வங்கிக் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா. அவள் எழுதி வெளியிட்ட இரண்டு நாவல்களின் ராயல்டி தொகை கணிசமாகச் சேர்ந்திருந்தது. லலிதாவும் அவள் கணவரும் வசித்தது டாலஸ் கவுன்டியின் அருகேயுள்ள பிளேனோவில். இங்கே தன் கணவருடன் செட்டிலாகி நாற்பது ஆண்டுகள் ஆகியிருக்கும்.
முதலில் பென்சில்வேனியாவில்தான் குடியேறினர். மிக அழகான இடம். ஆனால் குளிருக்கும் டிசம்பர்முதல் கொட்டும் பனிப்பொழிவுக்கும் பயந்து, டெக்சஸ் மாகாணத்தில் வேலைதேடி வந்துவிட்டார் மாதவன். கணக்கிலும், பௌதிகத்திலும் டாக்டரேட். நாற்பதாண்டுக்கு முன் வேலை கிடைப்பதில் அவ்வளவு போட்டியில்லை. லலிதாவும் எம்.எஸ். படித்து, பி.எச்டி. முடித்து, ஒரு கல்லூரியின் உதவிப்பேராசிரியர் வேலை வாங்கிவிட்டாள்.
ரோஷன், ரோஷிணி என்ற இரு குழந்தைகள் பிறந்தனர். இருவரும் வளர்ந்து, நல்லமுறையில் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. அதனால் லலிதாவுக்கும், மாதவனுக்கும் வங்கியில் நிறையப் பணம் சேர்ந்தது. ஓய்வுநேரத்தில் நாவல்கள் எழுதித் தமிழ்நாட்டிலுள்ள பதிப்பகங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தாள் லலிதா. முதலில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. நாலைந்து நாவல்கள் வெளியான பிறகு நல்ல வரவேற்பும் கிடைத்தது, ராயல்டியும் கிடைத்தது. இருவர் கணக்கிலும் இருந்த சேமிப்பில், சென்னையில் தங்கள் வீட்டருகில் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் கட்டவேண்டுமென்று மாதவன் மிகவும் ஆசைப்பட்டார். அவர் விருப்பத்திற்கு மாறாக லலிதா இதுவரை ஏதும் விரும்பியதில்லை. பிள்ளைகளும் கைநிறயச் சம்பாதித்ததால் ஒரு கணிசமான தொகையைக் கொடுத்தனர்.
லலிதாவும், மாதவனும் சென்னை வந்து சேர்ந்தனர். லலிதாவிற்கு, அவள் தந்தை திருமணப் பரிசாகக் கொடுத்த காலிமனை ஒன்று அவர்கள் வீட்டருகில் இருந்தது. சுமார் இரண்டு கிரவுண்டு இருக்கும். லலிதாவின் அப்பாவிற்கும் பிள்ளையார்தான் இஷ்டதெய்வம். கையிலிருந்த பணத்தைப் போட்டு அந்தத் காலிமனையில் ஒரு பிள்ளையார் கோவில் கட்டத் தீர்மானித்தனர்.
ஆனால் எல்லாக் கணக்கையும் மாற்றி, புதுக்கணக்கு போடுவதுதானே இறைவனின் விளையாட்டு! இவர்கள் வீட்டிற்குச் சற்று தூரத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த புறம்போக்கு நிலம் சுமார் ஐந்து ஏக்கர் இருந்தது. அதில் நரிக்குறவர்கள் கூடாரம் அடித்தும் சிலர் மண்சுவர் வைத்து வீடுகட்டியும் வாழ்ந்து வந்தனர். இரவெல்லாம் பாட்டும், ஆட்டமும்தான்.
லலிதாவிற்கு அந்த இனப் பெண்களைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். முழுநீளப் பாவாடையும், சிறிய ஜாக்கெட்டும், மெல்லிய தாவணியும், பலவண்ண மணிகளும் அணிந்திருப்பார்கள். ஜாக்கெட்டின் முதுகுப் பாகத்தில் துணியே இல்லை. மூன்று கயிறுகள்தான் இணைத்திருந்தன. பொன்னாலான நகைகளைவிட அவர்கள் மணியினால் கோத்திருந்த ஆபரணங்கள் அழகாக இருந்தன.
ஆண்கள் அதைவிட வேடிக்கையாக இருந்தனர். கழுத்திலும், கைகளிலும் மணிகளும், பலவண்ணக் கயிறுகளும், குறைந்த அளவே ஆடைகளும் அணிந்திருந்தனர். பகலில் பெண்கள் மணிமாலைகள், சேஃப்டிபின்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, சிறிய குழந்தைகளைப் பக்கவாட்டில் ஒரு பைபோல் துணியில் தொங்கவிட்டவாறு பிச்சை எடுக்க வருவார்கள். ஆண்களும் நீர்நிலைக்கு அருகிலுள்ள பறவைகளை அடித்து விற்று வருமானம் தேடுவார்கள். ஒருபிடி சோற்றுக்காகப் பல சினிமாப் பாட்டுக்கள் பாடி ஆண்களும், பெண்களும் நடுவீதியிலேயே நடனமாடுவர்.
லலிதாவுக்கு அவர்களைப் பார்க்க மிகவும் பரிதாபமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். உலகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது! ஜாதிகள் ஒழிந்துவிட்டன என்கிறார்கள். மேடைபோட்டுத் "தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று முழங்குகின்றார்கள். இந்த வளர்ச்சியெல்லாம் நரிக்குறவர்கள் சமுதாயத்திற்கு எட்டவில்லையா? இப்போதெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் கூட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். படித்து அரசாங்கத்தின் உயர்பதவிகளில் இருப்பதாகப் படித்திருக்கிறாள். ஆனால் இவர்கள் மட்டும் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அதே டால்டா டப்பாவும், பாசிமணியும் ஊசியுமாகச் சுற்றுகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
ஒருநாள் லலிதா தானெழுதிய இரண்டு நாவல்களை எடுத்துக்கொண்டு மைலாப்பூரில் உள்ள பதிப்பத்துக்குக் கணவருடன் சென்றாள். அங்கே ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வாசுகி என்பவர் புத்தகங்கள் வாங்க வந்திருந்தார். பதிப்பக நிறுவனர் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது லலிதா நரிக்குறவர்களைப் பற்றி அவரிடம் விவரித்தாள்.
"எல்லோரும்கடவுளின்குழந்தைகள்என்கிறார்கள். ஆனால் இந்த நரிக்குறவர்கள் மட்டும் கடவுளாலும் கைவிடப்பட்டவர்களா?" என்று மிகுந்த வேதனையுடன் கேட்டாள். "ஜாதியின் பெயரால் எவரையும் அவமானப்படுத்தினால் தண்டனை கொடுக்கிறார்களே! ஆனால் இவர்களுக்கு மட்டும் ஏன் அது புரியவில்லை? தங்களை மற்றவர்கள் ஒதுக்கிவைக்கிறார்கள் என்றுகூட இவர்கள் வருத்தப்படவில்லை" என்று ஆதங்கப்பட்டாள்.
மாதவன் லலிதாவையே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார். லலிதாவின் பொதுநல நோக்கு அவருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இதுவரை பார்க்காத புதிய லலிதாவைப் பார்த்தார்.
அவசரமாக வேறிடம் போகவேண்டியிருப்பதால் மறுநாள் பிற்பகல் ஃபோன் செய்துவிட்டு, தன் நிறுவனத்தைச் சேர்ந்த இருவருடன் வந்து லலிதாவை வீட்டில் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றார் வாசுகி. அடுத்தநாள் சொன்னபடியே இருவருடன் வீட்டிற்கு வந்தார் வாசுகி. பிஸ்கட்டும், டீயும் எடுத்து வந்தாள் லலிதா.
"அருகிலிருக்கும் அரசாங்க நிலத்தில் அவர்கள் வசிக்கிறார்கள். அங்கே போய்ப் பார்க்கலாமா?" என்றார் வாசுகி. லலிதா கொஞ்சம் தயங்கினாள்.
"அவர்களுக்காக வாதாடிவிட்டு இப்போது போய்ப் பார்க்கத் தயங்கினால் என்ன நியாயம்?" என்றார் மாதவன்.
"அவர்கள் கூட்டமாக இருந்தால் எப்படி பிஹேவ் பண்ணுவார்களோ? அதுதான் பயமாக இருக்கிறது" என்றாள் லலிதா.
"அவர்களும் மனிதர்கள்தானே! ஒருவேளை அவர்கள் நம்மைவிட நல்லவர்களாகவும் இருக்கலாம். விட்டுக்கொடுக்கும் குணம் இருந்தால்தானே ஒரு கூட்டம் ஒன்றாக இருக்கமுடியும்! தனி ஒருவனுக்காக இல்லாமல் ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்காக உன்மனம் துடிப்பது நல்லதுதான். வாசுகி மேடம் போலத் தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் துணையிருக்கிறார்கள். கிளம்பு" என்று மாதவனும் அவர்களுடன் உற்சாகமாகக் கிளம்பினார்.
ஆண்களும், பெண்களும் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து தாயம், சீட்டாட்டம் எல்லாம் ஆடிக்கொண்டிருந்தனர். புகையிலையைப் போட்டு அங்கேயே எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தனர் சிலர். அந்த மண்ணிலேயே சில குழந்தைகள் பிறந்தமேனியோடு புரண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒருபக்கம் தூங்கிக்கொண்டிருந்த நாய்கள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டுப் படுத்துக்கொண்டன.
வாசுகியை அவர்களுக்குத் தெரிந்திருந்தது. "அம்மா, இந்த முறையும் எங்களைப் போட்டோ எடுத்து போடப் போறீங்களா?" என்றுகேட்டனர்.
"இல்லை, இவர்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார்கள். உங்களிடம் பேச விரும்புகிறார்கள்."
"இவர்களுக்கு அமெரிக்கா தெரியுமா?" லலிதா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
"தெரியாம என்ன? வெள்ளைக்காரங்க தேசம். இங்க பகல்னா அங்க இரவு" என்று இரண்டே வரிகளில் அமெரிக்காவின் டெஃபனிஷன் கூறினான் ஓராள்.
"உங்கள் குழந்தைகள் ஏன் பள்ளிக்கூடம் போய்ப் படிப்பதில்லை? நீங்கள் ஏன் மற்றவர்கள்போல் ஆடை அணிவதில்லை என்று வருத்தப்படுகிறார்கள்" என்றார் வாசுகி.
"உங்களுக்கு எல்லாம் தெரிகிறது. ஆனாலும் வேலை செய்யவேண்டிய இந்தப் பகல் நேரத்தில் வீணாக நேரத்தைச் செலவிடுகிறீர்களே, ஏன்?" என்று வருத்தத்துடன் கேட்டாள் லலிதா.
"நாங்க நாடோடிங்க அம்மா. எங்களப்பத்தி அரசாங்கமே கவலைப்படல. எங்களுக்குப் படிப்புமில்லை, நிரந்தர வேலையுமில்லை. எங்கே சாப்பாடு கெடைக்குதோ அங்கே பிள்ளை குட்டிங்களோட போயிடுவோம்" என்றான் மற்றொருவன்.
"நீங்கள் பிழைப்பைத் தேடி ஊர்ஊராகச் சென்றாலும் உங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்த்துத் தங்கும்விடுதியிலும் சேர்த்துவிட்டால் அவர்களைப் படிக்க வைப்பீர்களா?" என்று கேட்டாள் லலிதா.
"விடுதியிலெல்லாம் சேர்க்கச் சிறிதுகாலம் ஆகலாம். நீங்கள் மற்றவர்களைப் போல் வேலைக்குப் போகச் சுத்தமாக உடை உடுத்துங்கள். அரசாங்கத்தின் ஆதரவுடன் நடக்கும் தனியார் கம்பெனிகளில் உங்கள் தகுதிக்கேற்ற வேலை வாங்கித்தர முயற்சிக்கிறோம். கம்பெனியின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு, கிடைக்கும் சம்பளத்தில் வாழவேண்டும். முடியுமா?" என்றார் இஸபெல்.
"உங்கள் கஷ்டம், நாடோடி வாழ்க்கை எல்லாம் உங்கள் தலைமுறையோடு போகட்டுமே! ஒவ்வொருவரையும் அரசாங்கம்தான் வந்து முன்னேற்ற வேண்டுமென்றால் அது முடியாத காரியம். உங்கள் சந்ததியருக்காக நீங்கள்தான் சில கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். யாராவது ,ஆசை காட்டினால் தவறான வழிக்கோ, திருட்டு வேலைகளுக்கோ போகக்கூடாது. ஒரே இடத்தில் நிலையாக இருந்தால் உங்கள் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்கலாமில்லையா?" என்றார் மாதவன்.
சற்று யோசித்துவிட்டுச் சரி என்றனர். மறுபடியும் அவர்களைச் சந்திப்பதாகக் கூறி லலிதாவும் மற்றவர்களும் கிளம்பினர்.
"இவர்களை வாழவைக்க இன்னொரு மகாத்மா அவதாரம் செய்ய வேண்டும்போல் இருக்கிறதே!" என்று வருந்தினார் மாதவன். அன்றிரவு லலிதா தூங்கவில்லை. ஜன்னலருகில் நின்று வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"லலிதா, என்ன யோசனை பலமாக இருக்கிறதே?"
"முத்துக்குளிக்க ஆசைப்பட்டு கடலில் இறங்கிய பிறகு நீச்சல் மறந்தவன்போல் தவிக்கிறது என் மனசு."
"புரியவில்லை."
"இந்த நரிக்குறவர்கள் ஏன் என் மனதைக் கசக்கிப் பிழிகிறார்கள்? அவர்கள் குழந்தைகளை எப்படிப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள்? இடியாப்பம்போல் அடியும் தெரியவில்லை, நுனியும் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது" பொருமினாள் லலிதா.
"தீர யோசித்தால் எதுவுமே சிக்கலில்லை லலிதா. நீச்சல் தெரியாதவன் கிணற்றில் விழுந்துவிட்டால், அவனை மற்றவர்கள்தான் தூக்கிவிட வேண்டும். உண்மையாகத் தன்னலமில்லாமல், அவர்கள் முன்னேற்றத்தில் ஆர்வம் இருந்தால், ஊர்கூடித் தேர் இழுப்பது போலத்தான். எல்லோரும் சில சில தியாகங்கள் செய்யவேண்டும்."
"என்ன சொல்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை."
"நீ படுத்துத் தூங்கு. நானே கொஞ்சம் யோசிக்கவேண்டும். நாளைக் காலையில் சொல்கிறேன்" என்று கூறிவிட்டுப் படுத்தார் மாதவன்.
அடுத்த நாள் காலை. லலிதா கொஞ்சம் நேரங்கழித்துதான் எழுந்தாள். அவள் எழுந்து வருவதற்குள், மாதவன் ஃபில்டரில் டிகாக்ஷன் இறக்கிப் பாலையும் காய்ச்சி வைத்திருந்தார். லலிதா பல் துலக்கி, முகத்தைத் துடைத்துக்கொண்டு வந்தாள். காஃபியை அவளிடம் நீட்டினார் மாதவன்.
"சென்னை ஃபில்டர் காஃபியைக் குடித்து ருசிகண்ட நாக்கு அமெரிக்கா போய் ஏங்கப் போகிறது!" என்றார் சிரித்துக்கொண்டே.
"இது என்ன புதுப்பழக்கம்?" என்று காஃபியைக் கையில் வாங்கியபடி சிரித்தாள் லலிதா.
"இத்தனை நாள் நீ இரவெல்லாம் தூங்காமல் இப்படி அவஸ்தைபட்டதில்லை. அதனால் இன்று அசதியில் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது. எனக்குத் தேவையானதெல்லாம் நீ செய்யும்போது உனக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்யமுடியும்? இதே தத்துவம்தான் லலிதா நரிக்குறவர்களுக்கும்."
"என்னசொல்கிறீர்கள்?"
"நேரடியாகவே சொல்கிறேன். நாம் கோவில் கட்ட எண்ணியிருக்கும் நிலத்தை அந்தப் பள்ளிக்கூடம் நடத்தக் கொடுத்துவிடலாம் லலிதா." "எனக்குக்கூட அதே எண்ணம்தான். அதனால்தான் இரவெல்லாம் தூங்கமுடியாமல் தவித்தேன். ஆனால் நீங்கள் அங்கே அழகான ஒரு பிள்ளையார் கோவில் கட்டப் பணமெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டீர்கள். உங்கள் நெடுநாளைய கனவு என்னால் கெடவேண்டாம்."
"அசடு! என் பிள்ளையாரும் அங்கே இருப்பார். பெரிய கோவிலில் மற்றக் கடவுளரோடு இருப்பதற்கு பதில், தனி சாம்ராஜ்யமாக, ஒரே கடவுளாக, நுழைவாயிலில் ஒரு சிறிய மண்டபம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்துவிடலாம். பள்ளிக்கூடமும் கோவில்தான் லலிதா. சரஸ்வதிக்கான கோவில். பரீட்சை நேரத்தில் நம் குழந்தைகளும் பகவானைக் கும்பிடுவார்கள். குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடமும் ஆயிற்று, நம் கணேசனுக்கு கோவிலும் ஆயிற்று. என்ன சொல்கிறாய்?"
"இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் செயல்தான்" என்றாள் லலிதா சந்தோஷமாகச் சிரித்துக்கொண்டு.
பானுமதி பார்த்தசாரதி, ப்ளேனோ, டெக்சஸ் |