தமிழ் இலக்கியப் படைப்புகளில் வாழ்க்கை வரலாறு சார்ந்த நூல்களுக்குத் தனி இடமுண்டு. உ.வே.சா.வின் 'என் சரித்திரம்', நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளையின் 'என் கதை', திரு.வி. கலியாணசுந்தர முதலியார் எழுதிய 'வாழ்க்கைக் குறிப்புகள்', நெ.து. சுந்தர வடிவேலு, டி.எஸ்.எஸ். ராஜன் என பலர் எழுதிய நூல்கள் இன்றளவும் முக்கியப் படைப்புகளாக விளங்குகின்றன. அந்த வகையில் 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்..' என்ற தன்வரலாற்று நாவல் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பா. விசாலம். இவர், 1932ல், வங்காளத்தில் பர்த்வான் மாவட்டத்தில் இருக்கும் குல்குடி என்ற சிறு கிராமத்தில், வீட்டின் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். காசி விசாலாட்சியின் நினைவாக விசாலம் என்ற பெயர் சூட்டப்பட்டது. குழந்தைப் பருவமும், இளமைப் பருவமும் நாஞ்சில்நாட்டு வட்டாரங்களில் கழிந்தன. அரசியல், இலக்கியம் என்று ஈடுபாடுள்ள குடும்பம். தந்தை மற்றும் சகோதரர்கள் மூலமாகக் கிடைத்த நூல்களும், பாரதியார் சிந்தனைகளும் இவருள் பல தாக்கங்களை ஏற்படுத்தின. சமூகத்தின் மீதான பார்வை விசாலமானது. இந்நிலையில் இளவயதிலேயே தந்தையை இழந்தார். மருமக்கள் தாய உரிமை முறையால் சொத்துக்கள் கைவிட்டுப் போயின. தாயுடன் தனியாள் ஆன விசாலம், உள்ள உறுதியால் மெள்ள மெள்ள அதிலிருந்து மீண்டார். தாயையும் திடசிந்தனை உள்ளவராக மாற்றினார். அதுவரை வெளி உலகமே அறிந்திராத தாய், தன் உரிமைகளைக் கோரி வெளியே வருவதற்கு வழிகாட்டினார்.
இக்கால கட்டத்தில் பொதுவுடைமை இயக்கமும் அதன் சீர்த்திருத்தக் கருத்துக்களும் இவரை ஈர்த்தன. 1952ல் அதன் உறுப்பினர் ஆனார். ஆரம்பக் காலத்தில் கட்சியின் அலுவலகப் பணிகளில் ஈடுபட்டார். சுற்றறிக்கைகள் தயார் செய்வது, நகல்கள் எடுப்பது, கூட்டநடவடிக்கைகளை குறிப்பெடுப்பது போன்ற சிறிய வேலைகளைச் செய்துவந்தார். பின்னர் போராட்டங்களில் பங்கேற்றுச் சமூகத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டார். அந்த அனுபவங்களும், இயல்பாக இருந்த எழுத்தாற்றலும் கைகொடுக்க, சிறுகதைகள் எழுதத் துவங்கினார். முதல் சிறுகதை 'நோய்', 1960ல், சரஸ்வதி இதழில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது. எழுத்தாளர் சுந்தரராமசாமி இவரை எழுத ஊக்குவித்தார். தொடர்ந்து சில சிறுகதைகளை எழுதினார் என்றாலும் அவற்றைப் பிரசுரம் செய்யும் முனைப்புத் தோன்றவில்லை. இயக்கத் தோழர் மைக்கேல் ராஜுவைக் காதலித்து 1964ல் மணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் கணவருடன் இணைந்தும், தனியாகவும் இயக்கப்பணிகளில் ஈடுபட்டார். பல பெண்களுக்கு வழிகாட்டியாக, ஆலோசனை கூறுபவராகத் திகழ்ந்தார். 'தலைக்கோல்' என்ற நாடகக்குழுவின் தலைவராகப் பணியாற்றி, நாடகங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார். 1973ல் இலங்கை, கொழும்பில் நடந்த பெண்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக பிரதிநிதியாகப் பங்கேற்றார். கிழக்கு பெர்லினில் நடந்த பெண்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டிருக்கிறார். நாளடைவில் கட்சி இரண்டாகப் பிளவுபடவே அதிலிருந்து விலகினார். என்றாலும் பொதுவுடைமை இயக்க ஆதரவாளராகவே இருந்தார்.
தனது வாழ்க்கை அனுபவங்களையும், பொதுவுடைமை இயக்க வாழ்வையும் பின்புலமாக வைத்து 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்..' என்ற தனது முதல் நாவலை, 1994ல், தனது அறுபதாம் வயதில் வெளியிட்டார். இந்நூல் வெளியாக இந்திராபார்த்தசாரதி முக்கியத் தூண்டுகோலாக இருந்தார். தனிநபர் வாழ்க்கையை மட்டுமல்லாது அவர்கள் வாழ்ந்த சமூகத்தை, காலகட்டத்தை, மனிதர்களின் வாழ்க்கை நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதாக இந்த நாவல் அமைந்தது. நாஞ்சில் நாட்டு வெள்ளாளரின் வாழ்க்கையை, நம்பிக்கைகளை, மருமக்கள் தாய உரிமை முறைகளை, அதனால் விளைந்த துன்பங்களை எல்லாம் இந்நாவல் பேசுகிறது. கூடவே பொதுவுடைமைக் கட்சியினரின் சுயநலப்போக்கையும், அவர்களில் சிலரின் இரட்டை வேடங்களையும் இந்நாவலில் அவர் அம்பலப்படுத்தியுள்ளார். வெளிப்படையான அந்த விமர்சனம் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்த அதேசமயம், இந்த நாவல் சுந்தர ராமசாமி, பொன்னீலன், நீல பத்மனாபன், கோவை ஞானி, தொ.மு.சி. ரகுநாதன், வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன், மா. அரங்கநாதன் உள்ளிட்ட பலரது பாராட்டையும் பெற்றது. புதுவை அரசின் கம்பர் விருதையும் வென்றது.
நாஞ்சில் நாட்டுக் கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்த பெண், தந்தையின் மறைவுக்குப் பின் எதிர்கொள்ளும் சூழல்களை நாவலில் விவரித்திருக்கிறார் விசாலம். உறவுகள் மூலம் அவளுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் எப்படி அவளை ஒரு பொதுவுடைமைவாதியாக, தொழிற்சங்கவாதியாக மாற்றுகின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார். ஒரு நாவலை எழுதுவதுபோல அல்லாமல் தனது வாழ்க்கையை 'நனவோடை' உத்தியில் குறிப்புகளாக எழுதியிருக்கும் விதம் வாசகனைக் கவர்வதாக உள்ளது. வாழ்க்கை அனுபவங்களை மட்டுமல்லாமல் தான் சார்ந்த அரசியல் சூழலையும் பிரதிபலிப்பதால் இந்த நாவல் முக்கியமானதாகிறது. "நாவல் இலக்கியத்துக்கு வித்தியாசமான பங்களிப்பை நிறைவேற்றியிருப்பது புதுமையிலும் புதுமை" என்று இந்நாவலைப் பாராட்டுகிறார் அமரர் ராஜம் கிருஷ்ணன். பர்மா பிரிந்தது, அகதிகளின் அவலவாழ்வு, எம்டன் குண்டு வீச்சுக்குப் பயந்து மக்கள் சென்னையை விட்டு வெளியேறியது, பொட்டி ஸ்ரீராமுலு நாயுடு உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தது, காந்தி சுடப்பட்டு இறந்தது, பெரியார் – மணியம்மை திருமணம், திராவிட இயக்கங்களின் தோற்றம் என வரலாற்றின் முக்கியத் தருணங்களை இந்நாவல் பதிவு செய்திருக்கிறது.
குடும்பம், உறவுகள் இயக்கம், ஜனநாயகம் என எல்லாமே சுயநலத்துடனும், நேர்மையற்றும் இருப்பதையும், பணம், பதவி இவையே மனிதர்களின் அடிப்படைத் தேவையாக இருப்பதையும், அதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருப்பதையும் கண்டு மனம் நொந்து, 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்..' என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறார் பா. விசாலம். தன் நாவலைப்பற்றிக் கூறும்போது, "என் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களினூடாகப் பெற்ற உணர்வுகளின் வெளிப்பாடுதான் எனது நாவல். குடும்பத் தகராறுகள், வறுமை, உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள், கட்சியில் செயல்பட்டபோது ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தும் நடந்த உண்மைகள். இவைகள் கற்பனை விரிவாக்கத்தோடு நாவலில் சொல்லப்பட்டுள்ளன. என்னுடைய வாழ்க்கையையும் அனுபவத்தையும் தேர்ந்தெடுக்கக் காரணம் - மற்றவர்களுடைய அனுபவத்தைவிட சொந்த அனுபவங்களைப் படைப்பாக மாற்றும்போது அதற்கே உரிய வீச்சோடு வெளிவரும் என்பதால்தான்" என்று சொல்கிறார். 1935ல் தொடங்கி 1974ல் முடிகிறது இந்நாவல். ஒன்றுமறியாச் சிறுமி, இளவயதுப் பெண், நடுத்தர வயது மாது, முதிர்ந்த பெண் எனப் பல்வேறு நிலைகளில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை, வளர்ச்சியை, அனுபவங்களை எளிமையாக நாவலில் பதிவு செய்திருக்கிறார். அரசியல் சார்ந்த பெண் படைப்பு என்ற வகையிலும் இந்த நாவல் முக்கியமானதாகிறது. மலையாளத்திலும் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 'Fading Dreams, Old Tales' என்ற தலைப்பில், மீரா நாகராஜன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிடி ப்ரெஸ் வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து சிறுகதை, குறுநாவல்களை எழுதத் துவங்கினார் விசாலம். 1995ல் கணையாழியின் தி. ஜானகிராமன்நினைவு குறுநாவல் போட்டியில் இவரது குறுநாவல் 'சாணாங்கி மண்டபம்' தேர்வு பெற்றது. 'முன்றில்', 'சதங்கை' போன்ற இதழ்களில் சிறுகதை, கட்டுரைகள், நூல் மதிப்புரைகளை நிறைய எழுதியிருக்கிறார். 'உண்மை ஒளிர்க என்று பாடவோ' என்பது இவரது இரண்டாவது நாவல். இது 2000த்தில் வெளிவந்தது. தமிழ்நாட்டின் தென்பகுதியில் கிறித்துவ மதமாற்றம் என்பது எவ்வளவு தீவிரமாக நடைபெற்றது, அதன் பின்புலம், அதனால் ஏற்பட்ட விளைவுகள், அப்படி மதம் மாறியவர்களிடயே இருந்த உயர்வகுப்பு, தாழ்வகுப்புப் பிரிவினைகள் எனப் பலவற்றை இந்நாவலில் மிக காத்திரமாகப் பதிந்துள்ளார். 'அவள் அதுவானால்' என்பது இவரது சிறுகதைகளின் தொகுப்பாகும்..
குடும்பத்துடன் தற்போது புதுச்சேரியில் வசித்து வரும் விசாலம், 'மெல்லக் கனவாய் பழங்கதையாய்..' நாவலின் இரண்டாம் பாகத்தை எழுதிவருகிறார். எண்பத்தைந்து வயதைக் கடந்தும் எழுத்தை நேசிக்கும் இவரது எழுத்தாளுமை இலக்கிய உலகம் மெச்சவேண்டிய ஒன்று.
அரவிந்த் |