பக்தன்
சிறந்த பக்தையான ஒரு குடும்பப் பெண்மணி இருந்தாள். அவளது கணவனோ ஒருபோதும் கடவுள் பெயரை உச்சரித்ததே கிடையாது, கோவிலுக்குச் சென்றதில்லை, மகான்களை தரிசித்ததில்லை. மனைவிக்கு இது மிகவும் கவலையைத் தந்தது. "கடவுளே, என்ன சோதனை இது! என் கணவருக்கு நல்லபுத்தியைக் கொடு" என்று தினமும் பிரார்த்தனை செய்தாள். கணவன் உலக வாழ்க்கையில் உழல்வதாக அவள் கருதினாள்.

கணவன் ஒருநாள் படுக்கையில் புரண்டு படுக்கும்போது "ராமா!" என்றான். அப்போது மனைவி ஒன்றும் கூறவில்லை. காலையில் எழுந்ததும் வீட்டுக்குத் தோரணம் கட்டி அலங்கரித்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்தாள். மங்கள வாத்தியங்கள் முழங்கின. வீடே திருவிழாக்கோலம் பூண்டது.



கணவன் விழித்தெழுந்தான். "ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? என்ன கோலாகலம்?" என்று விசாரித்தான். அவரது கைகளை மனைவி பற்றிக்கொண்டு, "கடவுள் என் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்துவிட்டார். நீங்கள் ஒருநாள்கூட ராமா, கிருஷ்ணா என்று கூறி நான் கேட்டதே இல்லை. உங்கள் வாயிலிருந்து ராமா என்ற சொல்லை நேற்றுத்தான் கேட்டேன்" என்றாள். கணவன் அதற்கு, "என் வாய்வழியே ராமர் வெளியே போனாரா! இதுவரையில் பத்திரமாக என் இதயத்தில் யாருமறியாமல் பூட்டியல்லவா வைத்திருந்தேன். இந்த உறவு எனக்கும் ராமனுக்கும் மட்டுமே அல்லவோ தெரியும்" என்று மிகத்துன்பத்தோடு கூறியபடியே உயிரை நீத்தான்.

அவனும் புஷ்டிஜீவனே. அதாவது, பார்ப்பதற்கு அவன் உலக வாழ்க்கையில் உழல்வதுபோலத் தோன்றும். அவன் எந்த நாமத்தை உச்சரிக்கிறான், எந்த உருவத்தை மனதில் பதித்து வைத்திருக்கிறான் என்பதை யாரும் அறியமாட்டார். இறைவன் மட்டுமே அறிவார்.

நன்றி: சனாதன சாரதி, அக்டோபர் 2012

© TamilOnline.com