திண்ணியம் ஸ்ரீ ஷண்முகநாத சுவாமி
திண்ணியம் திருத்தலம் திருச்சியிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும், லால்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 'குமார தந்திரம்' என்ற ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இயற்கை வளம் சூழ்ந்த ஊர். ஆலய முகப்பின் அருகே கிழக்கு நோக்கிய இடும்பன் சன்னிதி. உள்ளே நீண்ட பிரகாரமும், மகா மண்டபமும் உள்ளன. முருகன் தெற்கு நோக்கியபடி குரு வடிவாகத் தரிசனம் தரிகிறார். முருகனுக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தனித்தனி மயில்வாகனத்தில் காட்சி தருவது இந்தக் கோவிலின் சிறப்பு. மகாமண்டபத்தின் இடதுபுறம் கோடீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. முருகனுக்கு எதிரே அருணகிரிநாதர் காட்சி தருகிறார். தனிச்சன்னதியில் அம்பாள் பிருஹன்நாயகி தெற்குநோக்கி நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.

காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் என்று பரிவார தேவதைகளும் சுற்றிலும் உள்ளனர். நவக்கிரகங்களில் சந்திரன், சுக்கிரன், புதன், குரு ஆகிய சுபக்கிரகங்கள் மேற்குநோக்கி வீற்றிருக்கின்றனர். விசேஷ நாட்களில் சிறப்பு அர்ச்சனை, வழிபாடுகள் நடக்கின்றன. கோவிலுக்கு எதிரே ஒரு ஃபர்லாங்கு தூரத்தில் பங்குனி நதி ஓடுகிறது. தல விருட்சமான வில்வமரம் ஆண்டுகள் பல கடந்தது. அதனடியில் நாகர் சன்னதி அமைந்துள்ளது.

சுவாமி சன்னதியில் தெற்கே தக்ஷிணாமூர்த்தியையும், வடக்கே துர்கையையும் காணலாம். சன்னதியின் இடப்புறம் மகாமண்டபத்தில் சிவலோகநாதர், ஒப்பிலாம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி காட்சி தருகின்றனர். குமார தந்திரத்தில் ஸ்ரீஷண்முகநாதருக்கு செவ்வாய், சஷ்டி, மாத கிருத்திகை, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களிலும், தைப்பூசத்தன்றும் ஹோமங்கள், 12 விதப் பொருட்களால் அபிஷேகங்கள் நிறைவாகச் செய்து ஷோடசோபசார பூஜைகள் நடைபெறுகின்றன. இதனால் சகல சௌபாக்கியங்களும் பெருகி எப்போதும் இறைச் சான்னித்யம் துலங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பங்குனி உத்திரத்தின்போது பங்குனி நதியிலிருந்து பக்தர்கள் அலகு காவடி, தேன் காவடி, சந்தனக் காவடி, விபூதிக் காவடிகளைச் சுமந்து ஆலயமுகப்பில் உள்ள இடும்பனுக்கு முதல் மரியாதை செய்துவிட்டு பெருமானுக்கு நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர்.

ஷண்முகநாத சுவாமி சன்னிதித் தெருவில் பெருமாள் கோவிலில் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் மூலவர், உத்சவர் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் அனுக்கிரஹ மூர்த்தியாக விளங்குகிறார். இக்கோயிலில் கிருஷ்ணனுக்கு வெண்ணை சாற்றிப் பிரார்த்தித்தால் புத்திரபாக்கியம் நிச்சயம். பிரார்த்தனை நிறைவேறிய பின் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு இடுப்புச் சலங்கை, அரைஞாண், கொலுசு முதலிய ஆபரணங்களைக் காணிக்கையாகச் செலுத்தி அர்ச்சனை செய்கின்றனர். இவ்வாலயத்தின் பின்புறம் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது.
திருமணம் நிகழ, கன்னிப்பெண்கள் முருகனுக்கு செவ்வரளிப் பூமாலை ஏழு வாரங்கள் சாற்றி, நெய் விளக்கேற்றி வழிபடுகின்றனர். சஷ்டி விரதமிருந்து முருகனை ஆராதனை செய்யும் பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டுவதாக நம்பிக்கை.

திண்ணியம் ஷண்முகநாதனை மனமுருகிப் பூஜித்தால் பலன் கிடைப்பது திண்ணம் என்று ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுவதுடன், கல்வியில் தேர்ச்சி, செல்வப் பெருக்கு, உயர்பதவி, வெற்றி என எல்லாவகை விருப்பங்களும் நிறைவேறுகின்றன என்று கூறப்படுகிறது. ஒருமுறை திண்ணியம் சென்று திருமால் மருகனைத் தரிசியுங்கள்.

சீதாதுரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com