ஃபிப்ரவரி 4, 2017 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் பொங்கல் விழாவை நாதஸ்வரக் கச்சேரி, வாழையிலை விருந்துடன் அருமையாகக் கொண்டாடியது. லிட்டில்டன் உயர்நிலைப் பள்ளியில் மதியம் 2:30 மணிமுதல் இரவு 10:00 மணிவரை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மகிழ்ந்தனர். பாரம்பரிய நடனம், திரை நடனம், பாடல்கள், கருவியிசை, நாடகம் என்று பல்வகை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றன. புதியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜோடிப்பொருத்தம் விளையாட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஈழ நாதஸ்வர, தவில் கலைஞர்கள் அணிவகுத்து மேடையேறிக் கச்சேரியைத் தொடங்கியது சிறப்பு. தில்லானா முதல் மங்களம்வரை அதே விறுவிறுப்போடு வாசித்ததோடு, விரும்பிக் கேட்ட சினிமா பாடல்களும் வாசித்தனர்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ரஞ்சனி சைகல், ராம் சுந்தரம், முரளி சேதுமாதவன், தேவி சுந்தரேசன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினர்.
நம் நாட்டவரோடு, அமெரிக்கர்களும் வாழையிலையில் இரவுணவை உண்டு தலையில் மல்லிகைப்பூ சூடி மகிழ்ந்தனர்.
பமிலா, பாஸ்டன் |