ஜனவரி 21, 2017 அன்று அரோரா மெட்டியா வேல்லி உயர்நிலைப் பள்ளியில் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருவிழா, ஆடல், பாடல், நாடகம், நகைச்சுவை, பட்டிமன்றம் என்று குதூகலமாக நடந்தேறியது. கிராமத் திருவிழாவிற்குச் செல்வதுபோல் பட்டாடை உடுத்திய 1000 சிகாகோ தமிழர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது.
'சமூக வலைத்தளங்கள் வரமே! வருத்தமே!' என்ற தலைப்பில் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. தலைவரின் தமிழிலும், சிகாகோ பேச்சாளர்களின் நகைச்சுவை மழையிலும் நனைந்தனர் வந்திருந்தோர். 'அசத்தப் போவது யாரு?' என்று மதுரை முத்துவும், 'ஜோடி நம்பர் 1' அமுதவாணனும் போட்டி போட்டுச் சிரிக்க வைத்தனர். மினசோட்டா தமிழ்ச் சங்கத்தினரின் கரகாட்டமும் மக்களை மகிழ்வித்தது.
சிகாகோ தமிழர் வழங்கிய பல்சுவை நிகழ்ச்சியில் பாரதி, பாரதிதாசன் பாடல்களுக்கு பரதம், இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை வெளிப்படுத்திய குழு நடனம், மற்றும் கவிஞர் நா. முத்துக்குமார் பாடல்களுக்கு நடனம் ஆடி அர்ப்பணித்தனர். தவிர, குறுநாடகம், முதல்முறையாக மீசைப்போட்டி எல்லாம் அவையோரைக் கலகலப்பில் ஆழ்த்தின.
அண்மையில் மறைந்த முன்னாள் உறுப்பினர் டி.வி. ராமச்சந்திரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அமெரிக்கக் காங்கிரசின் முதல் தமிழ் உறுப்பினர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
விழாக் குழுவினரான திருமதி. லட்சுமி ஆனந்தன், திரு. பிரசாத் ராஜாராமன் மற்றும் திரு. ராஜேஷ் சுந்தர்ராஜன் ஆகியோருடன் சங்கச் செயற்குழு உறுப்பினர்கள் உழைத்து விழாவை வெற்றிகரமாக ஆக்கினர்.
மணி குணசேகரன், இல்லினாய்ஸ், சிகாகோ |