சான் டியகோ: பாரதி கலைவிழா
டிசம்பர் 9, 2016 அன்று பாரதியின் பிறந்த நாளை ஒட்டி, சான் டியகோ பாரதியார் தமிழ்ப்பள்ளியின் "பாரதி கலைவிழா" நடைபெற்றது. விழாவில் பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஆடல், பாடல்களுடன் மாறுவேடம், என்னுள் பாரதி, புல்லாங்குழலிசை, நகைச்சுவை நாடகம், பாரதியின் வரலாறு கூறுதல் போன்ற பல பரிமாணங்களுடன் நிகழ்ச்சி சுவையாக இருந்தது.

வாரம் ஒருமுறை தமிழ் கற்றுவரும் குழந்தைகளின் தமிழ் உச்சரிப்பும், தமிழ்ப்பற்றும், பாரதியின்மேல் அவர்கள் காட்டிய ஆர்வமும் பாராட்டத்தக்கன. 'ஓடி விளையாடு பாப்பா' பாடல் குழந்தைகளுக்கான பாடல் இல்லை, ஒரு சமுதாயத்திற்கான பாடல் என்று சொன்ன விதம் கேட்டவர்களுக்கு வியப்பூட்டியது. காக்கைச் சிறகினிலே நந்தலாலா, ஒளிபடைத்த கண்ணினாய், ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, நிற்பதுவே நடப்பதுவே, தேடிச் சோறு நிதந்தின்று, நின்னைச் சரண் அடைந்தேன், அக்கினி குஞ்சொன்று கண்டேன், வருவாய் வருவாய் போன்ற காலத்தால் அழியாத பாடல்களால் மேடை அலங்கரிக்கப்பட்டது. இரண்டு பெண்கள் அழகுத்தமிழில் நிகழ்ச்சியைச் செவ்வனே வழிநடத்தி சென்றனர்.

சிவகுமார் குமாரசாமி,
சான் டியகோ

© TamilOnline.com