கிருஷ்ணன், பலராமன், சாத்யகி ஆகியோருக்கு நான்கைந்து வயதாக இருக்கும்போது இது நடந்தது. அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் தனியாகப் போய்விட்டார்கள். இரவாகிவிட்டது, கோகுலத்துக்குத் திரும்ப வழியில்லை! இதுவும் கிருஷ்ணனின் தந்திரம்தான் என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். அந்த வயதிலும் அவன் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டான். அவன் செய்வதில் யாருக்காவது நல்ல படிப்பினை இருக்கும்.
அங்கேயே இரவைக் கழிக்கத் தீர்மானித்தார்கள். மனிதர்களை இரையாக்கிக் கொள்ள அலையும் பேய், பிசாசு, அசுரர்களைப் பற்றிய கதைகளைச் சொல்லிக் கிருஷ்ணன் அவர்களைப் பயங்கொள்ளச் செய்தான். மூவரில் ஒருவர் விழித்திருந்து காவல் காக்கும்போது மற்ற இருவரும் மூன்றுமணி நேரம் தூங்கலாம் என்று கூறினான்.
இரவு ஏழிலிருந்து பத்துமணி வரை கிருஷ்ணனும், பத்திலிருந்து ஒருமணி வரை சாத்யகியும், ஒன்றிலிருந்து நான்குமணி வரை பலராமனும் காவலிருப்பதாகத் தீர்மானம் ஆயிற்று. பத்துமணிக்குச் சாத்யகி எழுந்திருந்தான். கிருஷ்ணனும் பலராமனும் சருகுகளைப் பரப்பி அதன்மீது படுத்து நன்றாகத் தூங்கிவிட்டனர். அப்போது அங்கே உண்மையிலேயே ஓர் அசுரன் சாத்யகியின்முன் தோன்றினான்.
சாத்யகியும் அசுரனும் கடுமையாகப் போரிட்டனர். அடி, உதை, கடி, குத்து, பிறாண்டல் என்று வலுவான சண்டை. இறுதியில் அசுரன் தோற்றதில் சாத்யகிக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் அவனுக்கு பலமான அடி. மற்ற இருவரும் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். சண்டையின் ஓசையில் அவர்கள் விழிக்கவில்லை. சாத்யகி அசுரனுக்குச் சமமாகச் சண்டையிட்டிருந்தான். ஒரு மணிக்கு அவன் பலராமனை எழுப்பிவிட்டு, எதுவுமே நடவாததுபோல சருகுப் படுக்கையில் சாய்ந்தான்.
அசுரன் பலராமனையும் சண்டைக்கிழுத்தான். ஆனால், சாத்யகியைவிட மூர்க்கமாகப் போரிட்ட பலராமனிடமும் அவன் தோற்று ஓட வேண்டியதாயிற்று. நான்கு மணிக்குக் கிருஷ்ணன் எழுந்திருக்க, பலராமன் படுக்கப்போனான். தெய்வங்களைத் துதிப்பதற்கு உகந்த நேரமான பிரம்ம முகூர்த்தத்தில் கிருஷ்ணன் காவல் காக்கத் தொடங்கினான்.
புண்பட்ட புலியைப்போலச் சீறிக்கொண்டு மீண்டும் அசுரன் வந்தான். அந்தத் தெய்வீகச் சிறுவனை அவன் கோபத்தோடு நெருங்கினான். கிருஷ்ணன் தனது இனிய, வசீகரமான முகத்தை அவனை நோக்கித் திருப்பி, ஒரு புன்னகையை வீசினான். அசுரன் அதைப் பார்த்துச் செய்வதறியாது போனான். எவ்வளவுக்கெவ்வளவு அந்தப் புன்னகையை அவன் பார்த்தானோ, அவ்வளவுக்கவ்வளவு அவனது பழியான கோபமும் வெறுப்பும் வலுவிழந்தன. இறுதியில் அவன் ஒரு ஆட்டுக்குட்டியைப் போலச் சாது ஆகிவிட்டான். மற்ற இருவரும் விழித்தெழுந்தபோது, அன்பென்னும் ஆயுதத்தால் கிருஷ்ணன் பெற்ற வெற்றியைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
கோபத்தைக் கோபத்தாலும், வன்முறையை வன்முறையாலும், வெறுப்பை வெறுப்பாலும் அழிக்க முடியாது. சகிப்புத்தன்மையால் கோபத்தை வெல்லலாம். வன்முறையை அகிம்சையால் வெல்லலாம். ஈகையும் கருணையுமே வெறுப்பை வெல்லும்.
நன்றி: சனாதன சாரதி, செப்டம்பர் 2014
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |