பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், வாகனப் புகையால் சுற்றுச்சூழல் மாசடைதல், ஓசோன் ஓட்டை, பருவநிலை மாற்றம் என்றெல்லாம் பல்வேறு பிரச்சனைகள் நம்மை அச்சுறுத்துகின்றன. இதற்கு மாற்றாக "they don't drink; they don't shout and they don't smoke" என்று அறைகூவி, மின்சார வாகனங்களை ஒன்பதாண்டுகளாகத் தயாரித்து வருகிறார் திருமதி. ஹேமா அண்ணாமலை. "லைசென்ஸ் தேவையில்லை; பதிவு எண் அவசியமில்லை; சாலைவரி கிடையாது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது" என்பவை இவற்றின் கூடுதல் சிறப்பம்சங்கள். மென்பொருள் பட்டதாரியான ஹேமா, ஆஸ்திரேலியாவின் ராயல் மெல்பர்ன் இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.ஏ. படித்தவர். விப்ரோ உட்படப் பல மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். சாதிக்கும் கனவுடன் ஆட்டோமொபைல் தொழிலுக்குள் நுழைந்தார். தனது பயணம், வாகனங்களின் சிறப்பு, தொழிலில் எதிர்கொண்ட சவால்கள் பற்றியெல்லாம் தென்றலுடன் பகிர்ந்துகொண்டார்.
ஹேமா பிறந்தது சேலத்தில். படிப்பு சென்னையிலும் கோவையிலும். பெங்களூரு, சிங்கப்பூர் என்று மென்பொருள் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் மின்வாகனங்களைப் பற்றி அறியவந்தார். இந்தியாவில் அதற்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று முடிவு செய்தவர், 2008ல் வசதியான தன் பணியைத் துறந்துவிட்டு ஆம்பியர் நிறுவனத்தை (Ampere Vehicles Pvt. Ltd.) ஆரம்பித்தார். ஐந்து கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், இன்று நூறு கோடி இலக்கை நோக்கி நடைபோடுகிறது. குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார், ஒடிஸா எனப் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் கிளை பரப்பியிருக்கிறது.
ஆம்பியரை ஆரம்பித்த நோக்கம்பற்றிக் கூறும் ஹேமா, "நான் நிறைய நிறுவனங்களில் பணி புரிந்திருக்கிறேன். பிறர் கனவுகளை நனவாக்க உழைப்பதைவிட என் கனவுகளை நனவாக்கலாமே என்று தோன்றியது. சுதந்திரமாகச் செயல்படும் ஆர்வம் இருந்தது. எனக்கு இரண்டு சின்னக் குழந்தைகள், அவர்களை வளர்க்கவேண்டும். அப்போது வெளிநாட்டில் இருந்தேன். இப்படியான சூழலில், நம் நாட்டில், நாமே நமக்காக ஒரு சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினால் என்ன என்று தோன்றியது. அப்படி ஆரம்பித்ததுதான் இது" என்கிறார்.
மாநிலத் தலைநகரான சென்னையை விடுத்து கோயம்புத்தூரை ஏன் தேர்ந்தெடுத்தார்? "கல்லூரிப் பருவத்தில் இங்கேதான் இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஊர் கோவை. மற்றுமொரு முக்கியமான காரணம், கிராமப்புறம் சார்ந்த இதன் வளர்ச்சிதான். இங்கேதான் ஆட்டோமொபில், டெக்ஸ்டைல் தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கின்றன. கோவையே சிறந்ததென்று நான் எடுத்த முடிவு, என் வாழ்க்கையின் மிகச்சிறந்த முடிவு என்று நினைக்கிறேன். 'வந்தாரை வாழவைக்கும் கோவை' என்னையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது" என்கிறார்.
மின்காந்தத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஆந்த்ரே மரீ ஆம்பியரின் நினைவாகத் தனது மின்வாகன நிறுவனத்திற்கு அவர் பெயரையே சூட்டியிருக்கும் ஹேமா, ஒரு தொழில் முனைவோராக ஆரம்பத்தில் எதிர்கொண்ட சவால்களை நினைவுகூர்ந்தார். "எந்தத் தொழிலுக்கும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். எதிர்கொள்ளத்தான் வேண்டும். இல்லாவிட்டால் வளர்ச்சி இருக்காது. இதில் நான் முக்கியமாகக் கருதுவது ஒன்று நேரம் தவறாமை. நேர ஒழுங்கு ரொம்ப முக்கியம். இரண்டாவது எந்த புராஜெக்ட் ஆனாலும் அதில் ஆழமாக, தீர்க்கமாக, நேர்மையாக, உண்மையாக இறங்கவேண்டும். ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் என்று சந்தேகத்துடன் இறங்கினால் அது வெற்றி பெறாது."
"நமது துறைகுறித்து ஆழமான அறிவு இருக்கவேண்டும்; ஆத்மார்த்தமாக இறங்கவேண்டும். இந்த இந்த நேரத்தில் இதை முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படவேண்டும். இந்த இரண்டையும் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இப்படிச் செயலாற்றினால் நிச்சயம் வெற்றியை அடையலாம்" என்கிறார் ஹேமா.
ஒரு பெண் நிர்வாகி என்ற முறையில் எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றிக் கூறுகையில் "எந்த வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையுமில்லை. பெண் என்றால் சில பாதகங்கள் உள்ளன; சிலவற்றைச் செய்வது கஷ்டம், முடியாது என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். அப்படி எந்த வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் எனது தொழிற்சாலைக்கு வருபவர்களில் சிலர் என்னைப் பார்த்துவிட்டு எங்கே உங்கள் பாஸ் என்று கேட்டுத் தேடுவார்கள். நான் அங்கே இருந்தாலும்கூட வேறு யாரோ ஒரு ஆண்தான் முதலாளியாக இருப்பார் என்று நினைத்துத் தேடுவார்கள். அப்போது "நான்தான் சார், வாங்க, உட்காருங்க" என்று சொல்லி அவர்களிடம் பேசுவேன். முதல் ஆறு மாதங்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அப்புறம் இவர்தான் முதலாளி, இவர்தான் முடிவெடுப்பவர் என்பது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. நாம் அந்த இடத்தில் பெண் என்று எண்ணி, பலவீனமாக இல்லாமல், நமது திறனை வெளிப்படுத்தும் போது அது இயல்பாக ஏற்கப்படுகிறது."
ஆம்பியர் ஏஞ்சல் (மின்சைக்கிள்) ஆம்பியர் வி-48, ஆம்பியர் வி-60 (மின்ஸ்கூட்டர்கள்), ஆம்பியர் வி-60 ரிட்ரோ (மாற்றுத் திறனாளிக்கான மின்ஸ்கூட்டர்) போன்றவற்றுடன் ட்ராலி, ஆட்டோ, லோட் வெஹிகிள் போன்றவற்றையும் ஆம்பியர் உருவாக்கி விற்பனை செய்கிறது. இந்தத் தயாரிப்புகளுக்குச் சிறந்த மாடல், சிறந்த வண்டி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிறந்த வாகனம் என்பவை உள்படப் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. ஹேமா அண்ணாமலையும் பல்வேறு அமைப்பினரால் பாராட்டப்பெற்றிருக்கிறார்.
மாற்றுத் திறனாளிக்கெனத் தயாரித்தளித்த வாகனத்தின் சிறப்புபற்றிச் சொல்லும்போது, "மாற்றுத் திறனாளி ஏன் பெட்ரோல் வண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து ஒரு வண்டியை உருவாக்கினோம். அது டெக்னிகலாகப் பெரிய சவாலாக இருந்தது. அவர்கள் பெரும்பாலும் இடுப்புக்குக் கீழே எடை குறைவானவர்களாக இருப்பார்கள். அவர்களால் வண்டியைக் கீழே இறங்கித் தள்ளமுடியாது. அவர்களுக்கு நிறையவே பிரச்சனைகள். மென்பொருள் உதவியுடன் புதுமையாக ஒரு reverse function போட்டுக் கொடுத்தோம். ஒரு பட்டனை அழுத்தினால் வண்டி தானாகவே ரிவர்ஸில் செல்லும். மேலும் இதில் ஹாரன், ஊன்றுகோல் வைக்க இடம், கை பிரேக், பார்க்கிங் பிரேக் எல்லாமே உள்ளன. அவர்கள் பயன்படுத்துவது எளிது. ஆயிரம் வண்டிகளுக்குமேல் தமிழக அரசுக்கு சப்ளை செய்திருக்கிறோம். இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை" என்று ஒரு சாதனையாளரின் பெருமிதத்தோடு சொல்கிறார்.
கோவையில் இரண்டு இடங்களில் இவர்களது தொழிற்சாலைகள் உள்ளன. மின்வாகனங்கள் உண்மையிலேயே சிறந்தவையா? "நிச்சயமாக. பெட்ரோல் வண்டிகளின் புகை சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். பெட்ரோல் எளிதில் தீப்பற்றக்கூடியது. ஆனால் எங்கள் மின்வண்டிகள் மிகப் பாதுகாப்பானவை. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை. பெட்ரோல் வண்டிகளுடன் ஒப்பிட்டால் 25% குறைந்த விலையில் மின்வண்டிகள் கிடைக்கின்றன. பெட்ரோல் வண்டி விலை ரூ.67000 என்றால், மின்வண்டி ரூ.47000 தான். மாதாமாதம் பெட்ரோலுக்குச் செலவழிக்கும் 2000, 3000 ரூபாய் மிச்சம் ஆகும். காரணம், இவற்றுக்குச் சார்ஜ் செய்ய மாதம் 250 ரூபாய்தான் ஆகும். எரிபொருள் செலவு பத்தில் ஒரு பங்குதான். பராமரிப்பதும் எளிது. மொபைல் ஃபோன் சார்ஜ் போடுவதுபோல் எளிதாகச் சார்ஜ் செய்துவிடலாம். இதில் சேமிப்பு, சவுகரியம், சுதந்திரம் எல்லாம் இருக்கிறது." என்று விளக்குகிறார்.
"நீண்டநேரம் சார்ஜ் நிற்காது, அடிக்கடி பேட்டரி மாற்றவேண்டி வரும். வெகுதொலைவு செல்லப் பயன்படாது என்றெல்லாம் சொல்கிறார்களே" என்று கேட்கிறோம். "அதெல்லாம் உண்மையில்லை சார். இதில் 60-80 கி.மீ. வரை போகலாம். குறுகிய தூரம் செல்ல ரொம்பச் சவுகரியம். ஆனால் 100 கி,மீ.க்கு மேல் தொலைவிலுள்ள இடங்களுக்குப் போகவேண்டும் என்றால் அதற்கு வேறு வண்டியைத்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த வகையில் இது பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்று அல்ல. இந்த வண்டிகள் நகருக்குள் ஓட்ட, பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், வேலைக்குப் போகும் பெண்கள் போன்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். பயன்படுத்துவது எளிது. எடை அதிகமில்லை. வேகமாகச் செல்லும் வண்டிகளால்தான் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கின்றன. நகரத்திற்குள் யாரும் 30-35 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்வதில்லை. அந்த வகையில் பெண்களுக்கு, மாணவர்களுக்கு மிகவும் உகந்தது" என்கிறார்.
சார்ஜர்கள், பேட்டரிகள் பற்றிச் சொல்லும்போது, "சார்ஜரை நாங்களே தயாரிக்கிறோம். ஆரம்பத்தில் பேட்டரிகளில் சில குறைகள் இருந்தன. எங்கள் ஆராய்ச்சிப் பிரிவின் விடாத உழைப்பாலும், முயற்சியாலும் அவை சரிசெய்யப்பட்டுள்ளன. காரீய/அமில பேட்டரியில் நாங்கள் புதுமைகள் செய்திருக்கிறோம். பேட்டரி உப்பாதபடிச் செய்திருக்கிறோம். அதனால் பேட்டரியின் வாழ்நாள் அதிகரிக்கிறது. சிறந்த முறையில் செயல்படும் சில்லு (Chip) பொருத்திய காரீய/அமில பேட்டரியை நாங்களே தயாரித்தளிக்கிறோம். அது, பேட்டரியின் ஆயுளை இரண்டு மடங்காக்கி உள்ளது. அதாவது நீங்கள் எலக்ட்ரிக் வண்டி வாங்கும்போது கூடவே இரண்டு வருடத்திற்கான பெட்ரோல் டேங்க்கும் வந்துவிடுகிறது என்று இதைச் சொல்லலாம்" என்கிறார்.
"எங்கள் வாகங்களில் எரியக்கூடிய எரிபொருள் எதுவும் கிடையாது. மெயின்டெனன்ஸ் எளிது. ஸ்பார்க் பிளக் கிடையாது. பேட்டரி, மோட்டார், கண்ட்ரோலர், சார்ஜர், ஏ.சி.-டி.சி கன்வெர்ட்டர் என்று முக்கியப் பகுதிகள் மிகக்குறைவு. சார்ஜ் பண்ணினால் போதும். வண்டி ஓடும். பேட்டரியைச் சரியாகப் பராமரிக்காவிட்டால் பேட்டரி ஒரு வருடம் வரைதான் வரும். சரியாகப் பயன்படுத்தினால் இரண்டு, இரண்டரை வருடம் வரும். 20,000 வண்டிகளுக்கு மேல் விற்பனை செய்திருக்கிறோம். நல்ல வரவேற்பு. புதிய கஸ்டமர்கள் தேடி வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மின்வண்டி வாங்கும் காலம் வரும். முதலீடு செய்யவும் நிறையப் பேர் வந்து கொண்டிருக்கிறார்கள்" என்கிறார் பெருமையுடன்.
கிராமப்புறங்களில் வரவேற்பு உள்ளதா? "எங்களுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் கிராமங்களில்தான் இருக்கிறார்கள். அங்குள்ள குறுகிய சாலைகளில் ஓட்ட எளிதானது என்பதால் நல்ல வரவேற்பு இருக்கிறது. 5,000 மின்சைக்கிள்களுக்கு மேல் நாங்கள் கிராமத்தில்தான் விற்பனை செய்திருக்கிறோம். சமீபத்தில் ஈரோடுக்குப் பக்கத்திலிருந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக எங்கள் சைக்கிளைப் பயன்படுத்திய ஒருவர் வந்தார். பேட்டரியை மட்டும் மாற்ற வந்திருந்தார். "இது ரொம்ப நல்லா இருக்குங்க. எங்களுக்கெல்லாம் இது பெரிய வரம்" என்று சொன்னார்.
"வயலுக்குப் போகவும், சுமை எடுத்து வரவும் இந்த வண்டி அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. கிராமப்புறங்களில் பயணதூரம் மிகக்குறைவு. அதற்கு இந்த வண்டி உதவும். லோடு வண்டிகளில் இரண்டுவகை தயாரிக்கிறோம். மில்கள், ஃபவுண்டரிகள், ஃபேக்டரி போன்ற இடங்களில் உள்ளேயே போக்குவரத்துக்கு இந்த வண்டிகள் மிகப் பயன்படும். விலை குறைவு. பராமாரிப்பு எளிது, கடினமாக உழைக்கும். நிறைய repeat customers வருகிறார்கள்" என்கிறார் ஹேமா.
சூரியசக்தியாலும் இவற்றைச் சார்ஜ் செய்துகொள்ள இயலுமாம். "சோலார் பேனல்கள் தனியாகப் பொருத்தியும் சார்ஜ் செய்துகொள்ளலாம். எதிர்காலத்தில் அவ்வகைத் தயாரிப்புகளும் வரும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
அதேசமயம் மக்களிடையே மின்வாகனங்கள் குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லை என்று வருந்தும் ஹேமா, "அரசாங்கம் அதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறது. இன்னும் வேகத்துடன் அதனைச் செய்யவேண்டும். நாளுக்கு நாள் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது. சுற்றுச்சூழல் பயங்கரமாக மாசடைகிறது. இதற்கு ஒரே மாற்று, எலக்ட்ரிக் வண்டிகள்தான் என்பதை மக்களுக்குச் சொல்லவேண்டும்" என்கிறார்.
ஆம்பியரைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளரே 'பிராண்டு அம்பாசடர்' ஆகிவிடுகிறார் என்றாலும், இன்னும் பெரிய அளவில் மார்க்கெடிங், விளம்பரங்கள் மூலம் இதனை எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார்கள். "இப்போது பத்து மாநிலங்களில் செயல்படுகிறோம். இன்னும் ஐந்து மாநிலங்களுக்கு விரிவுபடுத்த இருக்கிறோம். முதலில் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகத்தில் மட்டும்தான் இருந்தோம். இப்போது ஆந்திரா, தெலுங்கானாவில் செய்கிறோம். படிப்படியாக விரிவுபடுத்த இருக்கிறோம்" என்கிறார்.
அரசு எப்படி இவர்களுக்கு உதவலாம்? "எங்களைப் போன்றவர்களுக்கு முதல் பிரச்சனையே போதுமான நிதி ஆதாரம் கிடைக்காதுதான். பெரிய நிறுவனங்களுக்கு 8-10% வட்டிவிகிதத்தில் கடன் கிடைக்கிறது. எங்களுக்கு 13%. எங்களைப் போன்ற நடுத்தரத் தொழில்நிறுவனங்களுக்கு அதுவே ஒரு சிரமம்தான். யார் நன்றாக நடத்துகிறார்களோ அவர்களுக்கு நிதி சுலபமாகக் கிடைக்க வழிவகையை அரசு செய்யவேண்டும். அடுத்து அரசு GSTக்குப் போகப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு இன்னும் அந்த அளவுக்கு வால்யூம் வரவில்லை. மாதம் ஆயிரம், இரண்டாயிரம் வண்டி தயாரிக்கும் நிலையை அடைந்துவிட்டால் நாங்கள் அடுத்த நிலையைத் தொட்டுவிடுகிறோம். அதற்கு அரசு உதவினால் நன்றாக இருக்கும். அதுபோல நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள், மின்வண்டி வாங்குபவர்களுக்குக் கடனுதவி அளிக்க முன்வர வேண்டும்" என்று கோரிக்கை வைக்கிறார்.
பெண்கள் மட்டுமே பணிபுரியும் மின்வாகன நிறுவனம் என்பது தனது கனவு என்று சொல்லும் ஹேமா, "அதை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய தொழிற்சாலைகளில் 30 சதவிகிதத்துக்கு மேல் பெண்கள் பணிபுரிகிறார்கள். பெண்களுக்கு ஆளுமை இல்லை, உற்பத்தித் துறையில் ஏதும் செய்யமுடியாது என்றெல்லாம் சொல்லப்படும் மாயையை உடைக்க விரும்புகிறோம். பெண்களால் உற்பத்தித் துறையிலும் சாதிக்க முடியும் என்பதைக் கடந்த எட்டு வருடங்களில் நிரூபித்துவிட்டோம். கிராமப்புறப் பெண்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். சமீபத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் கோவை குருடாம்பாளையம் பஞ்சாயத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறோம். மற்றப் பஞ்சாயத்துக்களிலும் செய்ய இருக்கிறோம்" என்கிறார்.
"நாங்கள் நேர்மையான கம்பெனி. எங்களால் முடியுமென்றால் முடியும், முடியாதென்றால் முடியாது என்பதைச் சொல்லி விடுவோம். எங்கள் வண்டி 100 கி.மீ. போகும் என்றெல்லாம் பொய்த்தகவல் தருவதில்லை. இருக்கும் டெக்னாலஜியைப் பயன்படுத்தி சிறந்ததாகத் தயாரித்துக் கொடுக்கிறோம். கஸ்டமர் சர்வீஸ் எங்கள் மிகமுக்கிய பலம். DSIR (Department of Scientific and Industrial Research) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட R&D ஆய்வகம் எங்களுடையது. அதன் திறனைப் பார்த்து இந்திய அரசே எங்களுக்காகக் கணினி மென்பொருள் செய்திருக்கிறது. காரணம், நிறைய காம்பொனெண்ட்ஸ் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி ஆகின்றன. ஆனால் நமது நாட்டின் மின்சாரம், சாலை வசதிகளுக்கு அவை பொருந்தி வருவதில்லை. எங்கள் தேவைகள் பலவற்றை எங்கள் ஆராய்ச்சிக் கூடங்களில் நாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கிறோம். இதை எங்கள் பலம், தனித்துவம் என்றும் சொல்லலாம்."
போட்டி இருக்குமே, எப்படி எதிர்கொள்கிறார்கள்? "போட்டிகள், சவால்கள் இல்லையென்றால் சுவாரஸ்யம் இருக்காது. போட்டி இருந்தால்தான் நம்மை மேம்படுத்திக்கொள்ள முடியும், இல்லையா? பெரிய நிறுவனங்கள் பல எங்களுக்குப் போட்டியாளர்கள். மிகக்குறுகிய காலத்தில் முன்னேறி வந்து கொண்டிருக்கும் நிறுவனங்களில் நாங்களும் இருக்கிறோம். சிறப்பாக, திறமையாக, வித்தியாசமாகச் செய்கிறார்கள் என எங்களை ஆரம்பகாலம் முதலே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். திறமையுள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களைக் கண்டறிந்து நாங்கள் அவர்களுக்குச் சிறந்த முறையில் தொழிற்பயிற்சி அளித்து வருகிறோம்."
"ஒரு பயனாளி பார்ப்பது சர்வீஸ் சென்டர்ஸ் எல்லா இடங்களிலும் இருக்கிறதா, வாரண்டியின்படி பார்ட்ஸை மாற்றிக் கொடுக்கிறோமா, தனது சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கிறதா என்பதைத்தான். இந்த மூன்றிலும் நாங்கள் முழுக் கவனம் செலுத்துகிறோம்."
ரத்தன் டாட்டா போன்றவர்களின் நிதி முதலீடு செய்திருப்பது குறித்துச் சொல்லும்போது, "எங்கள் தொழில்மேல் நம்பிக்கை வைத்து அவர்கள் உதவிருக்கிறார்கள். டாடா, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் எல்லாம் எங்களுக்கு நிறைய ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு தடவை எங்கள் கம்பெனியில் முதலீடு செய்திருக்கிறார்கள். என்னுடைய தீர்க்கதரிசனத்தை நம்பி, அதை நான் செய்து காட்டுவேன் என்பதைப் புரிந்துகொண்டு, ஓரிரு மணி நேரத்தில் என்னிடம் செக்கைக் கொடுத்துவிட்டார்கள், அந்த நம்பிக்கைக்கேற்ப இன்னும் பெரிய அளவில் இந்த நிறுவனத்தைக் கொண்டு போகவேண்டும் என்பதில் நான் தீவிரமாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். இவர்கள் கொடுத்த ஆதரவைக் கடவுள் கொடுத்த பாக்கியமாகவே நான் நினைக்கிறேன். உண்மையாக உழைத்ததால்தான் இது கிடைத்திருக்கிறது" என்கிறார்.
"இதை ஓர் ஆயிரம் கோடி கம்பெனி ஆக்கவேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு இன்னமும் கடுமையாக உழைக்கவேண்டும். அதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். அதே சமயம் செய்வதைச் சமுதாய அக்கறையோடு செய்யவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்றவர்களுக்கும் பயன்படும் புதுப்புது வாகனங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்."
"கோயம்புத்தூரைப் பசுமைநகரம் ஆக்கவேண்டும் என்பது எங்கள் லட்சியம். ஒரு நகரத்தை அவ்வாறு மாற்றிவிட்டால் மற்ற நகரங்கள் எல்லாம் தானாக அதைப் பின்பற்றத் துவங்கிவிடுவார்கள். அது சரியில்லை, இது சரியில்லை என்று குறை கூறுவதைவிட, நம்மாலானதை முழுமூச்சாகச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வளர்ச்சி இருக்காது. I always beleive that success is not money; success is not a status; success is not power. success is only a joureny. நம்மை வளப்படுத்திக் கொண்டு செல்லும்போது அந்தப் பயணம் பலருக்குப் பயனுள்ளதாக அமையும்" என்கிறார் ஹேமலதா.
ஒரு லட்சியவாதியின் சுடரை அவரது சொற்களில் உணர்கிறோம். அந்த வெளிச்சத்தில் வணக்கம் கூறி விடைபெறுகிறோம்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
பிரதமர் மோதி ஈர்த்துவிட்டார் சமீபத்தில் பெங்களூரில் நடந்த 'வெளிநாடுவாழ் இந்தியர் நாள்' நிகழ்வில் பிரதமரைச் சந்தித்தேன். ரொம்ப மெஸ்மரைஸ் ஆகி நான் வந்திருக்கிறேன். இப்படி ஒரு தலைமையை இந்தியா பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. ஒரு பத்து நிமிடத்தில் எங்கள் எல்லோரையும் விசாரித்து, என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு, என்னைப்பற்றி, தொழில்பற்றி எல்லாம் விசாரித்து ரொம்பவே ஆச்சரியப்படுத்திவிட்டார். விரைவில் மீண்டும் ஒருமுறை அவரைச் சந்திக்க இருக்கிறேன். இப்படி ஒரு தலைமை அமைந்ததால் இந்தியா வல்லரசு நாடாகிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. நம்முடைய மனித ஆற்றல், இணையப் பரவல், விஞ்ஞான வளர்ச்சி, பலம் என்று நிறைய அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அணுக எளிதானவர், நிலத்தில் கால் பதித்தவர் என்று பிரதமர் மோதியைச் சொல்லலாம். எந்த பந்தாவும் இல்லாமல் இயல்பாக எல்லாரிடமும் உரையாடினார். உண்மையில் இந்த அரசு எங்கள் தொழிலுக்கு மிகவும் சப்போர்ட்டிவாக இருக்கிறது. தொழில் முனைவோருக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு.
- ஹேமலதா அண்ணாமலை *****
வழிநடத்துகிற வளர்ப்பு அப்பா பேராசிரியர், அம்மா ஆசிரியை. பள்ளிப்படிப்பு சென்னையில், பட்டப்படிப்பு கோவையில். பிறகு விப்ரோவில் ஐந்து வருடம் வேலை. எனக்கு கல்வி நிதியுதவி கிடைத்ததால் எம்.பி.ஏ. டிகிரியை ஆஸ்திரேலியாவில் செய்தேன். சிங்கப்பூரில் சில வருடங்கள் வேலை பார்த்தேன். பின்னர்தான் நான் தொழில்முனைவோர் ஆனேன். பெற்றோர்கள் எங்களை அடித்து அல்ல, கருத்துச் சொல்லி, பொறுப்புச் சொல்லி வளர்த்தனர். ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்ட காலம் உண்டு. சகோதர, சகோதரிகளைச் சேர்த்து நாங்கள் எட்டுப்பேர். மிகவும் கணக்கிட்டு, திட்டமிட்டு, கட்டுப்பாடோடு வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. அப்பா சொன்னது ஒன்றுதான். "என்னால் உங்களுக்கு நகை, பணம், நிலம் என்று கொடுக்க முடியாது. கல்விச் செல்வத்தைத்தான் கொடுக்க முடியும். நன்றாகப் படித்துப் பெரிய ஆளாக வருவது உங்கள் கையில்தான்" என்பார். அப்படிச் சொல்லி வளர்த்ததால் படிப்பின் அருமை எங்களுக்குப் புரிந்தது. சொன்னபடியே எல்லாரையும் நன்கு படிக்கவைத்தார். அப்பா சொத்துச் சேர்க்காததை ஒரு பெரிய பேறாக நினைக்கிறேன். பரம்பரைச் சொத்து பிள்ளைகளை மக்குகளாகவும், சோம்பேறிகளாகவும் ஆக்குகின்றன. டாக்டர். அப்துல்கலாம் சொல்வார், "நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு நல்லது செய்வதாக இருந்தால் பசங்களுக்குச் சொத்துச் சேர்க்காமல், செலவழிக்கப் பைசா கொடுக்காமல் இருங்க. அவர்கள் மிக நன்றாக வருவார்கள்" என்று. அம்மா "பொய் சொல்லக்கூடாது; நேர்மையாக இருக்க வேண்டும்" என்று மிக ஆழமாக மனதில் பதியும்படிச் சொல்லியிருக்கிறார். அந்த வளர்ப்புத்தான் என்னை வழி நடத்துகிறது.
- ஹேமலதா அண்ணாமலை *****
என் உற்சாகத்தின் ஊற்றுக்கண் என் வளர்ச்சியில் என் கணவருக்கு மிகுந்த பங்குண்டு. எனக்கு ரோல் மாடல் அவர்தான். ஒரு கிராமத்தில் பிறந்து, தமிழ்வழி பயின்று, ஆங்கிலங்கூடப் பேசத் தெரியாதிருந்த சூழ்நிலையில் வெளிநாட்டிற்குச் சென்று, ஆங்கிலம் கற்று, தன்னை மேம்படுத்திக் கொண்டு பல பெரிய நிறுவனங்களின் deal maker ஆனவர் அவர். அவரைப் பார்த்துத்தான் எனக்கும் இப்படி உயரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆம்பியர் நிறுவனம் உருவாக அடிப்படைக் காரணம், இன்ஸ்பிரேஷன், ரோல் மாடல் எல்லாமே அவர்தான். அவர் தொழில்நுட்ப வல்லுனர். பல கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒருவர் கல்லூரியில் படிக்கிறார். மற்றொருவர் பிளஸ் ஒன். - ஹேமலதா அண்ணாமலை *****
மாற்றுத் திறனாளிக்கு நீங்கள் உதவலாம் எங்களிடம் வரும் மாற்றுத் திறனாளிகளில் பலரும் பின்தங்கிய கிராமவாசிகள்; அதிக வசதி இல்லாதவர்கள். அவர்களுக்கு ஸ்பான்சர் அளிக்கும் நிதி உதவியைக் கொண்டு நாங்கள் உதவுகிறோம். அதாவது ஒரு வண்டியின் விலை ரூ.65,000 என்றால் அதில் 15,000 மட்டும் பயனாளர் செலுத்துவார். மீதிப்பணத்தை ஸ்பான்சர் தருவார். இப்படிப் பலருக்கு உதவுகிறோம். இன்ஃபோசிஸும் எங்களுக்கு உதவியிருக்கிறது. உலகளாவிய தென்றல் வாசகர்களிடமிருந்து நாங்கள் இதற்கு நிதியுதவியைக் கோருகிறோம். கிட்டத்தட்ட 300 பேர் எங்களிடம் பதிவுசெய்துவிட்டு வண்டிக்காகக் காத்திருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ நினைப்போர் ரூ.50,000 நிதி உதவினால், யாருக்கு வண்டி போகிறது என்பது உட்பட எல்லா விவரங்களையும் நாங்கள் அவர்களுக்குத் தெரிவிப்போம். இதனால் ஒரு மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை மேம்படும். இதற்கு இந்தியாவில் 80G வரிவிலக்கு உண்டு.
- ஹேமலதா அண்ணாமலை ***** |