இருட்டறையில் இருவர்
ஆங்கிலமூலம்: சிவா மற்றும் ப்ரியா
தமிழ் வடிவம்: மதுரபாரதி

அங்கே ஒரே இருட்டாக இருந்தது. ஹரிக்கும் கிரிக்கும் நகரக் கூட இடம் இல்லை.

'ஏய் கிரி, நாம இங்கே இருந்து வெளியே போனதும் நிரந்தர வருமானம் பெற வழி என்ன தெரியுமா?' கேட்டது ஹரி.

'வெளியே போறோமா நாம? சொல்லு, எப்படி?' என்று கேட்ட கிரியின் குரலில் கிண்டல்.

'அரசுப் பத்திரங்கள்னு கேள்விப்பட்டது உண்டா?' என்றான் ஹரி.

'எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்தத் தண்ணீரால் நிரம்பிய இடமும், நாத்தமும், அங்கே வெளியே இருக்கிற ஆசாமி சாப்பிட்டுக்கிட்டே இருக்கறதும் தான்' என்று குறைப்பட்டுக் கொண்டான் கிரி.

ஆனால் ஹரி விடுவதாக இல்லை. 'தனிநபர்களைப் போல அரசாங்கத்துக்கும் சில பெரிய திட்டங்களை நிறைவேற்றக் கடன் தேவையாக இருக்கும். அப்போ, அது கடன் பத்திரங்களையும், பிராமிசரி நோட்டுகளையும் வெளியிடும். நீ கடன் கொடுத்தால் அரசு, உனக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்கும்.

'அரசாங்கத்துக்குக் கடன் கொடுக்கிறதுல ஒரு அனுகூலம் என்னன்னா, குறிப்பிட்ட காலத்தில உனக்கு வட்டி வந்துகிட்டே இருக்கும். கடன் முடிவு காலம் வந்ததும் முதல் திருப்பிக் கிடைக்கும்.'

'பரவா இல்லையே, உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்லேன்' என்று சற்றே ஆர்வத்துடன் கேட்டான் கிரி.

தான் சொல்வதைக் கேட்க ஆள் கிடைத்ததில் ஹரிக்கு சந்தோஷம். 'நீ 100,000 டாலரை அரசுப் பத்திரத்தில் 6 சதவிகித வட்டிக்கு முதலீடு செய்ய விரும்புகிறாய் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வோர் ஆண்டும் உனக்கு 6,000 டாலர் அதுல ஒரே மாதிரியாக வருமானம் வரும். பத்து ஆண்டு கழிந்ததும் நீ கொடுத்த 100,000 டாலர் திரும்ப வரும். வட்டி ஆறு மாதத்துக்கு ஒரு முறை என்பதனால், ஒவ்வொரு முறையும் உனக்கு 3,000 டாலர் வரும்.'

'நல்லா இருக்கே. ஒவ்வொரு வருடமும் வரும் வருமானம் ஒரே அளவுதான் என்பதால், இதை நிரந்த வருமான முதலீடுன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன். தவிர, நீ சொன்ன அரசுப் பத்திரம் 10 ஆண்டுகளில் முதிர்வடைவது. சரி, ஒருவேளை எனக்கு 2 ஆண்டுக்குப் பிறகு பணம் வேணும்னா?' என்றான் கிரி.

'நல்லாத்தான் கவனிக்கிற நீ. இந்தப் பத்திரத்தை நீ விற்கலாம். அடுத்த 8 வருடத்துக்கு நிரந்தரமான வருமானம் வேணும்னு நெனக்கற ஒருத்தருக்கு வித்துடலாம்.

'உன்னுடைய முதலீடு 100,000 டாலர்.

6 சதவிகிதத்தைக் கூப்பான் ஆக (வட்டி விகிதமாக) வாங்கிக்கொள்ளச் சம்மதித்து இருக்கிறாய். ஆனால், நீ முதலீடு செய்து இரண்டு வருடங்களில் வெளிச் சந்தையில் வட்டி விகிதம் ஏறியிருக்கலாம். இந்தப் பத்திரத்தை விற்கப் போகும்போது, வெளிச்சந்தையை விட இந்த 6 சதவிகிதம் குறைவு. எனவே, நீ இந்தப் பத்திரத்தை 100,000 டாலருக்கே விற்க முடியாது. உன்னிடமிருந்து கடன் பத்திரத்தை வாங்குகிறவர் 90,000 டாலர் தரச் சம்மதிக்கலாம். ஆனால் அவருக்கு 6 சதவிகித வட்டி தொடர்ந்து கிடைப்பதோடு, இறுதியில் 100,000 டாலரும் திரும்பக் கிடைக்கும். நீ முதலில் கொடுத்த 100,000 டாலரை முகப்பு விலை (Face Value-FV) அல்லது முதல் என்று சொல்வார்கள்.'

வெளியே இருந்த நபர் 'அவர்கள் 4 மாதத்தில் வெளியே வருவார்கள்' என்று சொன்னது ஹரி, கிரிக்குக் காதில் விழுந்தது.

(அவர்கள் இருந்த இருட்டறை சிறைச்சாலை அல்ல.)

'இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் நான் விற்க விரும்பும்போது, ஒருவேளை வட்டி விகிதம் குறைவான பணவீக்கத்தின் காரணமாக இறங்கிப் போயிருந்தாலோ?' என்று ஒரு கேள்வியைப் போட்டான் கிரி.

'என் அன்பு இருட்டறைத் தோழனே! அப்போது உனக்குக் கிடைக்கும் வட்டி விகிதம் 6 ஆகத்தான் இருக்கும். ஆனால் பொதுச் சந்தையில் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் உன்னுடைய பத்திரத்தின் மதிப்பு ஏறி இருக்கும். நீ அதை விற்கப் போனால், அதன் முகப்பு விலையை விட அதிகம் கிடைக்கும். ஆகவே, முதலிலேயே வெளியிடப்பட்ட பத்திரம் ஒன்றன் சந்தை விலை மாறும், ஆனால் முகப்பு விலை அப்படியே இருக்கும்.

'கடன் பத்திரங்கள் வாங்க விற்க மிக எளிமையானவை என்பதால் உலகெங்கிலும் தினந்தோறும் அது மிக அதிகம் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதை நீ துணைநிலைச் சந்தையில் வாங்கப் போனால் உனது முதலீட்டில் மாறுபாடு இருக்கும். ஒரு 100,000 டாலர் பத்திரத்தை நீ 90,000 டாலருக்கு வாங்கி, அதில் உனக்கு 6 சதவிகித வட்டி கிடைக்கிறதென்று வைத்துக் கொள்வோம். முதல்நிலைச் சந்தையில் அவர் கொடுத்ததை விட நீ குறைவாகத்தான் முதலீடு செய்திருக்கிறாய். இப்படி வருமானத்தைக் கணக்கிடுவது 'ஈட்டம்' (yield) எனப்படும்' ஹரி விளக்கி முடித்தான்.

'அட, இதோ சாப்பாடு வருதே. இந்த வெளி ஆசாமி சாப்பிடும்போதெல்லாம் நாம சாப்பிட வேண்டி இருக்கு' என்றான் கிரி.

'சரி, உனக்கு ஒரு கடுமையான கேள்வி போடறேன். வட்டி விகிதம் ஏறினால் ஈட்டம் ஏறுமா, குறையுமா?' என்றான் ஹரி.

திரவ உணவை விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்த கிரியின் முகத்தில் ஆத்திரம் தென்பட்டது.

ஹரி சிரித்தான். 'நானே சொல்றேன். நீ முதல்நிலைச் சந்தையில் 6 சதவிகிதத்துக்கு 100,000 டாலர் பத்திரம் வாங்கினால் உன் கூப்பான் விகிதமும் ஈட்டமும் ஒண்ணுதான். இரண்டு வருஷத்துக்குப் பிறகு நீ அதை விற்கும் போது, வட்டி விகிதம் ஏறிவிட்டால், உன் பத்திரத்தின் விலை குறைகிறது. நீ 90,000 டாலருக்கு விற்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். பத்திரத்தை வாங்குகிறவர் 90,000 தான் கொடுப்பார். ஆனால் 100,000 டாலரின் பேரில் 6 சதவிகிதம் பெறுவார். அப்போது, அவருக்கு ஈட்டம் அதிகமாகிறது. அதாவது, வட்டி விகிதம் அதிகமானால் ஈட்டமும் அதிகப்படும்.'

(அந்த இருட்டறை கல்லூரி விடுதியறை அல்ல.)

'ஒரு பத்திரத்தை வாங்கவோ விற்கவோ சரியான நேரம் எது?' என்று கேட்டான் கிரி.

ஹரி விளையாட்டாக கிரியின் காலில் ஓர் உதை விட்டான். 'கொஞ்சம் புத்திசாலித் தனமாக் கேள்வி கேக்கறயே. வட்டி விகிதம் கீழே இறங்கும் போது, 6 சதவிகிதப் பத்திரம் சந்தை நிலைமையைவிட நல்லதாகத் தெரியுது. அப்போது நீ அதை அதிக விலைக்கு விற்கலாம்; 110,000 டாலருக்கு விற்கலாம்னு வச்சுக்கோயேன். 110,000 டாலர் கொடுத்து வாங்குகிறவருக்கு 100,000 டாலரின் பேரில் 6 சதவிகித வட்டிதான் கிடைக்கும். வட்டி விகிதம் இறங்கும் போது, ஈட்டம் குறையும். அந்தச் சமயத்தில் துணைநிலைச் சந்தையில் பத்திரத்தை விற்பது நல்லது. ஆனால், வட்டி விகிதம் ஏறும் போது, துணைநிலைச் சந்தையில் பத்திரம் வாங்கலாம்.'

'ஹரி, நீ பயங்கர புத்திசாலிடா' என்று பாராட்டினான் கிரி. 'ஒரு விஷயம் சொல்லு, யாராவது அரசாங்கத்தின் கடன் வரலாற்றைப் பார்ப்பதுண்டா?' என்று கேட்டான்.

'பின்னே? அமெரிக்க அரசாங்கத்துக்கு மிக உயர்ந்த கடன் தகுதி வழங்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தனிநபர்களும் நிறுவனங் களும் அதற்குக் கடன் தரத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றான் ஹரி.

'சுருக்கமாச் சொன்னால், கடன் பத்திரம் என்பது அரசாங்கத்துக்குத் தரப்படும் கடன்' கிரி தொகுத்துச் சொன்னான், 'கடன் வாங்கியவருக்கும் கொடுத்தவருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில், கடன் தருபவர் தனிநபர், வாங்குபவர் அரசாங்கம். இந்தக் கடனைக் கருவூலத்துக்குத் தருவதால் இவற்றை 'கருவூலப் பத்திரங்கள்' என்று சொல்வார்கள். சரி, இதைச் சொல்லு. மொத்தக் கடன் தொகை இவ்வளவு என்று நிர்ணயிப்பது யார்?'

'எவ்வளவு மொத்தக் கடன் தொகை, எவ்வளவு காலத்துக்கு அதை வாங்குவது என்ற விஷயங்களைக் கருவூலத் துறைதான் தீர்மானிக்கும். சூழ்நிலையைப் பொறுத்து, மிகக் குறைந்ததில் இருந்து நீண்ட காலம் வரையில் பணம் தேவைப்படலாம். அதற்கு ஏற்ப, வெவ்வேறு முதிர்வுக் காலங்களுக்கான பத்திரங்களை வெளியிடும்.

'ஒரு வருடத்துக்குள் முதிர்வடையும் பத்திரம் 'கருவூல உண்டியல்' எனப்படும். இது குறுகிய காலப் பத்திரம். இரண்டிலிருந்து பத்தாண்டு களுக்குள் முதிர்வடைவது 'கருவூலத் தாள்' எனப்படும்.'

இந்தச் சமயத்தில் 'பார்வதி, இப்போது உன் முறை' என்று கூப்பிடும் ஒலி கேட்டது.

(இருட்டறை அதிர்ந்தது. ஹரியும் கிரியும் வாயை மூடிக்கொண்டனர்.)

பார்வதி எழுந்து, வாயாடி இரட்டையரை வயிற்றில் சுமந்தபடிக் கதவை நோக்கி நடந்தாள். கதவில் மிகப் பொருத்தமாக எழுதியிருந்தது: 'வெளியே தள்ளு'!

ஆங்கிலமூலம்: சிவா மற்றும் ப்ரியா
தமிழ் வடிவம்: மதுரபாரதி

© TamilOnline.com