ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தனர். மகனுக்கு இரண்டு வயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். தன் மகனை வளர்த்துப் படிக்க வைப்பதற்காக அந்தத் தாயார் மிகவும் சிரமப்பட்டுப் பல வேலைகளையும் செய்தார். மகன் மிகவும் கெட்டிக்காரனாக இருந்ததோடு, பணிவானவனாகவும், தாய்க்கு அன்பும் மரியாதையும் காட்டுபவனாகவும் இருந்தான்.
அவன் வளர்ந்து ஏழாவது வகுப்பை அடைந்தான். தேர்வுக்காகக் கடினமாகப் படித்தான். ஒருநாள் அவன் தன் தாயிடம், "அம்மா, இன்னும் நான்கு நாட்களுக்குள் நான் இருபது ரூபாய் தேர்வுக் கட்டணம் கட்டவேண்டும். எப்படியாவது அந்தத் தொகையைக் கொடுங்கள்" என்று கேட்டான்.
அம்மாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவரிடம் பணம் இல்லை. அது மாதத்தின் கடைசி வாரம் வேறு. அவர் பள்ளியின் தலைமையாசிரியரைப் போய்ப் பார்த்து எப்படியாவது உதவுங்கள் என்று வேண்டினார். அவர் தன் கையில் எதுவுமில்லை என்று கூறிவிட்டார்.
தாயார் வீட்டுக்குத் திரும்பித் தன் குடிசையருகே இருந்த ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து அழத் தொடங்கினார். மகன் பள்ளியிலிருந்து திரும்பிவந்தான். அம்மா அழுவதைப் பார்த்தான். "ஏன் அழுகிறீர்கள் அம்மா?" என்று கேட்டான்.
"மகனே, என்னால் நீ கேட்ட பணத்தைத் தர முடியவில்லை. நாளையிலிருந்து நீ பள்ளிக்குப் போகமுடியாது. என்னோடு வந்து வேலை செய். வேறு வழியில்லை" என்றார்.
"நீங்கள் ஏன் யாரிடமாவது இருபது ரூபாய் கடனாக வாங்கக் கூடாது? பரிட்சைக்குப் பிறகு நான் வேலை செய்து சம்பாதித்துத் திருப்பித் தந்துவிடுகிறேன்" என்றான் மகன்.
"மகனே, எனக்கு யார் பணம் தருவார்? கடவுள்தான் தரவேண்டும்" என்றார் அம்மா. "கடவுள் யார்? அவர் எங்கிருக்கிறார்? அவருடைய விலாசம் என்ன? நான் அங்கே போய் பணம் வாங்கி வருகிறேன்" என்றான் மகன் ஆவலோடு.
"அவர்தான் நாராயணன். வைகுண்டத்தில் இருக்கிறார். அவரே எல்லாச் சொத்துக்கும் அதிபதி" என்றார் அம்மா.
ஒரு கணம்கூடத் தாமதிக்காமல் மகன் தபால் அலுவலகத்துக்கு ஓடினான். அவன் கையில் கொஞ்சம் சில்லறை இருந்தது. ஓர் அஞ்சலட்டை வாங்கினான். அதில் தனது நிலைமையை விவரித்து, உடனடியாக இருபது ரூபாய் அனுப்பவும் என்று கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். கடிதத்தைப் போடலாமென்றால், தபால் பெட்டி ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவனுக்கு எட்டவில்லை.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த போஸ்ட் மாஸ்டர் வெளியே வந்து அவனிடமிருந்து அஞ்சலட்டையை வாங்கிக்கொண்டார். "யாருக்கு இந்தக் கடிதம்?" என்று கேட்டார்.
"சார், நான் வைகுண்டத்தில் இருக்கும் நாராயணருக்கு இந்த அவசரக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். மூன்று நாளைக்குள் நான் தேர்வுக் கட்டணம் கட்டியாக வேண்டும். அதனால் இருபது ரூபாய் உடனடியாக அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்" என்றான்.
"மகனே, இந்த விலாசத்தை உனக்குத் தந்தது யார்?" என்று அவர் கேட்டார். அவன் தன் தாயுடன் நிகழ்த்திய உரையாடலை விவரித்தான். "கடவுள் மிகவும் கருணை வாய்ந்தவர், ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்தால் கடவுள் ஏழைகளின் வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பார் என்று என் அம்மா கூறினார்கள்".
இந்த வார்த்தைகள் போஸ்ட் மாஸ்டரின் நெஞ்சை நெகிழச் செய்தன. "அன்பு மகனே, இந்தக் கடிதத்தைக் கடவுளுக்கு நான் விரைவு அஞ்சலில் அனுப்பிவிடுகிறேன். நீ நாளை மறுநாள் இங்கே வா" என்றார்.
மிகுந்த சந்தோஷத்தோடு அவன் வீட்டுக்கு ஓடிப்போனான். ஒருநாள் கழித்துப் பணம் வந்துவிடும் என்று அம்மாவிடம் கூறினான். மூன்றாம் நாள் போஸ்ட் மாஸ்டரைப் பார்க்கப் போனான்.
"வா மகனே. இந்தா, இந்தக் கவரில் இருபது ரூபாய் உள்ளது. போய்க் கட்டணத்தைச் செலுத்து" என்றார் அவர்.
அந்தக் கவரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் அம்மாவிடம் கொடுத்தான். இது எப்படி உனக்குக் கிடைத்தது என்று அம்மா கோபமாகக் கேட்டார். போஸ்ட் மாஸ்டருடன் பேசியதை அவன் விவரித்தான். அம்மாவுக்கு நம்பிக்கை வரவில்லை. அவர் அஞ்சலகத்துப் போய் அவரைப் பார்த்து இது எப்படி நடந்திருக்க முடியும் என்று விசாரித்தார்.
"அம்மா, என்னை நம்புங்கள். நான் எப்போதுமே கல்நெஞ்சக்காரனாக இருந்தேன். ஆனால் உன் மகனை அந்தக் கடிதத்துடன் பார்த்ததும், என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை. அவ்வளவு நம்பிக்கையோடு அவன் கடவுளுக்கு எழுதிய கடிதம் என்னை உருக்கிவிட்டது. அவனுக்கு உதவுவதற்குக் கடவுளேதான் என்னைத் தூண்டியிருக்க வேண்டும். பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் தெய்வ சங்கல்பமே. இல்லாவிட்டால் உங்கள் மகன் அஞ்சல் பெட்டியில் போடமுடியாமல் தவிப்பதைப் பார்த்திருக்கவும் மாட்டேன். கடிதத்துக்கு விடையும் கிடைத்திருக்காது. அவன் தெய்வத்தின்மீது கொண்ட நம்பிக்கை உடைந்து சிதறியிருக்கும். ஒரு நல்ல பையனுக்கு உதவத் தெய்வம் தந்த வாய்ப்பாக இதை நான் எண்ணுகிறேன்" என்றார் போஸ்ட்மாஸ்டர்.
நாம் கடவுளிடம் சிரத்தையோடு பிரார்த்தனை செய்தால் அவர் உதவுவார். யாராவது ஒருவரைத் தன் சார்பாக உதவத் தூண்டுவார். கடவுளின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றே எல்லோரையும் துன்பங்களிலிருந்து காக்கும்.
நன்றி: சனாதன சாரதி, நவம்பர் 2013
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |