மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: இழத்தொறும் காதலிக்கும் சூது
தருமன் சூதாட்டத்தில் (வியாச மூலத்தின்படி) சகுனி கேட்காமலேயே நகுலனை வைத்தான்; சூதாட்ட முறைப்படி ஒவ்வொன்றையும் 'இது என்னுடையது, எனக்கு உரிமையுள்ளது' என்று அறிவித்துவிட்டுதான் வைக்கவேண்டும். நகுலனை "இவன் என் தனமென்று அறி" என்று சொல்லித்தான் வைக்கிறான். அடுத்ததாகச் சகதேவனுக்கு இந்த அறிவிப்பு இல்லை. மாறாக, "பந்தயத்துக்குத் தகாதவன். ஆனாலும் இவனை வேண்டாதவனைப் போலப் பணயம் வைத்தாடுகிறேன்" என்று சொல்லி இருவரையும் வைத்து இழப்பதைப் பார்த்தோம். சூதாட்டத்தை எந்த நிலையிலும் நிறுத்தமுடியும். தருமன் இப்போதேகூட, 'இத்தோடு போதும்' என்று சொல்லிவிட்டால் அவனைத் தடுக்கமுடியாது. புஷ்கரனோடு சூதாடுகின்ற நளனிடத்திலே "குவளைப் பணைப் பைந்தாள் குண்டுநீர் நாடா, இவளைப் பணயந்தா இன்று" என்று புஷ்கரன் கேட்கும்போது, "நாம் போதும் என்றான் நளன்" என்று சொல்வதாக நளவெண்பாவில் புகழேந்திப் புலவர் பாடுகிறார். எந்த நிமிடத்தில் தமயந்தியை வைக்கச் சொல்லிப் புஷ்கரன் கேட்கிறானோ (இதுவும் சூதாட்ட நடைமுறைக்குப் புறம்பானது) அந்த நிமிஷத்திலேயே, "சூது ஒழிந்தேன்" என்று நளன் எழுந்துவிடுகிறான்.

இந்த நளசரிதம் பின்னால் வனபர்வத்தில் தர்மபுத்திரனுக்கு பிரஹதஸ்வர் சொல்வதாக மூலத்தில் வருகிறது. "வழிமுறையே வந்த மறையெல்லாம் தந்தான், மொழிமுறையே கோத்த முனி" வியாசரே வந்து தர்மபுத்திரனுக்கு இந்தக் கதையைச் சொல்வதாய் நளவெண்பா மாறுபடுகிறது. இதை விட்டுவிடலாம். தமயந்தியைப் பணயத்தில் வைக்கச் சொல்லி நளனைப் புஷ்கரன் கேட்பது மூலத்தில் இருப்பதுதான். "திரும்பவும் சூது நடக்கட்டும். உனக்கு எதிர்ப்பந்தயம் என்ன இருக்கின்றது? உனக்கு தமயந்தி ஒருத்திதான் மிச்சமாயிருக்கிறாள், மற்ற எல்லாம் என்னால் பறிக்கப்பட்டன. நல்லதென்று எண்ணுவாயானால் தமயந்தி பணயமாக இருக்கட்டும்" என்றான், என நளோபாக்கியானம் சொல்கிறது (நளோபாக்கியானம் அத்: 58, வியாச பாரதம், தொகுதி 2, வனபர்வம், பக்: 212). ஆனால் இவ்வாறு கேட்ட காரணத்தாலும் இந்த ஆட்டம் செல்லாது என்று திரெளபதியை வைத்து இழந்ததைப் பற்றிப் பின்னால் விகர்ணன் சொல்லப் போகிறான். அதைப் பிறகு பார்ப்போம்.

நளசரிதம் தர்மனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருந்திருக்கலாம். கண்ணனுக்குத் தெரிந்திருந்தது. பாண்டவர்களை வனத்தில் சந்திக்கும் சமயத்தில் இதைக் கண்ணன் குறிப்பிடுகிறான். இது சகுனிக்குத் தெரிந்திருந்தாக மூலத்தில் குறிப்பில்லாவிட்டாலும், தெரிந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. நகுல சகதேவர்களை வைத்திழந்த இந்தக் கட்டத்தில் 'சூதாட்டம் போதும்' என்று தர்மன் எழுந்துவிடும் அபாயம் இருக்கிறது என்பதை நன்குணர்ந்த சகுனி. சாமர்த்தியமாக, "ஓ ராஜனே! மாத்ரி புத்திரர்கள் உனக்கு அன்பர்கள். இவர்கள் என்னால் ஜயிக்கப்பட்டார்கள். பீமசேனனும் தனஞ்சயனும் உனக்கு மேற்பட்டவரென்று நான் நினைக்கிறேன்" (ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 88, பக்: 278) என்று தர்மனைச் சீண்டினான். இதைத்தான் பாரதி

"நகுலனை வைத்தும் இழந்திட்டான் - அங்கு
நள்ளிருட் கண்ணொரு சிற்றொளி - வந்து
புகுவது போலவன் புந்தியில் - "என்ன
புன்மை செய்தோம்"என எண்ணினான் - அவ்வெண்ண
மிகுவதன் முன்பு சகுனியும் - "ஐய,
வேறொரு தாயிற் பிறந்தவர் - வைக்கத்
தகுவரென் றிந்தச் சிறுவரை - வைத்துத்
தாயத்தி லேஇழந் திட்டனை".


புன்மையான செயலைச் செய்துவிட்டோமே என்று வருந்திய தர்மனுடைய எண்ண ஓட்டம் அதிகரிப்பதற்கு முன்னால், "திண்ணிய வீமனும் பார்த்தனும், குந்தி தேவியின் மக்கள்; உனை ஒத்தே, நின்னிற் கண்ணியம் மிக்கவர் என்று அவர்தமைக் காட்டுதற்கு அஞ்சினை போலும் நீ" என்று பாரதி விரிக்கிறான். நகுல சகதேவர்களை வைத்து இழந்ததை, "அவர்கள் இன்னொரு தாய்க்குப் பிறந்தவர்கள். ஆகவே சூதில் வைத்துத் தோற்றுவிட்டாய். உன்னைப் போலவே குந்தியின் மக்களான பீமனையும் அர்ஜுனனையும் வைக்கத் தயங்குகிறாய் போலும்" என்று குத்திவிட்டே இந்தச் சூதாட்டத்தில் தர்மனை மேலும் செலுத்துகிறான் சகுனி. இப்போது இன்னொரு தாய் வயிற்றில் பிறந்தவர்களை வைத்துவிட்டதால், இவர்களையும் வைத்தே ஆகவேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தினான். இங்கேயே "இன்ன பொருளை அல்லது இன்னாரை வைத்து ஆடு" என்று கேட்கக்கூடாது. சூதில் யார் பணயம் வைக்கிறாரோ அவருடைய சுயவிருப்பத்தினாலும் முடிவினாலும் மட்டுமே அவ்வாறு செய்யலாம் என்ற நடைமுறை உடைந்துவிடுகிறது. தருமபுத்திரனுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியாலே ஆட்டம் தொடர்ந்தது. தர்மன் தோற்றான். இப்போது "தோலாத திரவியம் ஏதாவது உனக்கு இருக்குமானால் சொல்லு" என்று தர்மனைப் பார்த்துக் கேட்கிறான். (ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 88 பக்: 278). இப்போது தருமனுக்குத் தன்னையே பணயமாக வைப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. இந்திரஜித்தையும் போரில் இழந்த ராவணனால் யுத்தத்திலிருந்து பின்வாங்க முடியாத நிலை ஏற்பட்டதைப் போல ஆயிற்று. (முதற்போர்புரி படலத்துக்குப் பிறகு இராவணன் களத்துக்கு வரவே இல்லை; மூலபல வதைப் படலத்தில் வந்தாலும், ராமனை எதிர்த்துப் போரிடவில்லை. அவனுடைய நெருக்கடி வேறுமாதிரியானது என்றாலும், இரண்டுமே 'நெருக்கடி' என்ற அளவிலே ஒத்திருக்கின்றன).

இந்தக் கட்டத்தில் தர்மன் சகுனி கேட்காமல் தானாகவே முன்வந்து "என் சகோதரர்கள் எல்லாரிலும் நான் சிறந்தவன். அவர்களுக்கு அன்பன். நான் ஜயிக்கப்பட்டு என்னை நிர்ப்பந்தப்படுத்தினால் நானே ஊழியஞ் செய்வேன்" (மேற்படி அத்தியாயம்) என்று தன்னையே பணயமாக வைக்கிறான். இங்கே தருமன் தன்னை உயர்வாகச் சொல்லிக் கொள்வது, சூதில் வைக்கப்படும் பொருளைப்பற்றிய உயர்வான செய்திகளைச் சொல்லியே வைக்கவேண்டும் என்ற கருத்தால். இதற்கு வேறு பொருளில்லை. இப்படித் தன்னையே வைத்ததிலுள்ள அழுத்தம் மறைமுகமானது என்றாலும், இந்த ஆட்டத்தில் 'இன்னாரை வை' என்று சகுனி கேட்கவில்லை. தருமன் தன்னைத் தானே பணயமாக வைத்திழந்ததும் சகுனி தன் வலையை விரிக்கிறான். "அதாவது உன்னுடை மனைவி; பாஞ்சாலராஜன் புத்திரியான கிருஷ்ணையைப் பந்தயத்தில் வை; அவளால் உன்னையும் மீட்டுக்கொள்" என்று சொன்னான். (மேற்படி அத்தியாயம்)

இப்போது தர்மன் மிக நெருக்கடியான கட்டத்துக்குத் தள்ளப்படுகிறான். ஒருபுறம் நான்கு தம்பியரையும் தன்னையும் வைத்திழந்த நிலை. இன்னொருபுறம் பாஞ்சாலியை வைத்து ஆடினால் வெல்ல இடமிருக்கிறது. வென்றுவிடலாம் என்ற மன அழுத்தம் உண்டாகிவிடுகிறது. தோற்பவனுக்குத்தான் ஆட்டத்தின் வெறி அதிகரிக்கும். இதைத்தான் வள்ளுவர்:

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்


என்கிறார். எப்படி ஒருவன் தோற்கத் தோற்க அவனுக்கு சூதாட்டத்திலிருந்து பின்வாங்க முடியாத நிலை ஏற்படுகிறதோ, அப்படி உடலை நோய் வாட்ட வாட்டத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற தாகம் அதிகரிக்குமாம். அப்படித்தான் அதிகரித்தது தருமனுக்கு. "மின்னும் அமுதமும் நிகர்த்தவள் இவர் மேவிடும் தேவியை வைத்திட்டால், அவள் துன்னும் அதிட்டமுடையவள், இவர் தோற்றதனைத்தையும் மீட்டலாம்" என்று பாரதி இந்த இடத்தை மேலும் தெளிவாக்குகிறான். வென்றுவிடுவோம் என்று நினைத்துத்தான் அனைவரும் போரிலும் இறங்குகிறார்கள்; சூதிலும் இறங்குகிறார்கள். இந்த ஆட்டத்தின் முடிவு நமக்குத் தெரியும். இதிலுள்ள நுட்பமான விவரங்களை மட்டும் எடுத்து அலசுவோம்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com