எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்
அத்தியாயம் – 5

வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் நிறையக் கேள்விகள் கேட்க நினைத்திருந்தான் அருண். வீடு சென்று, ஆயாவுடன் உட்கார்ந்து வீட்டுப்பாடம் முடித்து, அம்மா, அப்பா, வேலையிலிருந்து திரும்பி வந்த பின்னர் ராத்திரி உணவு சாப்பிடும்போது கேள்வி கேட்கலாம் என்று எண்ணினான்.

ராத்திரி சாப்பிடும் நேரத்தில் அப்பா ஏதோ தனது வேலைபற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அம்மாவும், தனது ஆராய்ச்சியால் ஏற்படப்போகும் மாறுதல்கள் பற்றி நிறையப் பேசினார். அருணுக்கு குறுக்கே பேசாமல் இருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. சாப்பிட்டு முடிததபின் தூங்குவதற்கு முன்னர் கேள்விகளைக் கேட்கலாம் என்று எண்ணிப் பேசாமல் இருந்தான்.

அன்று தூங்குவதற்காக அவனை டக்-இன் பண்ண எப்பொழுதும்போல அம்மா அறைக்குள் வந்தார். "குட் நைட், கண்ணா. ஸ்வீட் டிரீம்ஸ்" என்று சொல்லி, அறைவிளக்கை அணைக்கப் போனார். “அம்மா, உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா?" என்று கேட்டான். கீதா கடிகாரத்தைப் பார்த்தார். தூங்கும் நேரம் ஆகிவிட்டதை உணர்ந்தார். "கண்ணா, ரொம்ப நேரம் ஆயிருச்சு. நாளை காலைல பேசலாமே?"

"அம்மா, ஒரே ஒரு கேள்வி ப்ளீஸ்…" கீதாவீற்கு அயர்வு காரணமாக தூக்கம் தூக்கமாக வந்தது. பெரிய கொட்டாவி விட்டார்.

"கண்ணா, நான் ரொம்ப டயர்டா இருக்கேன் பா. தூங்கலாமே?"

"ப்ளீஸ் அம்மா."

"சரி, ஒரே ஒரு கேள்வி" என்று சொல்லி, மீண்டும் கொட்டாவி விட்டார்.

அருண் தன் அம்மாவைக் கட்டிலருகே வருமாறு சைகை செய்தான். கீதா கதவருகிலேயே நின்று கொண்டார். அவருக்குத் தெரியும் அருணோடு பேச உட்கார்ந்தால் என்ன ஆகும் என்று. அருண் பேச ஆரம்பித்தான்.

"அம்மா, எங்க வகுப்புக்கு ஃப்ராங்க் அப்படின்னு ஒரு புதுப்பையன் இன்னைக்கு வந்தான்."

கீதா மௌனமாகக் கேட்டார். அவருக்கு அருண் சொன்னதில் நாட்டமே இல்லை. எப்படா விடுவான் என்று பொறுமையுடன் காத்திருந்தார். அம்மாவிடம் இருந்து பதில் வராததால் அருண் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முயற்சி செய்தான். அவன் எங்கே எழுந்துவிடுவானோ என்ற பதட்டத்தில் கீதா சட்டென்று இரண்டு அடி வைத்து அவனைப் படுக்கையோடு ஒரு அமுக்கு அமுக்கினார்.

"ஃப்ராங்க் பீமன்போல இருக்கான் அம்மா. அளவுக்கு அதிகமா குண்டு," என்று கைகளை அகலமாக விரித்தபடி சொன்னான். அருண், பீமன்போல என்று சொன்னது, கீதாவின் கவனத்தை ஈர்த்தது. சட்டென்று, "பீமன் போலேன்னா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அருண் தனது கைகளை இன்னும் அகலமாக விரித்தபடி, "ரொம்பப் பெரிசம்மா," என்றான். "நிறையப் பசங்க அவனைக் கேலி செஞ்சாங்க. அவன் எல்லாத்துக்கும் சிரிச்சிட்டே இருந்தான். கொஞ்சம்கூட கோபமோ, வருத்தமோ படவேயில்லை. ரொம்ப விநோதமான பையன்."

"கண்ணா, நீயும் மத்த பசங்களோடு சேர்ந்து அந்தப் பையனைக் கேலி செஞ்சையா?" கீதாவின் குரலில் தனது செல்லமகன் எங்கே தப்பு செய்து விட்டானோ என்ற பயம் இருந்தது.

“இல்லை அம்மா, சத்தியமா இல்லை. நான் அந்த மாதிரி என்னைக்கும் பண்ணமாட்டேன்." கீதாவிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

"அம்மா, ஏன் அம்மா ஃப்ராங்க் அவ்வளவு குண்டா இருக்கான்?" கீதா என்ன பதில் கொடுப்பது என்று யோசித்தார். அருணோடு பேச ஆரம்பித்தால் தூங்க இன்னும் நேரம் ஆகிவிடும் என்றும் எண்ணினார். அருண் விடுவதாக இல்லை.

"அம்மா?"

"ம்ம்ம்…." அரைமனதான பதில் கொடுத்தார்.

"ஃப்ராங்க்."

அருணும் தூங்குவதாகத் தெரியவில்லை. சற்றுத் தொண்டையைச் செறுமி, "கண்ணா, சிலசமயம், ஒரு சில பேருக்கு அவங்க உடம்புல ஏதாவது குறை இருந்தா நீ சொல்ற இந்தப் பையன் மாதிரி குண்டா இருக்கமுடியும்."

"உடம்புல குறைன்னா?"

"சில சமயம், ஜீன்ல குறைகள் இருக்கலாம். அப்படி இருந்தா ஒபீசிட்டி வர வாய்ப்பிருக்கு."

"அப்படின்னா, அதை எப்படிம்மா சரிசெய்ய முடியும்? ஃப்ராங்கும் என்னை மாதிரியே ஒல்லியாக முடியுமா?"

"ம்ம்ம்…டாக்டர் கொடுக்கிற மருந்து மூலமா சிலசமயம் சரி பண்ண முடியும். ஃப்ராங்கோட அம்மா, அப்பா நிச்சயம்செய்யறாங்களா இருக்கும்." கொட்டாவி விட்டுக்கொண்டே, "நாளைக்கு சாயந்திரம் பேசிக்கலாமே?" என்றார்.

அருண் அம்மாவின் விண்ணப்பத்தை கேட்காமல், "ஏன் அம்மா, ஜீன்ல குறை இல்லைன்னா, வேற எப்படிம்மா இருக்க முடியும்? நீங்க சொல்றமாதிரி ஜங்க் ஃபுட் சாப்பிட்டாலா?"

"அதுவும்கூட இருக்கலாம்."

"ஏன் அம்மா, அப்ப நீங்க சொல்றமாதிரி எல்லோரும் ஆரோக்கிய உணவு சாப்பிடுறது இல்லை?"

இப்படிக் கேள்வி மேல் கேள்வி வருவதை எப்படி நிறுத்துவது என்று கீதா யோசித்தார். மறுபுறம், அருணின் ஆவலைக் கட்டுப்படுத்துவதும் தவறு என்று நினைத்தார். மிகவும் நிதானமாக பதில் கொடுத்தார்.

"கண்ணா, சில குடும்பங்களுக்கு நல்ல உணவு வாங்கிச் சாப்பிடற அளவுக்கு வசதி இருக்காது." அருண் ஏதோ புரிந்தது போல தலையாட்டினான்.

"அருண், விளக்கை அணைக்கலாமா? நாளைக்குப் பள்ளிக்கூடம் போகணுமே."

அருணுக்கும் தூக்கம் வந்தது. தீடீரென்று ஃப்ராங்க் விளையாடக் கூப்பிட்டது ஞாபகம் வந்தது. "அம்மா, ஃப்ராங்க் இந்த வாரக்கடைசில விளையாட வருவியான்னு கேட்டான்?"

"அப்படியா? நான் அப்பாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேனே. உன்னோட மத்த வகுப்புகள் பாதிக்காம இருக்கணும்."

"அப்புறம் அம்மா, ஃப்ராங்க் சொன்னான், அவன் நம்ம பள்ளிக்கூடம் வந்ததே என்னுடன் நட்புக்காகத்தான்னு…"
முழுவதும் சொல்லி முடிக்கும் முன்னர் அப்படியே தூங்கிப் போனான்.

கீதாவுக்கு லேசாகப் புரிய ஆரம்பித்தது. இந்த முறையும் ஹோர்ஷியானாவோடு சண்டையில் கொண்டுவிடுமோ என்று பயந்தார்.

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com