ஷரத் நாராயண்
அது பதின்ம வயதினருக்கான ஜெப்பர்டி (Jeopardy Teen Tournament) வினாடிவினா நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று. கடைசிக் கேள்விக்கு ஷரத் நாராயண் பணயமாக வைத்த தொகை $901. அவருடைய விடை சரியாகவும் இருந்தது. அவரை அடுத்த போட்டியாளர் $11600 பணயம் வைத்துச் சரியான பதில் கூறிவிட்டார். ஆனால், முந்தையநாள் வெற்றித்தொகை, அன்றைய வெற்றித்தொகை இரண்டையும் கூட்டிப் பார்த்தபோது ஷரத்தின் தொகை ஒரு டாலர் அதிகமாக, $39701 ஆக இருந்தது. அந்த ஒரு டாலரால் அவர் வென்ற தொகை $100,000!

தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்த ஷரத் நாராயண் அலபாமாவின் மேடிசன் நகரிலுள்ள ஜேம்ஸ் க்ளெமென்ஸ் உயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர். பத்து ஆண்டுகளாக ஜெப்பர்டியைக் குடும்பத்துடன் ரசித்துவரும் இவருக்கு, அப்போட்டியில் பங்கேற்பது நீண்டநாள் கனவு. பல முயற்சிகளுக்குப் பின் வாய்ப்புக் கிட்டியது. புதுப்புது விஷயங்களைக் கற்கும் ஆர்வம் கொண்ட ஷரத் நடுநிலைப் பள்ளி நாட்களிலிருந்தே வினாடிவினாப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

"இப்போட்டியில் வெற்றிபெறத் தயாரிப்பு அவசியம். சரியான தொகையைப் பணயம் வைப்பது முக்கியம். எப்படிச் சரியான தொகையைப் பந்தயம் கட்டவேண்டும் எனத் தெரிந்து வைத்திருந்தேன். அதிகப் பணயம் வைத்து, தவறான பதில் சொன்னால் இழப்பு மிக அதிகம் எந்தத் துறைகளில் பலவீனமாக இருந்தேனோ அவற்றில் கவனம் செலுத்தினேன். உதாரணமாக, விளையாட்டு மற்றும் நாட்டு நடப்பு" என்கிறார் ஷரத்.

பொது அறிவுக்கு விக்கிபீடியா சிறந்த தளம், அங்கு எல்லா விவரங்களும் விரல்நுனியில் கிடைக்கின்றன என்கிறார் ஷரத். தாவிரவியலும், வேதியலும் இவருக்கு மிகவும் பிடித்த பாடங்கள். கணித வகுப்புகளும் பிடித்தவைதாம். எதிர்காலத்தில் ஒரு மருத்துவர் அல்லது பயோமெடிகல் ஆராய்ச்சியாளர் ஆக விரும்புகிறார்.அடக்கமாகப் பேசும் ஷரத், பணிவு, மென்மை போன்றவற்றைப் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். அதே சமயம், எந்த முயற்சியிலும் இயன்றவரை நன்றாகச் செய்யவேண்டும் என்பதும் அவர்களது அறிவுரைதானாம். அடுத்த குறிக்கோள் பள்ளி மற்றும் இளநிலைப் பட்டம் முடித்தபின் மருத்துவம் பயிலுவது. தனக்கு ஆதரவாக இருந்த பெற்றோர், குடும்பத்தார், ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

கடின உழைப்பாளி, இயல்பாகவே புத்திசாலி, அபார நினைவாற்றல் கொண்டவர் எனத் தாயார் ரமாவும் தந்தையார் ஆதித்யாவும் இவரைப்பற்றி ஒரே குரலில் பெருமையாகக் கூறுகின்றனர்.

தொகுப்பு: மீனாட்சி கணபதி

© TamilOnline.com