டிசம்பர் 10, 2016 அன்று சிகாகோ பெருநகர் இந்துக் கோவிலில், 'தங்கமுருகன் விழா' சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விடியற்காலையில் திருப்பள்ளி எழுச்சி, பாலபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடைபெற்றன. உற்சவ மூர்த்தியாகிய முருகப் பெருமானைத் தங்கநிறப் பல்லக்கில் வைத்து, திருப்புகழ் பாடி, காவடி ஆட்டத்துடன் ஊர்வலமாய், அரங்க மேடைக்கு, வாத்திய இசையுடன் அழைத்து வந்தனர். இந்த ஆண்டு சென்னைவாழ் கலைமாமணி திருமதி. தேச மங்கையர்க்கரசி சிறப்பு விருந்தினராக வந்திருந்து விளக்கேற்றித் தொடங்கிவைத்தார்.
தெய்வத்திரு கிருபானந்த வாரியாரின் மாணவியான இவர், ஆறுவயதில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய ஆடி வீதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் தன்முதல் ஆன்மீக மேடைப்பேச்சினை வாரியார் சுவாமிகள் முன்னுரையுடன் அரங்கேற்றம் கண்டார். இன்று 32 வயதில், கலைமாமணி பட்டம் பெற்று, ஒரு சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளராகப் பல தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார்.
அன்றையதினம் அவர் இந்த வருடக் கருப்பொருளான, 'திருவருட்பிரகாச இராமலிங்க அடிகளார் என்னும் வள்ளலார்' குறித்து ஒருமணி நேரம் சொற்பொழிவு நடத்தினார். 'வாரியார் சுவாமிகளும், வள்ளலார் சுவாமிகளும், முருகனும்' என்ற தலைப்பில் ஒருசீராக வெள்ளம்போலத் தங்குதடையின்றி உரையாற்றினார். அவருக்கு விழாக்குழுவினர் சார்பில் 'நாவுக்கரசி' என்னும் பட்டமளித்துப் பாராட்டினார் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன் இராமசாமி.
இந்த வருடமும் ஏறத்தாழ ஐம்பது வகை கலைநிகழ்ச்சிகள் மேடையேறின. இருநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆடல், பாடல், வாத்திய இசை, சொற்பொழிவு மேடையில் தொடர்ந்து பன்னிரண்டு மணிநேரம் குமரனைக் கொண்டாடியதைப் பார்த்து மகிழ்ந்தவர்கள் எண்ணூறுக்கும் மேலானோர். 'குட்டிமுருகன் காட்சி' என்னும் பகுதியில், முப்பது குழந்தைகள், முருகனாகவும், வள்ளி தெய்வானையாகவும் வேடமணிந்து வந்தது கண்கொள்ளாக் காட்சி. மேலும் ஆறு வயதுக் குழந்தை சாக்ஸஃபோனில் "முத்தைத்தரு பத்தித் திருநகை" என்னும் பாடலை அழகாக வாசித்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றான். கந்தர் அனுபூதி பாராயணமும் வயலின், கீபோர்ட் பக்கவாத்தியங்களுடன் அருமையாக இருந்தது.
தங்கமுருகன் விழாக் குழுவினர் "முருகப் பெருமானும் இராமலிங்க அடிகளும்" என்ற தலைப்பில் வழங்கிய வில்லுப்பாட்டு நம் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை நினைவூட்டும் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. சுமார் ஐம்பது சிறுவர்கள் வள்ளலாரின் படைப்புகளைப் பாடினர். காவடிச்சிந்து, மயிலாட்டம், பரதம் எனப் பல வகையிலும் முருகனைக் கொண்டாடியது அற்புதம். சிகாகோவில் இசை மற்றும் நாட்டியப் பள்ளி நடத்தும் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க, அன்றைய தினம் கொட்டும் பனியிலும் கலங்காமல் வந்து பங்கேற்க உதவினர் அவர்களின் பெற்றோர்.
விழாக்குழுவின் சார்பில் அனைவருக்கும் பரிசு, பாராட்டிதழ்கள் வழங்கப்பட்டன. வந்திருந்தோர் முருகன் பக்திப் பாடல்கள் பாட விழா இனிதே முடிந்தது.
தொகுப்பு: குழலி முத்து |