டொரான்டோ: முதல் தமிழர் மரபு மாநாடு 2017
ஜனவரி 28, 2017 அன்று 'தமிழர் மரபு மாநாடு' முதல்முறையாகக் கனடாவின் டொரான்டோவில் கிறித்துவக் கல்லூரி அரங்கில் இரண்டு நிகழ்வுகளாக நடந்தது. விழாவில் பங்கேற்கத் தமிழ்நாட்டில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மென்பொருள் மனிதவள நிறுவனர் பிரபாகரன் முருகையா, டிவி அசத்தப்போவது யாரு புகழ் கலைஞர்களான வெங்கடேஷ், கிறிஸ்டோபர், சசி மற்றும் சுட்டி அரவிந்த் வந்திருந்தனர்.

ஜனவரி 28, சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு மாநாடு தொடங்கியது. கனடிய தேசியகீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடியபின், திருமதி. பார்வதி வள்ளிக்கண்ணன், திருமதி. நிரோதினி பரராஜசிங்கம், திருமதி. மணிமொழி வரதராஜன், திரு. வள்ளிக்கண்ணன் மருதப்பன், திரு. சங்கர் நல்லதம்பி, திரு. ஆளூர் ஷாநவாஸ் மற்றும் திரு. பிரபாகரன் முருகையா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டைத் தொடங்கிவைத்தனர். பின்பு ஆளூர் ஷாநவாஸ் தமிழ் மரபு, கலாசாரம், பண்பாடு என்ற தலைப்பில் சிறப்பான உரையாற்றினார். அவர் தன் உரையில், அழிந்துவரும் தமிழ் மரபுகளை மீட்டெடுக்கத் தமிழர்கள் ஒன்றாகப் போராடவேண்டும் என்று வலியுறுத்தினார். கனடா அரசாங்கம் தமிழ் மரபுத் திங்கள் என அறிவித்திருப்பதைப் பாராட்டினார். அமெரிக்காவில் தொழில் செய்துவரும் பிரபல தொழிலதிபர் பிரபாகரன் முருகையா, தமிழர்களுக்கு தொழில் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அவரது பேச்சு இளைய தலைமுறைக்குப் பயனுள்ளதாக அமைந்தது. நிரோதினி பரராஜசிங்கம், ஆளூர் ஷாநவாஸ், பிரபாகரன் முருகையா ஆகியோர் 'தமிழ் மரபுக் காவலர்' என்ற பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டனர்.

மாலை 4:30 மணிக்கு டிவி புகழ் கலைஞர்களான வெங்கடேஷ், கிறிஸ்டோபர், சசி மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சியும் இந்திய டொரொண்டோ பாடகர்கள் கலந்துகொண்ட லத்தன் பிரதர்ஸ் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகச்சிகளை சுதாகரன் மற்றும் சுஹாசினி தொகுத்து வழங்கினார்கள். விழா ஏற்ப்பாட்டைத் தலைமையேற்று வள்ளிக்கண்ணன், வரதராஜன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தார்கள். வலைமனை பார்க்க: www.canadatamilsangam.com

வள்ளிக்கண்ணன் மருதப்பன்,
கனடா.

© TamilOnline.com