தனக்கென ஒரு தனிப்பாணியில் இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிவந்தவர் ஐராவதம். இயற்பெயர் ஆர். சுவாமிநாதன். இவர் மே 13, 1945 அன்று திருச்சியில் பிறந்தார். லால்குடியை அடுத்த ஆங்கரை என்னும் சிற்றூரில் பள்ளிப்பருவம் கழிந்தது. பள்ளிக் காலத்தில் வாசித்த தினமணி எழுத்தார்வத்திற்கு விதையானது. பொருளாதாரச் சூழலால் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. அங்கே ஆனந்தவிகடன் இவரது வாசிப்பு ஆர்வத்திற்குத் தீனிபோட்டது. த.நா. குமாரசாமி, தேவன், லட்சுமி ஆகியோரின் எழுத்துக்கள் பரிச்சயமாகின. தொடர்ந்து அமெரிக்க நூலகத்திற்கும், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திற்கும் சென்று வாசிப்பைத் தொடர்ந்தார். தீவிரமான எழுத்துக்களோடு ஆல்டஸ் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம் போன்றோரது எழுத்துக்களும் பரிச்சயமாகின. 'காவேரி', 'இலக்கியப்படகு' போன்ற சிற்றிதழ்களின் தீவிர வாசிப்பால் எழுத்தார்வம் சுடர் விட்டது. க.நா.சு. எழுதிய 'அசுரகணம்' இவருள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தானும் எழுதத் துவங்கினார். 'நடை' சிற்றிதழில் இவரது 'ஒரு வேளை' என்ற சிறுகதை வெளியாகிப் பரவலான கவனம் பெற்றது. எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான ந. முத்துசாமி அக்கதையை விமர்சித்து இவருக்கு ஒரு கடிதம் எழுத, அது மிகுந்த உத்வேகத்தைத் தரவே, தொடர்ந்து எழுதினார்.
ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வந்த இவர் தனது ஓய்வுநேரம் முழுவதையும் வாசிப்பிலும் எழுத்திலுமே செலவிட்டார். 'கசடதபற' இதழில் கவிதை, விமர்சனக் கட்டுரை, நூல்மதிப்புரை, சிறுகதை என எழுத்துப் பயணத்தைத் தொடர்ந்தார். 'கெட்டவன் கேட்டது' என்ற சிறுகதையை தனது 'கவனம்' இதழில் வெளியிட்டார் கவிஞர் ஞானக்கூத்தன். கணையாழியில் இவரது சிறுகதைகள் தொடர்ந்து வெளியாகின. தீபம் இதழில் இவர் எழுதிய 'இந்த மண்ணும் இன்னொரு மண்ணும்', 'போன அவன் நின்ற அவள்' போன்ற சிறுகதைகள் நா.பா.வின் பாராட்டையும், வாசக கவனத்தையும் ஒருங்கே பெற்றன. 'போன அவன்....' சரஸ்வதி ராம்நாத்தால் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. தீபத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கதைகள் எழுதியிருக்கிறார். எழுத்து, சுதேசமித்திரன், கல்கி, சாவி, தினமணி கதிர், அமுதசுரபி, சுபமங்களா, ஞானரதம், பிரக்ஞை, புதிய பார்வை, குங்குமம் உள்ளிட்ட பல இதழ்களில் இவரது கதை, கவிதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. பணி ஓய்வு பெற்றபின் அழகியசிங்கரின் 'நவீன விருட்சம்' சிற்றிதழில் தொடர்ந்து நூல் விமர்சனம், கவிதை, சிறுகதை, கட்டுரை எனத் தீவிரமாகத் எழுதத் துவங்கினார். உலக சினிமாவின் வரலாற்றைத் தொடராக 'சித்ராலயா' இதழில் எழுதியிருக்கிறார். 'பிரக்ஞை' இதழில் இவர் எழுதியிருக்கும் மொழிபெயர்ப்புப் படைப்புகள் முக்கியமானவை. ஸ்வராஜ்யா ஆங்கில இதழில் இவரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. தெலுங்கிலும் இவரது சிறுகதைகள் மொழிபெயர்ப்புக் கண்டுள்ளன.
'மாறுதல்' என்பது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும். அதில் இடம்பெற்றிருக்கும் 'மாறுதல்' ஒரு முக்கியமான சிறுகதை. காதலை மையமாகக் கொண்டது. ஓர் அலுவலகத்தில் பணியாற்றும் மணமாகாத இளம்பெண்களைப் பற்றிய சக அலுவலர்களின் பார்வையும், எண்ணங்களும் என்னவாக இருக்கின்றன, இறுதியில் என்னவாக மாறுகின்றன, அந்தப் பெண்கள் மணமானதும் அடையும் 'மாறுதல்' என்ன என்பவற்றை இயல்பான நடையில் விவரித்திருக்கிறார் ஐராவதம். 'இந்த மண்ணும் இன்னொரு மண்ணும்' சிறுகதை, இந்தியாவா, ஜெர்மனியா எதிர்கால வாழ்க்கைக்கு உகந்தது எது என்று படித்த இரு நண்பர்களின் உள்ளத் தடுமாற்றத்தையும், அவர்களில் ஒருவர் எடுக்கும் முடிவையும் காட்டுகிறது. ஒரு தையல்கடையில் துணி தைக்கக் கொடுத்த ஒருவருக்கு நேர்ந்த அனுபவத்தைச் சிரிப்பும் சிந்தனையுமாகக் கூறுகிறது 'சின்னமீனும் திமிங்கலமும்'. 'சாந்தா பார்த்த சினிமா' ஒரு பெண்ணின் மனமாற்றத்தை உள்ளத்தை உருக்கும் வகையில் காட்சிப்படுத்துகிறது. மனிதர்களுக்கு இருக்கும் ஈகோவும், பிடிவாதமும் எந்தவிதத்தில் பாதிப்புகளைத் தருகின்றன, அது காதலை எப்படி பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது 'போன அவன் நின்ற அவள்' சிறுகதை. 'நிலம் நீர் ஆகாயம்' யதார்த்தத்தை நகைச்சுவையுடன் அதே சமயத்தில் முகத்தில் அறையும் தீவிரத்துடன் சொல்கிறது. 'சந்தேகம்' என்பது வந்தால் அது குடும்ப உறவுகளுக்குள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது என்பதைச் சொல்கிறது 'மன்னி' சிறுகதை.
ஐராவதம், சிறுகதைகளைப் பற்றிக் கூறும்போது, "சிறுகதை ஆசிரியன் முழுமையான வாழ்க்கைத் தத்துவம் கொண்டிருக்கத் தேவையில்லை. சில காட்சிகளைச் சித்திரங்களாக்குகிற, சில சலனங்களை மன ஏட்டில் பதிவு செய்கிற ரசவாத வித்தை மட்டுமே அவன் செய்வது. நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நெகிழ்ச்சிகளைப் பிரதிபலிப்பது மேலானது. சொற்கள் சூன்யத்திலிருந்து மலர்ந்து மீண்டும் சூன்யத்தில் மறைய எத்தனிப்பவை. படைப்பிலக்கியத்தின் வெற்றியே வாசகனின் கலாரசனையில் தான் நிறைவு பெறுகிறது. ஒரு கை தட்டினால் ஒலி எழும்பாது என்னும் ஜென் தத்துவத்தின் மகா வாக்கியத்தை இங்கு நினைவில் கொள்வது நல்லது" என்கிறார். படைப்புகளைப் பற்றிக் கூறும்போது, "தர்க்க நியதிகளுக்கு அப்பாற்பட்டவை கலையும் அதன் தத்துவமும், பிரத்தியட்சத்தின் பரிமாணத்தை கலைஞன் காட்டுவதாகச் சொல்வது தவறு; சாட்சாத்காரமாக நாம் உணர்வதே பிரம்மத்தின் பிரதிபலிப்புதான் என்னும்போது பிரதிபலிப்பின் பிரதிபலிப்பாக கலை பரிணமிக்கிறது. கலைஞன் சிருஷ்டிக்கும் உலகம் ஒருவகையான மாயா உலகமே." என்கிறார்.
தற்கால தமிழ்ச் சிறுகதைகள் என்ற Writer's Workshop வெளியிட்டுள்ள தொகுப்பு நூலிலும் இவரது சிறுகதை இடம் பெற்றுள்ளது. எழுத்தாளர்களின் எழுத்தாளரான அசோகமித்திரனின் மனம் கவர்ந்த எழுத்தாளரும் கூட. "எனது சமகால எழுத்தாளர்களில் ஜி. சுவாமிநாதன், ஐராவதம் என்ற ஆர்.சுவாமிநாதன் என இருவர் என் மனம் கவர்ந்தவர்கள்" என்கிறார் அசோகமித்திரன், தென்றல் பேட்டியில். (பார்க்க)
ஐராவதம், தன் எழுத்தைப் பற்றிக் கூறும்போது, "கிரேக்கத் தத்துவஞானி ஒருவன் சொன்னான், உலகம் ஒரு கண்காட்சி மைதானம். பத்து சதவிதம் பேர் இதில் வித்தை காட்ட, வேடிக்கைகள் செய்ய, வியாபாரம் பண்ண முயற்சிக்கிறார்கள். தொண்ணூறு சதவிகிதம் பேர் பார்வையாளர்கள். அந்தப் பார்வையாளர்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன். நான் ஒரு dabbler in literature. ஆங்கில இலக்கியத்தில் Max Beerbohm என்று ஒரு எழுத்தாளர் பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். தமிழ் இலக்கியத்தின் மாக்ஸ் பியர்பாம் ஆக அறியப்படுவதையே நான் விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் 2.4.2014 அன்று சென்னையில் இவர் காலமானார். 'நாலு கிலோ அஸ்கா', 'கெட்டவன் கேட்டது' போன்றவை இவரது முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள். 'தர்ம கீர்த்தி', 'ஆர் சுவாமிநாதன்', 'வாமனன்' எனப் பல புனைபெயர்களில் எழுதியிருக்கிறார். இவரது கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், பிற சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து 'ஐராவதம் பக்கங்கள்' என்ற பெயரில் நூலாகக் கொண்டுவர உள்ளார் கவிஞர் அழகியசிங்கர்.
அரவிந்த் |