அத்தியாயம் – 6 மறுநாள் மதியம் சாப்பாட்டு நேரத்தில், அருணும் ஃப்ராங்கும் பேசித் தள்ளினார்கள். கடகடவென்று சாப்பிட்டுவிட்டு, ஒருவர்பற்றி ஒருவர் தெரிந்து கொள்வதற்காகக் கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டார்கள். இருவரும் செரா எந்த பெஞ்சில் உட்கார்ந்து இருந்தாளோ, அங்கேயே அவள் அருகில் இருந்துகொண்டு லொடலொடவென்று பேசினார்கள்.
செராவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அமைதியாகப் புத்தகம் படிக்கும் நேரம் அது. அந்த நேரத்தில் அருணும் ஃப்ராங்கும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அவளும் பொறுமையாக இருந்தாள்.
"அருண், என்னை என்ன வேணும்னாலும் கேளு," என்றான் ஃப்ராங்க்.
"நான் ஒரே ஒரு பெர்சனல் கேள்வி கேட்கலாமா?" தயக்கத்தோடு கேட்டான் அருண்.
"ஜஸ்ட் ஒரே ஒரு கேள்வி? நான், நீ மில்லியன் bazillion கேள்விகள் கேக்கப் போறேன்னு நினைச்சேன்" என்று சொல்லிச் சத்தமாக சிரித்தான் ஃப்ராங்க். அவன் bazillion என்று சொல்லும்போது, வேண்டும் என்றே BUZZ என்று தேனீக்கள்போலச் சத்தம் போட்டான்.
அருண் ஃப்ராங்கின் நகைச்சுவை உணர்வைக் கண்டு புன்னகைத்தான்.
"கேளு மானிடனே, கேளு. நீ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் இந்த வேற்று கிரகத்தவன் பதில் கொடுப்பான்" என்று ஜோக் அடித்தான் ஃப்ராங்க்.
அருணும் ஃப்ராங்கும் சத்தம் போட்டுப் பேசியது செராவுக்கு எரிச்சல் வந்தது. புத்தகத்தை டேபிள்மேல் வைத்துவிட்டு இருவரையும் பார்த்து முறைத்தாள். ஃப்ராங்கும் அருணும் பேச்சிலேயே கவனமாக இருந்தார்கள். அவளைக் கவனிக்கவில்லை.
"சொல்லு ஃப்ராங்க், ஏன் இப்படி பீமனாட்டம் இந்தச் சின்ன வயசிலேயே இப்படி இருக்கே?"
."தேங்க் யூ நண்பா, தேங்க் யூ. நீ இந்தக் கேள்வி கேட்கணும்னு ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தேன்" என்று பதில் கொடுத்து அருணை வியப்பில் ஆழ்த்தினான் ஃப்ராங்க்.
அருண் சற்றே தயக்கத்துடன், "ஃப்ராங்க், நீ ரொம்ப ஜங்க்ஃபுட் சாப்பிடுவியா?"
"இல்லை அருண், எங்க அம்மாவும் மத்த அம்மாக்கள் போல சாப்பாடு விஷயத்துல ரொம்பக் கண்டிப்புதான்."
"அப்புறம் எப்படி…?"
"தெரியல அருண், beats me." "ஏதாவது மரபணுவுல குறை இருக்கா உனக்கு? சொன்னாங்க, சில பேருக்கு ஹார்மோன் குறைகள் (hormone imbalance) இருக்கும் அப்படின்னு எங்கம்மா சொன்னாங்க. உனக்கு ஏதாவது அப்படி இருக்கா?"
"இல்லை அருண், அப்படி எதுவும் எங்க குடும்பத்தில இருக்கிறமாதிரி தெரியலே. அப்படியிருந்தா, எங்கம்மா என்கிட்ட சொல்லிருப்பாங்க."
"உங்க குடுப்பத்துல எந்தவிதமான குறையும் இல்லை. ஜங்க்ஃபுட் சாப்பிடலே. அப்புறம் எப்படி?"
"நீதான் அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவணும்" என்று பட்டென்று பதில் அளித்தான் ஃப்ராங்க். "நான் இந்தப் பள்ளிக்கூடம் சேர்ந்ததே உன்னைச் சந்திச்சு இதைப்பத்திப் பேசத்தான்."
அருண் ஸ்தம்பித்துப் போனான். அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. தன்னை இவ்வளவு முக்கியமாக ஃப்ராங்க் நினைப்பான் என்று அருண் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
"என்ன அருண், பேச்சே இல்லை?"
அருணுக்கு மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. "அப்படி நீ என்னதான் சாப்பிடறே ஃப்ராங்க்?"
"நாங்க நம்ம ஊர் கொடுக்கற மலிவுவிலை சாப்பாடுதான் நிறையச் சாப்பிடுவோம்."
"அப்படின்னா?"
அருண் அப்படிக் கேட்டது ஃப்ராங்கிற்கு ஆச்சரியமாக இருந்தது. "அரசாங்கம் கொடுக்கிற உணவு மானியம் (subsidy) பத்தி உனக்குத் தெரியாதா?" என்று ஃப்ராங்க் கேட்டான். அவன் குரலில் ஆச்சரியம் தெரிந்தது.
"இல்லை."
"எங்களை மாதிரி ஏழைக் குடும்பங்களுக்கு அரசாங்கம் குறைஞ்ச விலையில சாப்பாட்டுப் பொருளைக் கொடுக்கும்."
"ஆரோக்கியமான உணவா?"
"சாதாரணமா கடைகள்ள கிடைக்கிற ஆரோக்கியமான உணவு ஐட்டங்கள வாங்கிச் சாப்பிடுற வசதி எங்கள மாதிரி குடும்பங்களுக்குக் கிடையாது அருண். நம்ம எர்தாம்டன் நகரசபை மலிவா கொடுக்கற ஒரு விதமான உணவுகளை உபயோகப்படுத்துவோம்."
"அப்ப நல்ல ஆரோக்கியமா தானே இருக்கணும் எல்லோரும்?" என்று கேட்டான் அருண்.
"அதுதான் எனக்குப் புரியல. என்னவோ தெரியலே, நான் மட்டும் இல்ல, எங்க வீட்டுப் பக்கத்தில இருக்கிற எல்லாக் குழந்தைகளும் என்ன மாதிரியே பீமனாட்டம் இருக்காங்க."
ஃப்ராங்க் அப்படிச் சொன்ன பிறகு ஏதோ தெளிவாக விளங்கியது போல அருணுக்குத் தோன்றியது. ஃப்ராங்க், அவன் வீட்டில் சாப்பிடும் மலிவுவிலை உணவுகள் மீது சந்தேகப்பட்டுத்தான் அருணிடம் சொல்ல வந்திருக்கிறான்.
"அருண், அப்புறம் என்னவோ தெரியல. எனக்கு எப்பப் பார்தாலும் பசிச்சுகிட்டே இருக்கு. அதனால, நான் அளவுக்கு அதிகமா சாப்பிடறேன். ஒருவேளை அதான் இவ்வளவு குண்டா இருக்கேனோ என்னமோ." "என்னது? உனக்கு எப்பவுமே பசிக்குமா?" "ஆமாம் அருண், எனக்கு மட்டும் இல்லை, என் வீட்டு பக்கத்துல எல்லா நண்பர்களுக்கும் அதேதான்."
அருண் சிந்தனையில் ஆழ்ந்தான். மலிவுவிலையில் ஆரோக்கிய உணவு? நானும்தானே சத்துணவு சாப்பிடுகிறேன். நான் சாப்பிடும் உணவுக்கும் ஃப்ராங்கின் உணவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்? எனக்கு ஏன் அவனைப்போல எப்பொழுதும் பசிக்கவில்லை? நான் ஏன் ஃப்ராங்க் போலே குண்டாக இல்லை? பல கேள்விகள்.
"ஃப்ராங்க்…"
"சொல்லு அருண்."
"நீ சாப்பிடுற…."
"நான் சாப்பிடுற?"
"நீ சாப்பிடுற…." என்று மீண்டும் இழுத்தான் அருண். அவனால் கேட்க நினைத்ததைக் கேட்க முடியவில்லை.
"தைரியமாக் கேளு, அருண். நான் சாப்பிடுற, என்னது?"
"நீ… சாப்பிடுற... எல்லாம்… ஹோர்ஷியானா நிறுவனத் தயாரிப்பா?"
"ஹூரே! ஹூரே!" என்று சொல்லி ஒரு குதி குதித்தான் ஃப்ராங்க். அவன் அப்படிக் குதித்ததில் செரா தன் கையில் இருந்த புத்தகத்தை நழுவவிட்டாள். உங்க ரெண்டு பேரையும் திருத்தமுடியாது என்று தலையை அசைத்தபடி நகர்ந்து போனாள்.
"எப்படி அருண் கரெக்டா கெஸ் பண்ணினே? ஆமாம், நாங்க சாப்பிடுற மலிவுவிலை உணவெல்லாம் ஹோர்ஷியானா கம்பெனி தயாரிப்புதான். அதான் உன்கிட்ட கேக்கறேன். ஏதோ விஷமம் பண்றாங்க, அருண். எப்பவும் கன்னாபின்னானு பசி எடுக்க அதுதான் காரணம்னு நினைக்கிறேன். ப்ளீஸ், நீ எப்படியாவது எங்களுக்கு இந்த உதவி பண்ணேன்."
அய்யோ! மீண்டும் ஹோர்ஷியாவுடன் மோதலா என்று அருணுக்குத் தோன்றியது. இது நிச்சயம் பெரிய வம்பில் போய் முடியப்போகிறது என்று பயந்தான்.
"அருண், எங்க வீட்டுக்கு விளையாட என்னிக்கி வரப்போற?"
"அம்மாவைக் கேட்டேன். அப்பாகிட்ட கேட்டு சொல்றேன்னாங்க."
"நீ வரும்போது, நான் என்னோட நண்பர்களை உனக்குப் பரிச்சயம் பண்ணிவைக்கிறேன். அதுவும் இல்லாம, நாங்க சாப்பிடுற சாப்பாட்டு பாக்கெட்டுகளையும் உனக்குக் காட்றேன். கட்டாயமா வரணும், சரியா!"
அருண் சரியென்று தலையசைத்தான். அதற்குள் மதிய உணவு முடியும் மணி ஒலித்தது.
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |