ராமபிரானின் பெருமையைக் கூறும் ராமாயணத்தை தமிழில் 'ராமகாதை' என எழுதினார் கம்பர். அதுபோல ஹிந்தியில் 'ராமசரிதமானஸ்' என்னும் காவியத்தை இயற்றிப் புகழ்பெற்றவர் கோஸ்வாமி துளசிதாஸர். இறைவனைக் காண்பதற்கான தீராத வேட்கை ஒருவனுக்கு இருந்தால் நிச்சயம் இறைக்காட்சி கிடைக்கும் என்பதற்கு உதாரணம் துளசிதாஸரின் வாழ்க்கை. இவர் உத்திரப்பிரதேசத்தின் ராஜாப்பூர் என்ற கிராமத்தில் 16ம் நூற்றாண்டில் பிறந்தார். பெற்றோர் ஆத்மாராம், உலேசிபாய் இயற்பெயர் ராம்போலா. இளவயதிலேயே பெற்றோரை இழந்தார். உறவினர்களின் ஆதரவில் வளர்ந்த இவருக்கு வாழ்க்கை நிலையாமை பல பாடங்களைப் போதித்தது. தேசாந்திரியாக ஊர் சுற்றித் திரிந்தார். பல அனுபவங்களைப் பெற்றார். மமதாபாய் என்ற பெண்ணுடன் இவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. மனைவிமீது மிகுந்த அன்போடு இனிய இல்லறத்தை நடத்திவந்தார்.
ஒரு சமயம் பணி காரணமாகத் துளசிதாஸர் வெளியூருக்குப் போக நேர்ந்தது. சில வாரங்களுக்குப் பின் மீண்டும் இல்லம் திரும்பியபோது மனைவியைக் காணவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அவர் தாய்வீடு சென்றிருப்பது தெரியவந்தது. மனைவிமீது கொண்ட காதலால், அந்த இரவில், கொட்டும் மழையில் மனைவியின் ஊருக்குப் புறப்பட்டார். அதற்கு ஓர் ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். ஆற்றில் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. எப்படிச் செல்வது என்று தெரியாமல் திகைத்தபோது ஆற்றில் ஏதோ மிதந்து வருவது தெரிந்தது. அதன்மீது தாவி ஏறி அக்கரை சேர்ந்தார். அவர் மனம் முழுவதும் அவர் காதல் மனைவியின் நினைவே இருந்ததால் அவர் எதன்மீது அமர்ந்திருக்கிறோம் என்பதைக்கூட கவனிக்கவில்லை. அக்கரை சேர்ந்தபின்தான் ஒரு பிணத்தின்மீது அமர்ந்து நதியைக் கடந்தோம் என்பது தெரியவந்தது. அந்த ஆற்றிலேயே ஒரு முழுக்குப் போட்டுவிட்டு மனைவியின் வீட்டை நோக்கி ஓடினார்.
கொட்டும் மழையில் ஊரே உறங்கிக் கொண்டிருந்தது. துளசிதாஸர் பலமுறை மனைவியின் பெயரைச் சொல்லி அழைத்தும் அவர் கதவைத் திறக்கவில்லை. உறவினர்களும் வெளியே வரவில்லை. தாபத்தால் தவித்த துளசிதாஸர், அருகிலிருந்த மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒன்றைப் பற்றித் தாவி ஏறி வீட்டின் முற்றத்திற்குள் குதித்தார். திடீரென யாரோ குதித்த ஒலி கேட்டு எழுந்த மனைவி மமதாபாய், விளக்கை எடுத்து வந்தார். ஆடை முழுவதும் ரத்தக் கறையுடன் தனது கணவர் வந்திருப்பதைப் பார்த்துத் திகைத்தார். அவள்மீது கொண்ட அளவற்ற காதலால் அந்தக் கொட்டும் மழையில் பல்வேறு தடைகளைக் கடந்து அங்கே வந்திருப்பதாகச் சொன்னார் துளசிதாஸர்.
அவரை வரவேற்று உபசரித்த மமதாபாய், ஆடையில் படிந்திருந்த ரத்தத்துக்கான காரணத்தைக் கேட்டார். பிணத்தின்மீது மிதந்து வந்ததாகச் சொன்னார் துளசிதாஸர். அது ரத்தக்கறைக்குக் காரணமாக இருக்கமுடியாது. கணவரை அழைத்துக்கொண்டு போய் வாசலில் இருந்த மரத்தைப் பார்த்தாள். அங்கே பாம்பொன்று இறந்து தொங்கிக் கொண்டிருந்தது. கயிறு என்று நினைத்து பாம்பைப் பற்றிக்கொண்டு கணவர் ஏறி வந்திருப்பதையும், அதனால் அது இறந்து போயிருப்பதையும் அறிந்தார்.
கணவருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளைச் செய்த மமதாபாய், பின்னர் அவரிடம், "சுவாமி, அழியும் இந்த உடல்மீது கொண்ட காதலால் அல்லவா நீங்கள் இதையெல்லாம் செய்திருக்கிறீர்கள்!. பிணத்தோடு ஆற்றுச்சுழலில் மாட்டிக் கொண்டிருந்தால் நீங்களும் அல்லவா பிணமாகியிருப்பீர்கள்! பாம்பு உங்களைக் கடித்திருந்தாலும் மரணம் அல்லவா நேர்ந்திருக்கும்? கேவலம், அழியப்போகும் ஓர் உடலுக்காக நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமா? இந்த ஆர்வத்தையும், காதலையும், அன்பையும் நீங்கள் இறைவன்மீது காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அழியும் இந்த உடலின்மீது கொண்ட ஆசையில் ஒரு துளியாவது, அழிவே இல்லாத இறைவன்மீது வைத்தால் உங்களுக்கு முக்திப் பாதையே திறந்துவிடுமே!"
"சிற்றின்பத்தை விடுத்துப் பேரின்பத்தை நாடுவதுதானே சிறந்த விவேகிகளுக்கு அழகு. தயவு செய்து சிந்திக்கவேண்டும்" என்று அன்போடும், பணிவோடும் வேண்டிக்கொண்டாள். மனைவியின் பொருள் பொதிந்த சொற்கள் துளசிதாஸரின் உள்ளத்தை மாற்றின. "ஆமாம், நான் ஆண்டவனை அல்லவா தேடவேண்டும்? அதை விடுத்து அழியும் இந்த உடலுக்காக இவ்வளவும் செய்வது சரியானதல்லவே" என்று அகத்துள் எண்ணினார். அவர் கண்கள் திறந்தன. "மனைவியல்ல, நீயே எனக்கு நல் ஆசான்!" எனச் சொல்லி அங்கேயே மனைவியை வணங்கிவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினார்.
கால்போன போக்கில் சுற்றித் திரிந்தார். பல ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டார். ஒரு சமயம், கிராமம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது அங்கே ஒருவர் சொற்பொழிவு செய்து கொண்டிருப்பதைக் கண்டார். 'நரஹரிதாஸர்' என்னும் அப்பெரியவர் ராமாயண சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அக்கதை துளசிதாஸரின் உள்ளத்தை உருக்கியது. "ராமனே எனது கண்கண்ட தெய்வம்" என்று முடிவுசெய்தவர், ராம பக்தனாகிப் போனார். நரஹரிதாஸரின் சீடரானார். அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று ராமகாதையை முழுக்கக் கற்றுத் தேர்ந்தார் நாளடைவில் தானும் அவரைப் போலவே சொற்பொழிவாற்றுவதில் வல்லவரானார்.
காசியை அடுத்துள்ள காட்டின் ஒரு பகுதியில் குடில் அமைத்துத் தங்கிய துளசிதாஸர், சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கெல்லாம் சென்று சொற்பொழிவாற்ற ஆரம்பித்தார். சொற்பொழிவின் போது தன்னையே மறந்து ராமநாம ஜபத்தில் ஆழ்ந்துவிடுவது அவர் வழக்கமாக இருந்தது. நாளடைவில் ராம, லட்சுமணர்களின் தரிசனம் பெறவேண்டும் என்ற ஆசை தோன்றியது. அது நாளுக்கு நாள் வளர்ந்து லட்சியமானது. ராமதரிசனம் பெறாமல் இந்த ஜன்மம் நிறைவடையாது என உறுதிபூண்டார்.
தினந்தோறும் காலையில் எழுந்து, நித்ய பூஜையை முடித்தபின், மீதமுள்ள நீரைத் தனது குடிலின் அருகேயிருந்த ஒரு மரத்திற்கு ஊற்றுவது வழக்கம். ஒருநாள் அவர் அவ்வாறு ஊற்றும்போது அந்த மரத்தின் மேலிருந்து ஒரு பிரம்மராட்சசன் கீழே குதித்தான். துளசிதாஸரைப் பணிந்த அவன், "சுவாமி, முனிவர் ஒருவரின் சாபத்தால் நான் பல ஆண்டுகளாக தாகத்தால் தவித்து வந்தேன். குளம், ஏரி, நதி என்று பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் பருகியும் என் தாகம் தீரவில்லை. நீங்கள் தினந்தோறும் வார்த்து வந்த புனிதநீர் என் தாகத்தைத் தணிந்தது. இன்று சாப விமோசனமும் கிடைத்தது. என் துயர்தீர்த்த உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன்" என்றான்.
துளசிதாஸர் அவனிடம், "அப்பா, எனக்கு வேண்டியது ஒன்றுதான். அது ஸ்ரீராம தரிசனம்தான். அதற்கு உன்னால் உதவமுடியுமா?" என்று கேட்டார். அதற்கு அவன், "சுவாமி, நீங்கள் ராமாயணச் சொற்பொழிவு செய்யும் இடத்துக்குத் தினந்தோறும் ஒரு முதிய பிராமணர் வந்து செல்கிறார் அல்லவா?. அவர் நினைத்தால் உங்களுக்கு ஸ்ரீராமரின் தரிசனம் கிடைக்கும். நீங்கள் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு மறைந்தான்.
தினமும் ஒரு பெரியவர் தன் சொற்பொழிவுக்கு வருவதையும், கண்களில் நீர்மல்கக் கதை கேட்டுச் செல்வதையும் துளசிதாஸர் கவனித்திருந்தார். அன்று மாலை, தாஸர் சொற்பொழிவு நிகழ்த்த ஆரம்பித்ததும், அந்தப் பழுத்த முதியவர் அங்கே வந்தார். கண்களில் நீர்மல்க, கைகளை மேலே கூப்பி வணங்கியவாறு அமர்ந்து சொற்பொழிவைக் கேட்டார். "எங்கே உள்ளார்ந்த பக்தியுடன் ராமநாமம் ஜெபிக்கப்படுக்கிறதோ அங்கே ஸ்ரீஆஞ்சநேயர் வந்து அதனைக் கேட்டுச் செல்வார்" என்பதை அறிந்திருந்த துளசிதாஸர், தினமும் வந்து செல்வது ஆஞ்சநேயராகவே இருக்குமோ என்று ஐயுற்றார்.
சொற்பொழிவு முடிந்ததும் அந்தப் பெரியவர் விரைந்து செல்ல முயற்சிக்க, துளசிதாஸர் அவரைப் பின்தொடர்ந்து ஓடினார். இவர் வருவதைப் பார்த்து, அவர் மிக மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தார். காட்டு வழியில் சளைக்காது பின்தொடர்ந்த துளசிதாஸர் ஓடிச்சென்று பெரியவரின் கால்களில் விழுந்தார்.
"நீ யார், ஏன் என் பின்னால் வருகிறாய்?" என்று பெரியவர் உரத்த குரலில் கேட்டதும், துளசிதாஸர், அவரது இரு கால்களையும் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, "நீங்கள்தான் ஆஞ்சநேயர் என்பதை அறிவேன். உங்கள் தரிசனத்தை எனக்குத் தந்தருள வேண்டும்" என்று கண்ணீர் வடியக் கேட்டார். அந்தப் பெரியவரோ பலவிதமாக அதனை மறுத்து, தான் ஆஞ்சநேயர் அல்ல என்று சொல்லி விலகிச்செல்ல முற்பட்டார். ஆனால், துளசிதாஸர் பிடித்த பிடியை விடவில்லை.
தூய்மையான பக்திக்கு இறைவன் மனமிரங்காமல் இருப்பானா என்ன! தாஸருக்கு மாருதி காட்சி தந்தார். துளசிதாஸர் அவர் அங்கேயே கோவில் கொண்டருள வேண்டும் என்றும் தமக்கு ராமதரிசனம் கிடைக்க ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். அதனை ஏற்ற ஆஞ்சநேயர், மறுநாள் காலை ஸ்ரீராமரின் தரிசனம் துளசிதாஸருக்குக் கிடைக்கும் என்று சொல்லி மறைந்தார். (காசியில் அமைந்திருக்கும் 'சங்கடமோசன ஹனுமான் கோயில்' தான் துளசிதாஸருக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்த இடம்)
மறுநாள் பொழுது புலர்ந்தது. விடிய விடிய உறங்காமல் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார் துளசிதாஸர். 'ராமர் தனக்கு எப்படிக் காட்சி தருவார்? மரவுரி தரித்தா, அயோத்தி மன்னனாகப் பட்டாபிஷேகக் கோலத்திலா? தனியாக வருவாரா?' என்றெல்லாம் பலவாறாகச் சிந்தித்தவாறு இருந்தார். அப்போது அரசன் ஒருவன் தன் சேனையுடன் அந்த வழியே வந்தான். துளசிதாஸரை உற்றுப் பார்த்தவாறே அவ்விடத்தைக் கடந்து சென்றான். யாரோ அரசன் ஒருவன் படையுடன் செல்வதாக நினைத்து தாஸர் பேசாமல் இருந்து விட்டார்.
காலை போய் மதியம் கடந்து மாலையும் ஆயிற்று. ராமனின் காட்சி கிடைக்கவில்லை. மனம் வருந்திய தாஸர், மறுநாள் காலை எழுந்ததும் ஸ்ரீ ஆஞ்சநேயரைத் துதிக்க, "நேற்றுக் காலை மன்னன் வேடத்தில் வந்து காட்சி அளித்தது ஸ்ரீராமன்தான். வானரப் படைகளே சேனைகளாக வந்தன. நீ அறியவில்லையா?" என்று கேட்டார்.
'யாரோ மன்னன்' என்று நினைத்து அலட்சியமாக இருந்துவிட்டதை எண்ணி மனம் வருந்தினார் துளசிதாஸர். மறுபடியும் தனக்கு ராமதரிசனம் கிடைக்கவேண்டும் என்றும், தான் விரும்பும் ராம, லக்ஷ்மணராகவே காட்சியளிக்க வேண்டும் என்றும் மாருதியிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார். ஆஞ்சநேயர் அதற்கு உடன்பட்டார். ஸ்ரீராமபிரானிடம் பிரார்த்தித்தார்.
மறுநாள் காலைப்பொழுதில் நதியில் நீராடி எழுந்த துளசிதாஸருக்கு சீதா, லக்ஷ்மண சமேதராகக் காட்சியளித்து ஆசிர்வதித்தார் ஸ்ரீராமபிரான். பெருமகிழ்ச்சி கொண்ட துளசிதாஸர் பகவானின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். முந்தைய ஜென்மத்தில் வால்மீகியாக அவதரித்தவரே இந்த ஜென்மத்தில் துளசிதாஸராகப் பிறந்திருக்கிறார் என்ற உண்மையும் அவருக்கு உணர்த்தப்பட்டது. கலியுகத்தில் ராமநாமத்தைப் பரப்பவே துளசிதாஸர் பிறந்திருப்பதாகக் கூறிய ஆஞ்சநேயர், "அப்பணியைச் செய்து இறுதியில் மோட்சத்தை அடைவாயாக" என்று சொல்லி ஆசிர்வதித்து மறைந்தார்.
அதற்குப் பின் நிரந்தரமாக காசித்தலத்தில் குடியேறிய துளசிதாஸர், ராமபிரானின் அற்புத சரிதத்தை 'ராமசரிதமானஸ்' என்னும் பெயரில் ஒப்பற்ற காவியமாகப் படைத்தார். ராமர்மீது பல்வேறு துதிகளையும் இவர் எழுதியிருக்கிறார். ஆஞ்சநேயர்மீது இவர் எழுதியிருக்கும் 'ஹனுமான் சாலீஸா' பல மொழிகளிலும் புகழ்பெற்ற துதியாகும்.
காசியில் ஒரு மடத்தை நிர்மாணித்து அதன்மூலம் சமயப்பணி செய்து, ராமநாமத்தின் பெருமையைப் பரப்பினார் கோஸ்வாமி துளசிதாஸர். அவர் வாழ்வில் மேலும் பலமுறை காட்சியளித்த ராமபிரான், தன் பக்தனைக் காக்கப் பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்தினார். வாழ்நாளின் இறுதிவரை காசி திருத்தலத்திலேயே வாழ்ந்து, 1623ம் ஆண்டில் அங்கேயே முக்தி அடைந்தார் துளசிதாஸர். அவர் எழுதிய 'துளசி ராமாயணம்' இன்றளவும் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.
பா.சு. ரமணன் |