திரிவேணி: தமிழுக்கொரு தங்கச் சுரங்கம்!
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 100 ஆயிரம் டாலர் நிதியுதவி புரிந்துள்ளது திரிவேணி குழுமம். அதன் சார்பில் குழுமத்தின் செயல் இயக்குனர் திரு. கார்த்திகேயன் வழங்கியதைப் பற்றிய செய்தி சென்ற மாதத் தென்றலில் வெளிவந்தது. திரிவேணி நிறுவனத்தின் மனிதவள இயக்குனர் திரு. சரவணன், இந்த நிதிபற்றிக் கூறியதை அடுத்து இந்தக் கொடை வழங்கப்பட்டது.

டாலஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்திகேயன் ஒரு சுவையான சம்பவத்தைக் கூறினார். இந்தோனேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல்கலாமைச் சந்திக்க தூதரக அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருக்கிறார். அவர்கள் நேரமின்மையைக் காரணம் கூறி மறுத்துவிட்டார்கள். ஆனால் நிகழ்ச்சியில் கார்த்திகேயனைப் பார்த்த டாக்டர் கலாம், "நீங்கள் தமிழர்தானே?" என்று தமிழில் கேட்டதோடு, நீண்டநேரம் பேசி மகிழ்ந்துள்ளார்.

இந்தியாவிலேயே ஒரு தனியார் தங்கச்சுரங்கம் இருப்பது சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் திரிவேணி குழுமத்திடம்தான். ஏப்ரல், மே மாதங்களில் செயல்பாட்டுக்கு வரப்போகும் இந்தச் சுரங்கத்தில் உலகின் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் ஜோனகிரியில் உள்ளது இந்தச் சுரங்கம். அங்கிருக்கும் பழைமையான கோவிலருகே சுமார் ஒரு மைல் தூரத்திற்கு மேலான சுரங்கப்பாதை ஒன்று பல நூறாண்டுகளாக உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 25 ஆண்டுகளாகச் சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தின் தலைவர் பாலசுப்ரமணியம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சேலத்தில் சாமுண்டி பல்பொருள் அங்காடியில் ஆரம்பித்து, வாகனக் கடன் வழங்கும் திரிவேணி நிதி நிறுவனம், சுரங்கங்களுக்கு எக்ஸ்கவேட்டர் வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனம் எனப் படிப்படியாக வளர்ந்து சுரங்கத்தொழிலுக்கு வந்துள்ளனர். பாக்சைட், நிலக்கரி, மாங்கனீசு, இரும்புத்தாதுச் சுரங்கங்களை சொந்தமாகவும், குத்தகை முறையிலும் நடத்திவருகிறார்கள். ஆந்திரா, கர்நாடகம், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்தச் சுரங்கங்கள் இருக்கின்றன. ஓசூரில் கல் குவாரியிலிருந்து ஜல்லி மற்றும் செயற்கை மணல் தயாரிக்கும் தொழிற்சாலையும் உள்ளது. இந்தோனேஷியாவிலும் இரண்டு நிலக்கரிச் சுரங்கங்கள் உண்டு. ஆந்திராவில் கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் போலாவரம் அணைக்கட்டுத் திட்டத்தில் திரிவேணி குழுமம் முக்கிய ஒப்பந்ததாரர்.

சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் திரிவேணியின் மேலாண்மை மற்றும் செயல் இயக்குனர்களாக, பாலசுப்ரமணியத்தின் மகன்கள் பிரபாகரன், கார்த்திகேயன் சகோதரர்கள் நிர்வகிக்கிறார்கள். சில சிரமங்கள் இருந்தாலும் சொந்த ஊரில் இருக்கவேண்டும் என்பதற்காகவே சேலத்தில் தலைமையிடம் அமைத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.



இவர்களது திரிவேணி அறக்கட்டளை சேலம், நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தருகிறது. மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. பார்வையற்றவர்களுக்காக வோடஃபோன் நிறுவனத்துடன் இணைந்து கால் சென்டர் நடத்துகிறது. 175 கிராமங்கள் பலனடையும் வகையில் 6 இலவச மருத்துவமனைகளும் ஒரு பரிசோதனை நிலையமும் நடத்துகிறது. ஆதிவாசிகளுக்குச் சுயதொழில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பயிற்சிகள் வழங்கி உயர்த்துகிறார்கள்.

சுரங்கங்கள் உள்ள ஊர்களிள் சாலை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை இலவசமாக செய்து தந்துள்ளார்கள். சுரங்கத்திலிருந்து வெளியேறும் நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளனர். சுரங்கத்தில் கிடைக்கும் எந்த தாதுப்பொருளையும் வீணாக்குவதில்லை. மற்றச் சுரங்கங்களில் அவை கழிவுப் பொருளாகக் கருதப்படும். ஆனால் திரிவேணி, மணல் உட்பட அனைத்தையும் மதிப்புக் கூட்டுதல், மறுசுழற்சி என்று உபயோகப்படுத்துகிறார்கள்.

டாலஸ் நிகழ்ச்சியில் தமிழர்கள் தமிழ் இருக்கைக்காகப் பணியாற்றுவதைப் பார்த்து, மென்மேலும் தமிழ்ப்பணி ஆற்றவேண்டும் என்ற தூண்டுதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் கார்த்திகேயன்.

சின்னமணி

© TamilOnline.com