தமிழ்நூற்கடல் என்றும் தமிழ்ப் பேராசான் என்றும் தமிழறிஞர்களால் போற்றப்பட்ட திரு. தி.வே. கோபாலய்யர் (82) ஏப்ரல் 1 அன்று காலமானார். சிறிது காலமாக உடல் நலம் குன்றி இருந்த அவர், ஸ்ரீ ரங்கத்தில் தனது மகள் வீட்டில் மரணமடைந்தார்.
மிகச் சிறந்த தமிழறிஞர்களுள் ஒருவரான இவர், ஆரம்பத்தில் தஞ்சாவூரிலும் திருக்காட்டுப்பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் திருவையாற்றில் உள்ள கல்லூரியில் பிரின்சிபால் ஆகவும், திருப்பனந்தாளிலும் பணியாற்றி பின்னர், புதுவையில் உள்ள பிரெஞ்சு நிறுவனமான Ecole Francaise d'Extreme-Orient (EFEO) நிறுவனத்தின் தலைவராக இருந்த பிராங்வா க்ராஸ் அவர்களின் அழைப்பினை ஏற்று அந்த நிறுவனத்தில் 1978 முதல் ஆசிரிய ராகவும், ஆராய்ச்சியாளராகவும், நூல் பதிப்பாளராகவும் பணி புரியத் தொடங் கினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்தார். தற்பொழுது EFEO நிறுவனத்துக்காக, தேவாரம் முழுவதையும் பண்முறைப்படியும், ராக அடிப்படையிலும் இசையாக இலக்க முறைப் பதிவு (டிஜிடைஸ்) செய்யும் பணியில், ழான் லுக் ஷெவிலார்டிற்கு (Jean-Luc Cheveillard) உதவினார்.
தமிழ், பிரெஞ்ச், சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் கோபாலய்யர் வல்லவர். இலக்கணம், இலக்கியம், சமயநூல்கள் போன்றவற்றில் ஈடு இணை யில்லாத புலமை மிக்கவர். குறிப்பாக, வைணவ இலக்கியங்களில் இவர் அளவற்ற ஆய்வுகள் செய்தவர். புதுவை பிரெஞ்சு நிறுவனத்திற்காக மாறன் அகபொருள் பற்றியும் திருப்பதிக் கோவை பற்றியும் ஆய்வுப் பதிப்புகள் கொணர்ந்தவர். அது போக தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்திற்காக, இவர் பதிப்பித்த இலக்கண விளக்கம் (7 தொகுதிகள்), இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், வண்ணத்திரட்டு போன்ற நூல்கள் அவரது புலமைக்கும் திறமைக்கும் நுண்ணாற்றலுக்கு சான்று பயப்பவை. வெளி நாட்டு மாணவர்கள் பலருக்குத் தமிழ் பயிற்றுவித்திருக்கிறார். அவரிடம் தமிழ் பயின்றவர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றனர். அளவற்ற நினைவாற்றல் கொண்டவர். தேவாரம், திவ்யப் பிரபந்தம் மட்டுமல்லாது இராமாயணம், சீவகசிந்தாமணி ஆகியவற்றிலும் அவருக்குத் தனித்த ஈடுபாடும் அளவற்ற புலமையும் உண்டு.
உ.வே.சா.வுக்கு ஒப்பாகக் கருதப்படும் தமிழ் நூல் ஆராய்ச்சியாளரை, பதிப்பாசிரியரை, உரையாசிரியரை, தமிழ்ப்பேரறிஞரை, சொற்பொழிவாளரை, தமிழாசிரியரை தமிழகம் இழந்துள்ளது ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.
அரவிந்த் சுவாமிநாதன் |