம்பர் 1931 அன்று பிறந்த இவரது இயற்பெயர் தியாகராஜன். தந்தையின் மறைவிற்குப்பின் சென்னையில் குடியேறிய இவர், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரிந்தார். இயல்பாக இருந்த எழுத்தார்வத்தால் தமிழிலும், ஆங்கிலத்திலும் கதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். வாழ்வியல் அனுபவங்களே இவரது படைப்புகளாக உருப்பெற்றன.
மெல்லிய நகைச்சுவை, மென்சோகம் கொண்ட யதார்த்தவாத எழுத்துக்கள் இவருடையன. எதையும் மிகையில்லாமல் சொல்லிச் செல்வது இவரது எழுத்தின் பலம். இவரது படைப்புகள் ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலிருந்தும் இவர் பல நல்ல படைப்புகளைத் தந்திருக்கிறார். 'வாழ்விலே ஒருமுறை', '18வது அட்சக்கோடு', 'தண்ணீர்', 'இன்று', 'மானசரோவர்', 'காலமும் ஐந்து குழந்தைகளும்', 'இருட்டிலிருந்து ஒரு வெளிச்சம்', 'பிரயாணம்', 'ஒற்றன்', 'ஆகாசத் தாமரை' போன்றவை இவரது படைப்புகளில் முக்கியமானவை.
'அப்பாவின் சிநேகிதர்' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இவருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. தேவன் விருது, திரு.வி.க. விருது, சாரல் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். “என்னுடைய நோக்கம் ஒரு சின்னக்குழந்தை கூடப் படிப்பதாய் இருக்க வேண்டும் என்பதுதான். அதற்குப் புரியாததாய் இருக்கலாம். ஆனால், குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. என் சுயதர்மம் அதுதான்” என்கிறார் தனது படைப்பின் நோக்கம் குறித்துப் பேசுகையில் (பார்க்க: தென்றல் நேர்காணல்). எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படியிருந்தும், இவரது எழுத்துக்களின் சிறப்புக்கேற்ற பெருமையும் செழுமையும் இவருக்குக் கிடைத்தனவா என்பதைத் தமிழ் வாசகர்கள் சிந்திக்கத்தான் வேண்டும்.
இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.
தமிழ் இலக்கியப் பிதாமகருக்குத் தென்றலின் அஞ்சலிகள்!! |