தென்றல் பேசுகிறது...
ஏறுதழுவுதல் சங்க இலக்கியத்திலேயே காணப்படும் மிகத் தொன்மையான வீர விளையாட்டு. இதன் மீதான இந்திய உச்சநீதி மன்றத்தின் தடையை விலக்கக்கோரி தமிழகத்தின் இளையோர் சென்னை மெரீனா தொடங்கிப் பிற பகுதிகளிலும் அணிதிரண்டதும், அவர்கள் பெற்ற வெற்றியும் உலகறிந்ததே. அந்த அமைதிப் பேரணியின் குரல் பிற கண்டங்களிலும் எதிரொலிக்க, அமெரிக்காவின் எண்ணற்ற நகரங்களில் தமிழரும் பிறரும் அணிதிரண்டு குரலெழுப்பிய செய்திகளும் படங்களும் தென்றலுக்கு வந்து குவிந்துள்ளன. மரபுகாக்க ஒன்றிணைதல் வரவேற்கத்தக்க செய்தி. அதற்கெனப் பாடுபடுவதில் தாயகத்தில் உள்ளோருக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்களல்ல என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் அமெரிக்கத் தமிழர்கள். "பாரதநாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்!".

*****


புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னரே தொடங்கிவிட்ட எதிர்ப்பு, இன்னமும் பல்வேறிடங்களிலும் புகையும் பூசலுமாகப் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. பதவிக்கு வந்தால் அவர் என்ன செய்யக்கூடும் என்பதை அவர் ஒன்றும் ரகசியமாக வைக்கவில்லை. அதற்கேற்பவே குடிபுகுதற் கட்டுப்பாடு, வெவ்வேறு வகை விசாக்களில் கைவைத்தல், சட்டத்தை மீறி உள்நுழைவோரை அடையாளம் கண்டு வெளியேற்றல், மெக்சிகோ எல்லையில் சுவரெழுப்புதல், குறிப்பிட்ட நாடுகளிலிருந்து புகலிடம் கேட்டு வருவோரைத் தடுத்தல் என்று அடுத்தடுத்து வெளியாகும் நிர்வாக ஆணைகளும் அறிவிப்புகளும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்பில்லாத அரசு நடவடிக்கைகளுக்கு மக்கட்சக்தி ஒன்றுசேர்ந்து எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்துவது ஜனநாயகத்துக்கு ஏற்றதே. இந்த முக்கியமான பாடம் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள், ஜனநாயகம் துடிப்போடு செயல்படுகிறது என்பதற்கான அடையாளம் இதுதான்.

*****


பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள் ஏதோவொரு நாளில் இல்லாது போகும். தவிர அவற்றின் மிதமிஞ்சிய பயன்பாட்டுக்கான விலையை புவிச்சூடேற்றம், சூழல் மாசுபடுதல் என்பவற்றின் மூலம் உலகசமுதாயம் கொடுக்கத் தொடங்கிவிட்டது. மாற்றுமுயற்சிகள் தவிர்க்கவோ தாமதிக்கவோ முடியாதவை, கூடாதவை என்கிற நிலையில் தமிழகத்தில் கோவையைச் சேர்ந்த திருமதி. ஹேமலதா அண்ணாமலை மின்சாரத்தால் இயங்கும் பலரக வாகனங்களைத் தயாரித்து விற்பதில் வெற்றி கண்டிருக்கிறார். மென்பொருள் பொறியாளராகத் தொடங்கி, 'எவருக்கோ உழைப்பதைவிட, நமக்கு நாமே உழைத்தால் என்ன?' என்னும் கேள்விக்கு விடைகாணும் முகமாக ஆம்பியர் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவரும் ஹேமலதா அவர்களின் நேர்காணல் பல சுவையான உண்மைகளை நமக்குக் கொண்டுவருகிறது. ஹார்வர்டு பல்கலையில் தமிழ்ப்பீடம் அமைக்க ஒரு லட்சம் டாலர் தொகையை அள்ளிக்கொடுத்த திரிவேணி குழுமத்தைப் பற்றிய தகவல் சுரங்கமும் உண்டு. ஒரு டாலர் வித்தியாசத்தில் ஒரு லட்சம் டாலர் வென்ற இளைஞர் ஷரத் நாராயணையும் இவ்விதழில் நீங்கள் சந்திக்கலாம். அமெரிக்காவெங்கிலும் வாடிவாசலுக்கெனக் கூடிக் குரல் கொடுத்தோரைப் பற்றிய தொகுப்பும் உண்டு. நுழையுங்கள், சுவையுங்கள், எழுதுங்கள்....

வாசகர்களுக்கு மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

பிப்ரவரி 2017

© TamilOnline.com