தாக்கம்: கூப்பர்டினோவில் இருந்து குன்றத்தூருக்கு
அப்பா அமெரிக்கா வரும்போதெல்லாம் நூலகத்துக்குப் போவார். அதுதான் அவருக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு. வாரநாட்களில் எப்பவும் ஒரே கால அட்டவணைதான். நாங்க ஆபீஸ்ல, பசங்க பள்ளிக்கூடத்துக்குப் போய்டுவாங்க. அப்பாவுக்கு ஒரே போர் அடிக்கும்.

ஒருநாள் சாயந்தரம் எல்லாரும் நூலகத்தில் குடும்ப நேரம் (family time) நிகழ்ச்சிக்குப் போனோம். முப்பது நிமிடந்தான். முதல் 10 நிமிடம் ஏதாவது கதை சொல்வாங்க; அப்புறம் பாட்டு; கடைசி 10 நிமிடம் பொம்மலாட்டம். ஒவ்வொரு வாரமும் வேற வேற கருத்துல (theme) இருக்கும். அப்பா ஃபேமிலி டைம் வர்றது இதுதான் முதல் தடவை. என்னோட பசங்க ரெண்டுபேரும் தங்களை மறந்து கதையோட ஒன்றிட்டாங்க.

எங்களைப் போலவே நெறயப் பேரு குழந்தைகளோடு வந்து இருந்தாங்க. ஃபேமிலி டைம் முடித்ததும் எல்லாக் குழந்தைகளும் வரிசைல நின்னு கையில ஸ்டாம்ப் வாங்கிட்டு போனாங்க. அப்பாக்கு இதெல்லாம் பாத்து பயங்கர ஆச்சரியம். அப்பா அன்னைக்கி முழுவதும் ஃபேமிலி டைம் பத்தி நிறையக் கேள்வி கேட்டுகிட்டே வந்தாங்க. எப்படி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்றாங்க? யாரு பணம் கொடுக்குறாங்க? எப்படி குழந்தைக இப்படி ஆர்வமா கலந்துக்கிறாங்க?

இன்னைக்கும் என்னோட சின்னவயசு ஞாபகங்கள்ல மறக்காம இருக்குறது எங்க வீட்டுல இருந்த ரெண்டு பீரோ புத்தகங்கள். நானும் தங்கச்சியும் போட்டிபோட்டுப் புத்தகம் படிப்போம். அப்பா ராத்திரி தூங்கும்போது நெறைய கதை சொல்லுவாங்க. அதுவே அப்பாவ குழந்தை எழுத்தாளரா மாத்திடுச்சி.

ஆனா, இன்றைய குழந்தைகள் உலகம் வேறமாதிரி இருக்கு. அவங்க கவனத்தைத் திசைதிருப்பப் பல காரணிகள் இருக்கு. பாடப்புத்தகங்கள் சுமையாகவே இருக்கு. நூலகங்கள் மேலேயுள்ள ஈர்ப்பு ரொம்ப கொறஞ்சிருச்சு. நம்ப நாட்டு நூலகங்களும் வித்தியாசமா ஏதும் முயற்சிகளைச் செய்யல. கல்விமுறையும் அதற்கு வழி செய்யல. மேலைநாடுகளின் பாடத்திட்டம் புத்தகம் படிக்கிற பழக்கத்தைச் சிறுவயது முதலே ஊக்குவிக்குது. இதனால அவங்களால இந்த பரந்த உலகத்தச் சின்னக் கண்கள் கொண்டு பார்க்க முடியுது.

இப்படி யோசிக்கிட்டு இருக்கும்போதுதான், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி அப்பா வாட்ஸாப்ல (whatsapp) அனுப்புன போட்டோ ரொம்ப ஆச்சர்யப்படுத்திருச்சு. அது குன்றத்தூர் நூலகத்துல ஃபேமிலி டைம் நடக்குற போட்டோ! நெறைய பசங்க ஆர்வத்தோட கலந்துக்கிட்டு இருந்தாங்க. என்னால நம்பவே முடியல. பீட்ஸா, பர்கர், ஜீன்ஸ் போன்றவைகள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட இது பெருசுன்னு தோணிச்சு. போன வாரம் பூந்தமல்லி நூலகத்திலயும் நடத்திருக்காங்க. மேலும் வரவேற்பு கெடச்சிருக்கு.

நல்ல தாக்கங்கள் வரவேற்கப்பட வேண்டும். அப்பாவோட இந்த முயற்சி வெற்றிபெறும் என்று நம்புறேன்!

பாரதி சுகுமாரன்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com