டிசம்பர் 11, 2016 அன்று, மறைந்த தமிழக முதல்வர் செல்வி டாக்டர் ஜெ .ஜெயலலலிதா அவர்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், ஃப்ரீமான்ட் நகரில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் செல்வி டாக்டர் ஜெ .ஜெயலலலிதா அவர்களின் விசுவாசியாகவும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரராகவும் அறியப்பட்ட திரு. அபு கான் அவர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
அபு கான் பேசுகையில், செல்வி ஜெயலலலிதா அவர்களின் அரசியல் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்தது என்றும், எப்படி அவற்றை வென்று அரசியலில் சாதனை புரிந்தார் எனவும் விளக்கிப் பேசினார். திராவிட இயக்கங்களின் முதல் பெண் தலைவராகவும், பகுத்தறிவாளர்கள் நிறைந்த திராவிட இயக்கத்தில் "ஆன்மீக நம்பிக்கை கொண்ட" தலைவராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார் எனவும் அவரின் மறைவு இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், தமிழக மக்களின் மனங்களில் என்றென்றும் வாழ்வார் என்று கூறினார்.
இந்திய கான்சுலேட் ஜெனரல் திரு. வெங்கடேசன் அஷோக் அவர்கள் இதில் பங்கேற்று, மலரஞ்சலி செலுத்தி, முதல்வர் ஜெயலலலிதா அவர்களின் மறைவு, இந்திய தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று புகழாரம் சூட்டினார். முன்னாள் முதல்வரின் அரசுத் திட்டங்களை வரிசைப்படுத்தி, குறிப்பாக 'தொட்டில் குழந்தை திட்டம்' போன்றவற்றை விளக்கிக் கூறிப் பாராட்டினார்.
இந்திய அமெரிக்கன் கவுன்சில் நிறுவனர் டாக்டர். ரொமேஷ் ஜாப்ரா பேசுகையில், செல்வி. ஜெயலலலிதா அவர்களுக்கு இந்த ஆண்டு நடந்த இந்திய சுதந்திரவிழாக் கொண்டாட்டத்தில் 'மக்கள் தலைவர்' விருது வழங்கியதை நினைவுகூர்ந்தார்.
முன்னாள் ஃப்ரீமான்ட் துணைமேயர் அனு நடராஜன் அவர்கள், டாக்டர் ஜெ. ஜெயலலலிதா அவர்களின் ஆளுமைத்திறன் கண்டு எப்போதும் வியப்பதுண்டு என்றும், அவர் பெண்ணினத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார் எனவும் பாராட்டினார்.
கலிஃபோர்னியா தமிழ் அகாடமியின் நிறுவனர், செல்வி. ஜெயலலலிதா அவர்களைச் சென்னையில் சந்தித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ஜெயலலலிதா அவர்கள் ஓர் அறிவுஜீவி என்றும், நிறையப் புத்தகங்களை படிக்கும் பழக்கமுள்ளவர், உலக அரசியலை நன்கு அறிந்தவர், இதுபோன்ற அரசியல் தலைவர்களைக் காண்பது அரிது என்று கூறினார்.
தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட பள்ளி மாணவி செல்வி. முவாபிகா நூருதீன் அவர்கள் டாக்டர் ஜெயலலலிதா அவர்கள் முதல்வராகப் பதவியேற்ற 1991ம் ஆண்டு முதல் 2016 வரை நிறைவேற்றிய அனைத்துத் திட்டங்களையும் பட்டியலிட்டுப் புகழஞ்சலி செலுத்தியது அங்கிருந்தோரால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. பல்வேறு மொழிபேசும் இந்திய வம்சாவளியினர் இந்த அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மௌன அஞ்சலியோடு கூட்டம் நிறைவுற்றது.
ஜெயக்குமார் முத்தழகு, ஆறுமுகம், குணா பதக்கம், ரமேஷ் சத்தியம் ஆகியோர் உட்பட 150 பேர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் ஜப்பார், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |