கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது கொல்லூர். உடுப்பி மற்றும் மங்களூரில் இருந்து செல்ல நிறையப் பேருந்துகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து ரயில் மற்றும் சாலை மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தின் மகிமை பற்றி கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கோல மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் 'கொல்லூர்' என்று அழைக்கப்படுகிறது. கௌமாசுரன் என்னும் அரக்கன் யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று தவமிருந்து சிவபெருமானிடம் வரம்பெற்றான். தான் பெற்ற வரத்தினால் தேவர்களை அச்சுறுத்தி வந்தான். தேவர்கள், அசுரனின் பார்வையில் படாமல் இருக்க முயன்றபோது, குரு சுக்கிராச்சாரியார், அசுரனுக்குப் பார்வதிதேவியால் மரணம் ஏற்படும் என்பதைத் தெரிவித்தார். இதனை அறிந்த கௌமாசுரன் மேலும் கடுமையாகத் தவம்செய்ய, சிவபெருமான் அவனெதிரில் தோன்றி, "வரம் கேள்! ஆனால், நான் வரம் தந்ததும் நீ பேசும் திறமையை இழந்து விடுவாய்" என்றார். அதன்படியே அசுரனும் மூகன் அதாவது 'ஊமை' ஆகிவிட்டான். மூகாசுரனைக் கொல்லூர் தேவி பார்வதி வதம் செய்ததால் அம்பாள் 'மூகாம்பிகை' எனப்பட்டாள்.
தேவி பார்வதி மும்மூர்த்திகளின் சக்தியோடு லிங்கத்தில் இணைந்து மூகாம்பிகையாகக் காட்சியளிக்கிறாள். கோல மகரிஷியால் வணங்கப்பட்ட லிங்கத்தின் தெய்வீக சக்தியோடு சேர்ந்து சக்தி அதிகரித்து துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதியோடு சேர்ந்த வடிவமாய் அடியார்களுக்கு மூகாம்பிகை அருள்புரிகிறாள். கோவிலில் லிங்கம், ஜ்யோதிர் லிங்கம். சுயம்பு லிங்கம். சிவபெருமான் தன் கால் கட்டைவிரலால் சக்கரத்தை ஏற்படுத்தியதால் அதுவே உத்பவலிங்கம். அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், மூகாம்பிகை அதில் இணைந்ததால் அம்பிகை சர்வசக்தி உடையவளாக அருள் பாலிக்கிறாள். தேவி மூகாம்பிகை மூன்று கண்களுடனும் நான்கு புஜங்களுடனும் கையில் சங்கு, சக்ரம் ஏந்தி பத்மாஸனத்தில் அமர்ந்து அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகிறாள்.
லக்ஷ்மி, சரஸ்வதியுடன் மூகாம்பிகை சிவபெருமானுடன் ஒரு பக்கத்திலும் பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன் ஒரு பக்கத்திலும் உள்ளனர். கோவிலையொட்டி அமைந்துள்ள தீர்த்தம் சௌபர்ணிகை நதி. இது குடசாத்ரி மலையிலிருந்து ஓடிவருகிறது. இது கோவிலின் பின்பக்கம் உள்ளது.
சுபர்ணா என்ற கருடன் சௌபர்ணிகா நதிக்கரையில் தன் தாய் தொடர்ந்து அனுபவித்து வரும் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் பெற தேவியை நோக்கித் தவம் செய்தான். தேவி மூகாம்பிகை அவன் எதிரில் தோன்றி அருள்செய்ய, கருடன் தனக்குப் பின் இந்த நதி 'சௌபர்ணிகா' என்னும் பெயருடன் விளங்க வேண்டும் என்று வரம் கேட்டான். அவ்வாறே தேவி அருள்செய்தாள். கருடன் அமர்ந்த இடம் 'கருடன் குகை' என அழைக்கப்படுகிறது. நதியின் கீழ்ப்பகுதியில் இரண்டு நதிகள் கலக்கின்றன. மலைகளின் வழியாக நதிகள் பாய்ந்து வருவதால் நதி புனிதமாகவும், அங்கு வளரும் இயற்கை மூலிகைகளின் மருத்துவகுணம் உடையனவாகவும் உள்ளன.
ஆதிசங்கரர், தேவி மூகாம்பிகையை சௌபர்ணிகை நதிக்கரையில், கோயிலில், நடுநாயகமாக லிங்கத்திற்குப் பின்னால் ஸ்ரீசக்ரத்தோடு ஸ்தாபித்தார். கோவில் சிறந்த கலையழகுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். நான்கு தூண்களைக் கொண்ட 135 அடி உயரமுள்ள லட்சுமி மண்டபத்தில் தெய்வச் சிலைகள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.
விநாயகர், சுப்பிரமணியர், நாகர், மஹிஷாசுரமர்த்தினி, தேவி உருவங்கள் சிறப்புற அமைந்துள்ளன. மிகப்பெரிய, உயரமான தீபஸ்தம்பத்தின் அடிப்பக்கம் முதலையின் தலை வடிவில் அமைந்துள்ளது. மேல்புறம் 21 அழகான வட்டங்கள் உள்ளன. எல்லா தீபங்களும் ஏற்றப்படும்போது தொலைவில் இருந்து பார்த்தால் மகரஜோதியைப் போல் பிரகாசிக்கிறது. நவராத்திரி விழா, தூணிலுள்ள பிள்ளையாருக்கு முதலில் ஆரம்பமாகிறது. கர்ப்பக்கிரகம் தாண்டி, நான்குவித கணபதி சிலைகளில் தசபுஜ கணபதி, பாலமூரி கணபதி, வெள்ளைச் சலவைக் கற்களால் மிக அழகுற வடிக்கப்பட்டுள்ளனர். அடுத்துப் பாம்பின் சிலை, சர்ப்ப தோஷத்திலிருந்து நிவாரணம் பெற பக்தர்களால் வணங்கப்படுகிறது. தங்கள் வேண்டுதலை, பாம்பினைத் தொட்டுச் சமர்ப்பிக்கும்போது நல்ல பலன் கிடைப்பதாகக் கூறுகின்றனர். வெளிப்பிரகாரத்தில் முருகன், சரஸ்வதி, ப்ராணலிங்கேஸ்வரர், ப்ரார்த்தேஸ்வர், முக்யப்ராணர் ஆகியோர் காட்சி தருகின்றனர். வீரபத்ர சுவாமி கொடூர தோற்றத்தில் காட்சி தருவதால் அவருக்கு எதிராக முக்ய ப்ராணர் சன்னதி அமைந்துள்ளது. வீரபத்ரர் இங்கே காவல் தெய்வம்.
மூகாம்பிகைக்கு விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் தங்கக்கவசம் அளித்துள்ளார். ராணி சென்னம்மா, கேலடி சென்னம்மாஜி ஆகியோர் விலை உயர்ந்த தங்க, வைர, மரகத ஆபரணங்கள், தங்கக்கவசம் போன்றவற்றை அளித்துள்ளனர். அரசர் ஹாலுகல்லு வீர சங்கையா சன்னிதியின் மேற்புறம் விலையுயர்ந்த கற்களை அமைத்துள்ளார். கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ் வெள்ளிவாளும், தமிழ்நாடு முதன்மந்திரியாக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் தங்கவாளும் அளித்துள்ளார்.
ஆதிசங்கரர் சரஸ்வதி தேவியை இடைவிடாது தியானித்து வரும் வேளையில் ஒருநாள் சரஸ்வதி அவர்முன் தோன்றினாள். தேவிக்கு கேரளாவில் ஆலயம் எழுப்பவேண்டும் என்ற தன் எண்ணத்தை சங்கரர் தெரிவிக்க அன்னையும் உடன்பட்டாள். "சங்கரர் எனக்கு வழி காண்பிக்க வேண்டும். ஆனால், நான் வருகிறேனா என்று ஒருமுறைகூடத் திரும்பிப் பார்க்கக்கூடாது. அதை மீறினால் நான் அதே இடத்தில் தங்கிவிடுவேன்" என்று கட்டளையிட்டாள். சங்கரரும் சம்மதித்து முன்னால் நடந்தார். தேவி பின் தொடர்ந்தாள். குடசாத்ரி மலையிலிருந்து அவர்கள் இறங்கி நடக்க ஆரம்பித்தனர். தன் கொலுசுச் சத்தத்தின் மூலம் தன் வருகையை உணர்த்தினாள் அன்னை. சிறிது நேரத்தில் கொலுசுச்சப்தம் நின்றுவிடவே சங்கரர் திகைத்துப் போய், தான் அளித்த வாக்குறுதியை மறந்து அம்பாள் வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தார். தேவி அவ்விடத்திலேயே நிலை பெற்றாள்.
சங்கரர் மனமுருகி மன்னிப்பு வேண்டினார். கேரளாவுக்குத் தன்னுடன் வரும்படிப் பிரார்த்தித்தார். அவரது பிரார்த்தனையை மெச்சி, அன்னை, காலையில் சோட்டாணிக்கரை பகவதி கோயிலுக்குச் சென்று, மதியம் கொல்லூர் திரும்பி வருவதாக வரலாறு.
ஆலயத்தில் தினம் நான்குகால பூஜை விஜய யக்ஞ சாஸ்திரப்படி நடக்கின்றன. நவராத்திரி ஒன்பது நாளும் சண்டிஹோமம், நவதுர்கா அலங்காரம், மஹாநவமியன்று தேவி புஷ்பரத அலங்காரம், விஜயதசமி அன்று அட்சராப்யாச சேவை, தனுர்மாத பூஜை, சிவராத்திரி, தெப்போத்சவம், பிரம்மோத்சவம் யாவும் சிறப்புற நடைபெறுகின்றன.
முப்பெருந்தேவியரின் வடிவமான அன்னையைப் போற்றி வழிபடுவோம்.
சீதாதுரைராஜ், சான் ஹோசே, கலிஃபோர்னியா |