தமிழாகரர் ச.வே.சுப்பிரமணியன்
தமிழ்மீது கொண்ட காதலால் 'தமிழூர்' என்பதனை நிர்மாணித்து, 'தமிழகம்' என்று தனது இல்லத்திற்குப் பெயர்சூட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதி, வாழ்நாளின் இறுதிவரை தமிழுக்காகவே உழைத்தவர் தமிழாகரர் ச.வே. சுப்பிரமணியன். இவர் டிசம்பர் 31, 1929 அன்று திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் சு. சண்முகவேலாயுதம், இராமலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். பாரம்பரிய விவசாயக்குடும்பம். சிறுவயதிலேயே தந்தையோடு வேளாண் தொழிலை மேற்கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்தவர், ம.தி.தா. இந்துக் கல்லூரியில் புகுமுக வகுப்புப் பயின்றார். தமிழை ஆழ்ந்து கற்றார். நெல்லைச்சீமை தமிழுக்கும் தமிழாய்வுக்கும் புகழ்பெற்றது. அங்கிருந்த ஜமீன்களும் தமிழ்ப்புலவர்களை ஆதரித்தன. அவர்களின் வரலாறுகளை அறிந்த ச.வே. சுப்பிரமணியனுக்குத் தமிழாராய்ச்சி ஆர்வம் மேம்பட புலவர் அருணாசல கவுண்டர் போன்றோர் முன்மாதிரியாக இருந்தனர். தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ. ஆனர்ஸ்) பெற்றார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பணிவாய்ப்பு வந்தது. சிலகாலம் அங்கே பணிபுரிந்தபின் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். அங்கேயே பணியமர்ந்து அதன் தமிழ்த்துறைத் தலைவராக உயர்ந்தார். இசையோடு சிலப்பதிகாரத்தைப் பாடமாக நடத்திய பெருமை மிக்கவர். கவிக்கோ அப்துல் ரஹ்மான், க.ப. அறவாணன் போன்றோர் இவரது மாணவர்கள்.

தனது இல்லத்தையே தமிழாராய்ச்சிக் கூடமாக ஆக்கியவர், ஓய்வு நேரத்தை முழுக்கத் தமிழாய்விற்காகவே செலவிட்டார். ஆண்டுதோறும் ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியைத் துவங்க ச.வே.சு.விற்கு அனுமதி அளித்தார். அதனைத் திறம்பட நடத்திய ச.வே.சு. பின்னர் அதனை குன்றக்குடி ஆதீனத்தின் பொறுப்பில் ஒப்படைத்தார். தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் புலமை பெற்றிருந்தார். இவரது நுண்மாண் நுழைபுலத்தை நன்கறிந்திருந்த டாக்டர் மு. வரதராசன், இவரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தார். அவ்வமைப்பின் முதல் இயக்குநர் இவர்தான். தனது பணிக்காலத்தில் அரிய பல ஆய்வுநூல்களை வெளியிட்டு அதன் உயரிய வளர்ச்சிக்குக் காரணமானார்.

Click Here Enlargeகம்பனைப் பற்றியும், சிலம்பைப் பற்றியும் பல ஆய்வுகளைச் செய்தவர் ச.வே.சு. 'கம்பனின் கற்பனை', 'கம்பனும் உலகியல் அறிவும்', 'கம்பன் இலக்கிய உத்திகள்', 'கம்பன் கவித்திறன்' போன்ற ஆய்வு நூல்களும், 'அடியார்க்கு நல்லார் உரைத்திறன்', 'சிலம்பின் சில பரல்கள்', 'இளங்கோவின் இலக்கிய உத்திகள்', 'சிலப்பதிகாரம் - மூலம்', 'சிலப்பதிகாரம் இசைப்பாடல்கள்', 'சிலப்பதிகாரம் தெளிவுரை', 'சிலப்பதிகாரம் மங்கலவாழ்த்துப் பாடல்', 'சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை', 'சிலப்பதிகாரம் குன்றக்குரவை உரை', 'கானல்வரி உரை', 'சிலம்பும் சிந்தாமணியும்', 'இளங்கோவும் கம்பனும்' போன்ற ஆய்வு நூல்களும் குறிப்பிடத்தகுந்தவை. தொல்காப்பியத்தின்மீது பெருங்காதல் கொண்டிருந்தார். 'தொல்காப்பியமே உலகின் முதல் பொதுநூல்' என்ற உண்மையை நிறுவும் ஆய்வில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். பல இலக்கண நூல்களுக்கு விரிவான உரைநூல்களை எழுதியுள்ளார். 'உடல் உள்ளம் உயிர்', 'கண்ணப்ப நாயனார்', 'கம்பன் உலகியல் அறிவு', 'கம்பன் கவித்திறன்', 'பத்துப்பாட்டு - உரை' போன்ற நூல்கள் இவரது மேதைமையைப் பறைசாற்றுவன. 'தமிழ் நிகண்டுகள்' எனும் இவரது நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுபெற்ற நூலாகும். சங்க இலக்கியம் - மூலம் முழுவதையும் நூலாக்கியவர். அதேபோல இலக்கண நூல்களின் மூலம் அனைத்தையும் தொகுத்து ஒரே நூலாகத் தந்துள்ளார். இவற்றை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கம்பராமாயணம் முழுவதையும் சீர்பிரித்து வெளியிட்டுள்ளார். சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்து உள்ளார். இவரது 'இலக்கணத் தொகை - யாப்பு பாட்டியல்' என்ற நூலும் முக்கியமானது. 'Tholkappiyam is the first Universal grammar in the Universe' என்ற ஆய்வுநூலை இவரது உச்சபட்ச சாதனை நூல் எனலாம். இவர், 81 வயதில் 81 நூல்களை வெளியிட்டுச் சாதனை படைத்தவரும்கூட. இதற்கு மணிவாசகர் பதிப்பகம் உறுதுணையாக இருந்தது. இவர் எழுதியிருக்கும் 180க்கும் மேற்பட்ட நூல்களில் ஆங்கில நூல்கள் எட்டும், மலையாள நூல் ஒன்றும் அடங்கும்.

'சிலப்பதிகாரம்' காப்பியத்திற்கு அப்பெயர் வந்தது பற்றிக் கூறுகையில், “காப்பியங்கள் அனைத்தும் இடுகுறியாலன்றி ஏதேனும் காரணம்பற்றியே பெயர் பெறுகின்றன எனலாம். முதற் காப்பியமான சிலப்பதிகாரம், தனது பல தனித் தன்மைகளுடன், பெயர் பெறுவதிலும் தனித்தன்மையுடன் அமைகின்றது. பொதுவாக இலக்கணங்கள் பெறும் அதிகாரம் எனும் கூறும், பெண்ணின் காலணியாகிய சிலம்பும் இணைந்து இதன் பெயரை ஆக்குகின்றன. காப்பியத் தலைவியின் வாழ்வை மாற்றியமைப்பதில் முக்கியப் பங்கு வகித்த சிலம்பு காப்பியப் பெயராகின்றது” என தனது 'காப்பியப் புனைதிறன்' நூலில் தெரிவிப்பது இவரது ஆய்வுத்திறனை பறைசாற்றுகிறது. “தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சிறந்த இலக்கியங்கள் தமிழில் இருந்திருத்தல் வேண்டும். இலக்கியங்கள் தோன்றி வளர்வதற்குப் பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகலாம். ஆனால் ஒரு மொழி தோன்றிப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் எழுத்தே தோன்றும். இன்று உலக மொழிகள் பலவற்றிற்கு வரிவடிவங்கள் இல்லை. வரிவடிவங்கள் தோன்றி, நாட்டார் இலக்கியங்கள் போன்று பேச்சு வழி இலக்கியங்களாகிய விடுகதை, பழமொழி, நாட்டார் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் இவையெல்லாம் தோன்றிய பின்புதான் எழுத்து இலக்கியம் தோன்ற முடியும். அதனால் பொதுநிலையில் தமிழ் மொழியின் வயது நாற்பதாயிரம் ஆண்டுகள் வரை இருக்கலாம். தமிழ் இலக்கியங்களின் வயது பத்தாயிரம் ஆண்டுகளாவது இருத்தல் வேண்டும்” என்று தமிழின் தொன்மையை மதிப்பிடுகிறார்.

“உலகில் வேறெந்தச் சமூகத்துக்கும் தம் மொழியின்பால் இவ்வளவு அலட்சியம் இல்லை. தமிழ் பிழைப்புக்குரிய முதலீடாக இங்கே மாறிவிட்டது. தமிழாசிரியர்கள் கூடத் தங்கள் பிள்ளைகளைத் தமிழ் படிக்கவைக்கத் தயங்குகிறார்கள்” என்று மனம் வருந்தியவர், மாணவர்கள் தமிழ் பயில வேண்டும் என்பதற்காகவே நெல்லையில் சொந்தமாகப் பல ஏக்கர் கணக்கில் இடம்வாங்கி அங்கே 'தமிழூர்' என்பதனை நிர்மாணித்தார். அங்கே 'உலகத்தமிழ்க் கல்வி இயக்கம்' என்ற அமைப்பினைத் துவக்கி, சர்வதேச அளவில் தமிழ்பற்றி ஆய்வுசெய்யும் மாணவர்களை அதன்மூலம் ஒருங்கிணைத்தார். மாணவர்கள் அங்கேயே தங்கி, அங்கேயே ஆய்வுகள் மேற்கொள்ள வழிவகை செய்தார். 25,000 அரிய நூல்களைக் கொண்ட மிகப்பெரிய மூன்று நூலகங்களை அங்கே இவர் பரமாரித்து வந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த பெருமை இவருக்கு உண்டு. விவசாயத்தின்மீது கொண்ட காதலால் தமக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயப் பணிகளையும் தாமே செய்துவந்தார். மாணவர்களும் விவசாயம் பற்றி அறிய வேண்டும் என்பதற்காக விவசாயப் பட்டயப்படிப்புக்கான கல்விக்கூடத்தையும் தொடங்கிச் சிறிதுகாலம் நடத்தினார். பல்வேறு உயர் பதவிகளை வகித்தபோதும், எம்.ஜி. ராமச்சந்திரன்., மு.கருணாநிதி என தமிழக மேனாள் முதல்வர்களின் அன்பைப் பெற்றவராக இருந்தபோதும், எவ்விதச் செருக்கும், பகட்டும் இல்லாமல், தன்னடக்கத்துடன், எளிமையாக, ஒரு கிராமத்து விவசாயிபோல் அரையாடை, மேல்துண்டுடன் வாழ்ந்தவர் ச.வே.சுப்பிரமணியன்.

தனது தமிழ்ப்பணிகளுக்காக, 'தொல்காப்பியச் செம்மல்', 'செந்தமிழ்க்கலாநிதி', 'தமிழியக்கச் செம்மல்', 'கம்பன் விருது', 'கி.ஆ.பெ. விசுவநாதம் விருது', 'சி.பா. ஆதித்தனார் விருது' உள்பட பல்வேறு விருதுகளும் பெற்றவர். படைப்பிற்காக அல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழ் வளர்சிக்காக பாஷா சம்மான் விருதுபெற்ற ஒரே தமிழ்ப் பேராசிரியர், அறிஞர் இவர்தான். உலகமெங்கும் பயணம் செய்து பல கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்கிறார். இருநூற்றிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தந்திருக்கிறார். இவரது நூல்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்குப் பாடநூலாக உள்ளன. வானொலியிலும் சுவையான பல இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாறு 'சாதனைச்செம்மல்.ச.வே.சு' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது.

வாகனம் விபத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இவர் ஜனவரி 12, 2017 அன்று, 88ம் வயதில் காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பள்ளி ஆசிரியர். இளையவர் கோவை வேளாண் கல்லூரியில் பேராசிரியர். டாக்டர் மு.வ., போன்ற தமிழறிஞர்கள் வரிசையில் வைத்துப் போற்றத்தகுந்தவர் முனைவர் ச.வே. சுப்பிரமணியன்.

பா.சு.ரமணன்

© TamilOnline.com