அன்புள்ள சிநேகிதியே
சமீபத்தில் மூன்றுவாரம் லீவ் எடுத்துக்கொண்டு நான் இந்தியா போய்விட்டு வந்தேன். அம்மாவைப் பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொருமுறையும், பையன், பெண், காலேஜ் அட்மிஷன், என்னுடைய வேலைப்பளு என்று தள்ளிக்கொண்டே போய் விட்டது. அப்பா போய் ஏழு, எட்டு வருடம் ஆகிவிட்டது. போனமுறை நான் அங்கே போனபோது என் புகுந்தவீட்டில் ஒரு கல்யாணம். உறவினர்கள், நண்பர்கள் என்று அம்மாவுடன் அதிகநேரம் செலவழிக்க முடியவில்லை. எனக்கு அந்தக் குற்றவுணர்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது. இரண்டு சகோதரர்கள். நான் ஒரே பெண். என் அம்மா எப்போதும் கடிந்துகொண்டே இருப்பார் சின்ன வயதில். பூஜை, ஆச்சாரம் என்று அதிலேயே மூழ்கியிருப்பார். அப்பா நேரெதிர். பிசினஸ் மேன். நான் அப்பா செல்லமாக இருந்ததால் அம்மாவை அதிகம் கண்டுகொள்ளவில்லை. இங்கே வந்தபிறகு என் குழந்தைகள் வளரும்போது நான் சந்தித்த சவால்களை நினைக்கும்போது அம்மாவின் கட்டுப்பாட்டின் அவசியமும், அம்மாவின் அருமையும் புரிந்தது. எனக்கு ஒரு அண்ணா, ஒரு தம்பி. அண்ணா திருமணம் ஆகி ஐந்தாறு வருடங்களில் ஒரு ஆக்சிடெண்டில் போய்விட்டார். அவர் மனைவி பிறந்த வீட்டோடு போய்விட்டார். குழந்தைகளும் இல்லை. என் தம்பிதான் எல்லாச் சொத்துக்கும் வாரிசு.
அவன் எஞ்சினியரிங் முடித்துவிட்டு பிசினஸ் தொடங்கும்போது, அவனுடைய செக்ரடரியையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டான். படிப்பு, அழகு, வசதி எல்லாமே சுமார். ஜாதியிலும் சிறிது வித்தியாசம். அம்மா எதிர்ப்பு. அப்பா சப்போர்ட். இருக்கும் ஒரு பிள்ளையும் தன்னைவிட்டுப் பிரிந்து போய்விடுவானோ என்ற பயமா தெரியவில்லை. என் தம்பியின் மனைவி அப்பாவுடன் ஃப்ரெண்ட்லியாக இருந்தாள். ஆனால், அம்மாவைச் தவிர்த்துக்கொண்டு அதே வீட்டில் வாழ்ந்தாள். இந்தக் குடும்ப டைனமிக்ஸ் எப்படிப் போயிருக்கும் என்று உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். என் அம்மாவுக்கு எல்லா வசதியும் இருக்கிறது. ஆனால், ஒரு தங்கக் கூண்டில் இருப்பதுபோல் இருக்கிறாள். நான் எப்போது ஃபோன் செய்தாலும் தம்பிமனைவியின் பாராமுகம் பற்றியே பேசுவாள். நான் அங்கே இருந்து பார்க்காததால் அம்மாவுக்கு ஆறுதல், அறிவுரை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன். அப்பாவும் தன் வாழ்நாளில் அம்மாவை அதிகம் சப்போர்ட் செய்ததில்லை. இந்தமுறை அம்மாதான் முக்கியம் என்று நான் போய்விட்டு வந்ததில் மிகவும் சோகத்தைத்தான் சுமந்து கொண்டு வந்திருக்கிறேன்.
அம்மாவுக்குத் தனி அறை. வேளைக்குச் சாப்பாடு வருகிறது. 24 X 7 வேலைக்காரி இருக்கிறாள். ஆனால், வெளியே போகச் சுதந்திரம் இல்லை. வீட்டிற்கு உறவினர் வந்தால் ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசவிடுவதில்லை. என் தம்பி பிசினஸ், பிசினஸ் என்று ரொம்ப பிசி. அவன் மனைவி எப்போதாவது மாமியார் அறைக்கு வந்து எட்டிபார்த்துவிட்டுப் போவாள். மக்களைப் பார்த்துப் பேச, உறவினர்களைப் பார்த்துப் பேச ஏங்குகிறாள் அம்மா. நான் டிஸ்க்ரீட்டாகத் தம்பி மனைவியிடம் சொல்லிப்பார்த்தேன் அவள் அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. "என் கணவன், என் குழந்தைகள், என் சொந்தம்" என்ற மனோபாவத்தில்தான் இருக்கிறாள். என் தம்பியிடமும் சொல்லிப் பார்த்தேன். "அம்மா அந்தக் காலத்தில் 'இவள் என் வீட்டிற்குள் நுழையத் தகுதி இல்லாதவள்' என்று சொல்லிவிட்டாள். அந்த வருத்தம் இவளுக்கு இன்னமும் போகவில்லை. அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? அம்மாவிற்கு நான் என்ன குறை வைத்திருக்கிறேன்? உனக்கு வேண்டுமால் நீ கொண்டுபோய் வைத்துக்கொள். நான் பணம் அனுப்புகிறேன்" என்று சொல்லி, பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். அம்மாவிற்கு 80 வயது ஆகிறது. டிராவல் செய்கிற வயதா? மிகவும் தளர்ச்சியாக இருக்கிறாள். மறதி அதிகமாகி விட்டது. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். என்னால் முடிந்தவரை கம்பெனி கொடுத்தேன்.
நான் கிளம்பும் சமயம் சின்னக்குழந்தையைப் போல அழுதாள். "என்னை நீயும் அனாதையாக விட்டுவிட்டுப் போகிறாயா?" என்றூ கேட்டாள். தான் சிறுவயதில் கண்டிப்பாக இருந்ததற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டாள். பாவமாக இருந்தது. "இங்கே பேரன், பேத்திகூட ஒட்ட மாட்டார்கள்" என்று ஆதங்கமாகச் சொன்னாள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. யார்மேல் தவறு? 20, 25 வருடங்களுக்கு முன்னால் மாமியாருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்ற காரணத்தை வைத்து, ஏன் இன்னமும் அந்நியப்படுத்தி வைக்கிறார்கள்? என் தம்பியின் மனைவி மாமியாருடன் சண்டை போட்டால்கூட நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு கம்யூனிகேஷனாவது இருக்கும். சைலண்ட் ட்ரீட்மெண்ட் அல்லவா கொடுத்துக் கொண்டிருக்கிறாள்! நானே ஒரு விருந்தினர் போலத்தான் போய்விட்டு வந்தேன். உறவுகளின் முக்கியத்துவம் குறித்து எப்போதும் எழுதி வருகிறீர்கள். சொந்தத்தம்பி. ஒரே தம்பி. ஆனால், பாசம் எங்கேயோ ஒளிந்து கொண்டுவிட்டது. பணத்தால் எனக்கும், என் குழந்தைகளுக்கும் செய்தார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எங்கேயோ ஒரு நரம்பு அறுந்துபோய் விட்டது. அது அறுந்துபோய் இருக்கிறதா அல்லது விலகிப் போயிருக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை. அதை இந்த வயதில், இந்தக் காலகட்டத்தில் சரிசெய்ய முடியுமா என்று சொல்லுங்கள்.
இப்படிக்கு ...................
அன்புள்ள சிநேகிதியே,
இதில் நிறையப் பரிமாணங்கள் இருக்கின்றன, ஆய்ந்து கருத்துக்களைத் தெரிவிக்க. நிறைய விவரங்கள், சம்பவக் கோவைகள் தேவைப்படுகின்றன. "முடியும், முடியாது, பொறுத்திருந்து பாருங்கள்" என்றும் சொல்ல முடியவில்லை. ஆனால், இதுபோன்று பலப்பல குடும்பங்களில் வேதனைப்படுபவர்களைப் பார்த்திருக்கிறேன். வரும் இதழ்களில் என்னுடைய பொதுவான கருத்துக்களை வெளியிட யோசனை. ஆனால், அதற்கெல்லாம் நீங்கள் காத்திருக்க வேண்டாம். தினமும் ஆசையாக அம்மாவுடன் ஐந்து நிமிடம் பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்ததைப் பேசுங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அறிவுரை வேலை செய்யாது. உங்கள் பொன்னான ஐந்து நிமிடங்கள் அவருக்கும் தேவை; உங்களுக்கும் தேவை. குற்ற உணர்ச்சியே வேண்டாம். Move forward.
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், கனெக்டிகட் |