தெரியுமா?: ஹரிகிருஷ்ணனுக்கு 'சேஷன் சன்மான்'
தென்றலில் பல ஆண்டுகளாக 'ஹரிமொழி' இலக்கியக் கட்டுரைத் தொடரை எழுதிவரும் திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு 'சேஷன் சன்மான்' விருது சென்னையில் வழங்கப்பட்டது. சிறந்த கவிஞரும் தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி கொண்டவரும், பாரதி, கம்பன், வள்ளுவன் ஆகியோரிடத்து ஆறாக் காதலும் வித்தகமும் படைத்தவருமான ஹரி கிருஷ்ணனுக்கு ஃபிப்ரவரி 14 அன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் இது வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கு இந்திய மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் தலைமை தாங்கினார். விருதுடன் ரூ.10,000 பணமுடிப்பும் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டது. இதே விழாவில் ஆன்மீக உரையாளர் திரு. பி. சுவாமிநாதன் அவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.

2017 ஜனவரி மாதத்தில் ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு 'கவிப்பெருஞ்சுடர்' விருதை, கவிமாமணி இலந்தை ராமசாமி அவர்களின் தலைமையிலான 'சந்தவசந்தம்' கவிஞர் குழாம் வழங்கியது இங்கு நினைவுகூரத் தக்கது.

முந்தைய ஆண்டுகளில் கலைமாமணி வில்லிசைக் கலைஞர் திரு. சுப்பு ஆறுமுகம், குழந்தை எழுத்தாளர் திரு. உமாநாத் விழியன், பேராசிரியர் மா. வைத்திலிங்கன், பத்திரிகையாளர் திரு. டி.ஆர். ஜவஹர் ஆகியோருக்கு 'சேஷன் சன்மான்' வழங்கப்பட்டுள்ளது.

திரு. தருவை வெங்கடேசுவர ஐயர் அனந்தராமசேஷன் (02.14.1923–11.22.2010) அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அவரது குடும்பத்தினரால் 'சேஷன் சன்மான்' வழங்கப்படுகிறது. இசைக்கவி ரமணன், சேஷன் அவர்களின் புதல்வராவார். அமரர் சேஷன் ஓர் ஆசுகவி; வடமொழியிலும், ஆங்கிலத்திலும் பேரறிஞர்; தமிழில் மூன்று நூல்களும், தொடர் கட்டுரைகளும் எழுதியவர். சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராகவும், தி ஹிண்டு நாளிதழில் உதவி ஆசிரியராகவும், நியூஸ் டுடே/மாலைமலர் ஆகியவற்றிலும் பணியாற்றியவர்.

© TamilOnline.com