கோவையிலுள்ள ஈஷா யோக மையத்தில் 112 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான 'ஆதியோகி' சிலையை சிவராத்திரி அன்று (ஃபிப்ரவரி 24, 2017) பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் முன்னிலையில் திறந்துவைத்தார். அந்த நன்னாளில் சத்குரு அவர்களுடன் அருந்ததி சுப்பிரமணியம் இணைந்து எழுதிய 'ஆதியோகி' என்ற நூலையும் பிரதமர் வெளியிட்டார். அப்போது பேசிய திரு. மோதி, "யோகம் புராதனமானது, அதே சமயத்தில் மிக நவீனமானது. அது பரிணமித்துக்கொண்டே இருப்பது. அதன் சாரம் ஒருபோதும் மாறுவதில்லை. இதை நான் கூறக் காரணம், அதன் சாரத்தை அப்படியே பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்பதால்" எனக் குறிப்பிட்டார்.
சத்குரு அவர்கள் தமது அருளுரையில், "மனிதனின் நலம் அவனுக்குள்ளிருந்துதான் பிறக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. யோக அறிவியலின் ஆய்விலும் பரவலிலும் ஆதியோகி இணையற்ற பங்காற்றியுள்ளார்" என விளக்கிப் பேசினார்.
சிவராத்திரி இரவு முழுவதும் நடந்த இந்த பக்திக் கொண்டாட்டத்தில் பல்வேறு மாநில, மத்திய அமைச்சர்களுடன் லட்சக்கணக்கான இந்திய, வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்றனர்.
இதே ஆதியோகி சிலை 21 அடி உயரம் கொண்டதாக, டென்னஸியின் ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்சஸ் மையத்திலுள்ள யோகபீடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
மேலும் அறிய: isha.sadhguru.org/msr |