உணர்வின் உயிர்ப்போடு மண்ணின் மணத்தையும் கலந்து எழுதிவருபவர் சு. வேணுகோபால். இவர் 1967 மே மாதம் 20ம் தேதியன்று போடியருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் சுருள்வேல்-பொன்னுத்தாயி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போது அறிமுகமான கண்ணதாசனின் பாடல்கள் இலக்கியத்தை நோக்கிக் கவனத்தைத் திருப்பின. மதுரை அமெரிக்கன் கல்லூரியில இளங்கலை பயின்ற காலகட்டத்தில் இலக்கிய நூல்கள் அறிமுகமாகின. கு.ப.ரா., புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் படைப்புகள் இவருக்குள் தாக்கங்களை ஏற்படுத்தின. மேலும் மேலும் வாசிக்க அது இவருள் மாற்றங்களை ஏற்படுத்தியது. படிப்பை முடித்தபின் சிலகாலம் சொந்தக் கிராமத்தில் விவசாய வேலைகளைச் செய்துவந்தார். விவசாயம்சார்ந்து, மண்சார்ந்து, அந்த மனிதர்கள் சார்ந்து எழுதும் உந்துதல் உருவாயிற்று. வாழ்க்கை அனுபவங்களும் உறுதுணையாகின. குமுதம் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'நுண்வெளி கிரகணங்கள்' என்ற முதல் நாவல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது, இவர்மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது.
விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையும், சாதி முரண்களும், மோதல்களும் இவருடைய படைப்புகளில் தீவிரமாக வெளிப்பட்டன. தொடர்ந்து எழுதினார். சிற்றிதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகி வாசக கவனத்தைப் பெற்றன. இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'பூமிக்குள் ஓடுகிறது நதி' என்ற தலைப்பில் வெளியானது. 2001ம் ஆண்டில் 'களவு போகும் புரவிகள்' என்ற மற்றுமொரு சிறுகதைத் தொகுப்பு வெளியானது. 'கூந்தப்பனை' குறுநாவல் தொகுப்பும் பரவலான வாசக கவனத்தை ஈர்த்தது.
காத்திரமான எழுத்து இவருடையது. இயல்பான புறவுலகச் சித்திரிப்புகள் இவரது எழுத்தின் பலம். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் தன் படைப்புகளில் முன்வைக்கிறார். முகத்தில் அறையும் அந்த யதார்த்தமே சில சமயங்களின் வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. திகைக்க வைக்கின்றது. சான்றாக 'மாயக்கல்' சிறுகதையைக் குறிப்பிடலாம். பன்றி வளர்க்கும் குடும்பத்தினருக்கு சகமனிதர்களிடமிருந்து கிடைக்கும் மரியாதை, காவல்துறையினர் அவர்களை நடத்தும்விதம், அவர்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், துயரங்களை அவர்கள் எதிர்கொள்ளும் விதம், மனப்போக்கு போன்றவற்றை உக்கிரமான எழுத்தில் சித்திரிக்கிறார். பன்றிகளின் இயல்பு, அவற்றின் உணவு, அவற்றை வளர்ப்பவர்களின் எண்ணம் என எல்லாவற்றையும் வெறும் தகவல்களாகச் சொல்லாமல் காட்சிப்படுத்தும் பாணியில் விவரித்திருப்பது அவரது நுண்சித்திரிப்புத் திறனைக் காட்டுகிறது. 'மண்ணைத் தின்றவன்' சிறுகதை, விவசாயிகளின் அவலவாழ்வைச் சுட்டுகிறது. 'வட்டத்திற்குள்ளே', 'பதிலடி' போன்ற சிறுகதைகள் ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை உளவியல் ரீதியாகச் சித்திரிக்கின்றன. இறப்பு என்பது எப்படி இருக்கும், அப்போது என்ன நிகழ்கிறது, இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது என்பதை மிகச் சுவாரஸ்யமாக, 'இருட்குகைக்குள் விரியும் ஒளிப்புகை' கதையில் இறந்துபோனவனின் பார்வையில் சொல்கிறார் வேணுகோபால்.
இவ்வாறு விதவிதமான கதைகள், விதவிதமான பாத்திரங்கள், வேறுபட்ட வாழ்க்கைச் சூழல்கள் மூலம் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள், விவசாயிகள், பாலியல் தொழிலாளிகள், வியாபாரிகள் எனப் பலர்மீது தன் எழுத்தால் வெளிச்சம் பாய்ச்சுகிறார் வேணுகோபால். இவற்றில் எங்குமே 'பேராசிரியர்' சு. வேணுகோபால் வெளிப்படவில்லை. கிராமம் சார்ந்த விவசாயியாக, சாதாரண மானுடனாக, தான் கண்டதை மீறாமல் இயல்பாகப் பதிவுசெய்யும் எழுத்தாளரே கண்ணுக்குத் தெரிகிறார். இதுவே இவரது எழுத்தின் பலம். இவர் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில்லை. காட்சிகளாகவும், பாத்திரங்களாகவும், வர்ணனைகளாகவும், தகவல்களாகவும், சம்பவங்களாகவும் படைப்பு தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை மிகவும் காத்திரமாக இவர் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக ஆண்-பெண் உறவில் ஏற்படும் பல சிக்கல்கள் பற்றி உளவியல் பாங்கில் இவர் கூறியிருப்பது நிச்சயம் வாசகனை அதிரவைக்கும். ஆனால், அதிர்ச்சி மதிப்பிற்காக அதைச் செய்யாமல் படைப்பின் வழி பாத்திரங்களின் நியாய உணர்ச்சிகளாக அவற்றைக் கண்முன் நிறுத்துகிறார். தமிழ் இலக்கிய உலகில் விவசாயம் சார்ந்த படைப்புகளை முன்வைப்பவர்களில் முதன்மையானவர் என்றும் இவரைச் சொல்லலாம். படைப்புகளில் பல்வேறு பரீட்சார்த்த முறைகளைக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
வேணுகோபாலின் படைப்பில் முக்கியமானதாக 'வெண்ணிலை' சிறுகதைத் தொகுப்பைச் சொல்லலாம். இது திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் விருதைப் பெற்றது. இதே படைப்பிற்கு "பாரதிய பாஷா பரிஷத் விருது" கிடைத்தது. 2006ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசையும் இந்நூல் பெற்றுள்ளது. 'திசையெல்லாம் நெருஞ்சி', 'பால்கனிகள்' போன்றவை இவரது குறுநாவல்களின் தொகுப்பாகும். 'ஒருதுளி துயரம்' என்ற இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு கல்லூரியில் பாடப்புத்தமாக வைக்கப்பட்டுள்ளது. 'நிலமென்னும் நல்லாள்', 'ஆட்டம்' போன்றவை சமீபத்திய நாவல்கள்.
தன் எழுத்துகுறித்து வேணுகோபால், "என் தோட்டந் தொரவுகளோடு கிடந்து, அத்தோடு எழுதி கொண்டிருக்கத்தான் ஆசை. கதை எழுதி வெற்றிபெறுவதை விட ஒரு பருத்தி வெள்ளாமை வெற்றியடைவதில் உள்ள சந்தோசத்திற்கு ஈடு இணை இல்லை" என்கிறார். தன்னுடைய படைப்புகளைப் பற்றிக் கூறும்போது, "இதுவரைக்கும் எழுதினது என் அனுபவங்களோட ஒரு துளி. இன்னும் நெறக்க நெறக்க அனுபவங்கள் சேகரிச்சு வச்சிருக்கேன். கிராமங்களைப் பத்தி பல்லாயிரம் பக்கங்கள் எழுத வேண்டியிருக்கு. எல்லாத்தையும் உதறிட்டு நானும் என் மாடுகளும் தேசாந்திரிகளா திரியவும் வாய்ப்பிருக்கு" என்கிறார். எம்.ஏ., எம்.ஃபில் பயின்றிருக்கும் வேணுகோபால் பள்ளி ஒன்றில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 'மழை' சிற்றிதழில் விவசாயம் சார்ந்து தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தற்போது யானைகளின் வாழ்க்கை பற்றியும், அவை காடுகளிலிருந்து கிராமங்களுக்குள் வருவதால் பாதிக்கப்படும் விவசாயிகள் பற்றியும் புதிய நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். பல இலக்கியக் கருத்தரங்குகளில், எழுத்துப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு தன் எழுத்துலக அனுபவங்களைப் பகிர்கிறார். கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் வேணுகோபால், இலக்கிய உலகின் நம்பிக்கை நட்சத்திரம்.
அரவிந்த் |