ஒருநாள் சித்தவாழ்க்கை
ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. ரிலாக்ஸாக ஏதாவது செய்யணும். ஆனா 2 நாள்தான் விடுப்பு எடுக்கமுடியும். அதுல யோகம், தியானம், உடற்பயிற்சி, மலையேற்றம், கொஞ்சம் வேடிக்கை எல்லாம் சேர்ந்த ஏதாவது இருந்தா சொல்லுங்கன்னு ஒரு தோழி கேட்டார். இத்தனையும் ரெண்டே நாளில பண்ணினா, அதுவே ஸ்ட்ரெஸ் ஆயிடாதா என்று தோன்றியது.

ஆகாது என்று நிரூபித்தது அட்லாண்டாவில் செப்டம்பர் 24, 2016 அன்று சித்தமருத்துவர், டாக்டர் செல்வ சண்முகம் நடத்திய ஒருநாள் சித்த மருத்துவ வாழ்முறைப் பட்டறை. அன்றைக்கு, வேறெவருக்காகவும் அல்லாமல், எனக்காகவே காலை 5 மணிக்கு எழுந்தேன். முகத்தைமட்டும் கழுவிவிட்டுச் செல்லமுடிந்தது ஒரு வசதி. காலை 5:45 மணி முதல் 11:00 மணிவரை 'உடம்பே கோவில்' பகுதி. அங்கே பற்பொடியால் பல் துலக்கினோம். பற்பசைத் தயாரிப்பு, அதில் இருக்கும் பொருட்கள், இன்ன பிற தீமைகளையெல்லாம் விளக்கினார் செல்வ சண்முகம். பிறகு அங்கேயே தயாரான சூடான இஞ்சித் தேநீர் வந்தது. தொடர்ந்து, ஒருமணி நேர யோகம் மற்றும் மூச்சுப்பயிற்சி. முடிந்ததும், வியர்த்த உடலுக்குக் குளுகுளு நீராகாரம் (முதல்நாள் வடித்துத் தண்ணீர் ஊற்றிய சோறு, இஞ்சி, பெருங்காயம், கருவேப்பிலை, கல் உப்பு) குளிர்ச்சியைத் தந்தது.

இப்போது ஒவ்வொருவருக்கும் அரை டம்ளர் நல்லெண்ணெய் ஊற்றி வர்ம முறையில் தலை மசாஜ், கண், காது, மூக்கில் எண்ணெய் விட்டார்கள்; 20 நிமிடம் வெயிலில் உட்கார்ந்த பின் சீயக்காய் தேய்த்துக் குளித்தோம். எனக்குத் தெரிந்து குழந்தையாக இருந்தபோது தான் இப்படியெல்லாம் குளிப்பாட்டி இருப்பார்கள். கபகபவென்று பசிக்க, கருப்பு இட்லி (கருப்பு உளுந்து, வெந்தயம், அரிசி, குதிரைவாலி); உளுத்தங்கஞ்சி (கருப்பு உளுந்து, அரிசி, வெந்தயம், தேங்காய், சுக்கு, கருப்பட்டி); முளைகட்டிய பாசிப்பயறு சாலட், தேங்காய் சட்னி என்று தன்னார்வலர்கள் சமைத்த காலை உணவை ஒரு கட்டுக் கட்டினோம்.

11:00 முதல் 1:00 மணிவரை 'உணவே மருந்து'. இன்றைய விஞ்ஞான உலகில் உணவாகப் பயன்படுத்தப்படும் நச்சுப்பொருட்கள், அவற்றின் தீமைகள், அவற்றுக்குப் பதிலாகப் பயன்படுத்தவேண்டிய சரியான பொருட்கள், அவை என்ன பெயரில் அமெரிக்காவில் அழைக்கப்படுகின்றன, எங்கு கிடைக்கின்றன, என்று நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களைப் (எடு: Iodized Salt, Refined Oils, வெள்ளைச்சீனி, பால், மிளகாய், கோதுமை, மாமிசம்) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். எங்களது அரைகுறை இணைய மருத்துவ அறிவுக்கும் ஒரு தெளிவு கிடைத்தது. இடையே சுவையான இஞ்சி மோர் வந்தது. ம்ம்ம்ம்ம்ம்..... எந்த சோடாவும், ஜூஸும் இதற்கு ஈடாகாது.

பிறகு, அனைவரும் சேர்ந்து மதிய உணவு சமைக்க ஆயத்தமானோம். தன்னார்வலர்கள் காய்கறிகளை நறுக்கி வைத்திருக்க, டாக்டரே கூட்டாஞ்சோறு (சாமை, துவரம் பருப்பு, பெருங்காயம், மஞ்சள், சாம்பார்பொடி, தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், இஞ்சி) சமைத்தார். நாங்களெல்லாம் ஓடி ஓடி அவர் கேட்டதை எடுத்துத் தந்தோம். அடுத்த அடுப்பில் தினை பாயாசம் (தினை, தேங்காய், கருப்பட்டி, நெய்) மணம் பரப்பிக் கொண்டிருந்தது. மோர்ச்சோறும் (பழைய சோறு, சுக்கு, பெருங்காயம், கல் உப்பு, மோர், மாதுளை), அரிசி வடகமும் ஒரு பக்கம் தயாரானது. நாமே நின்று, சுவைத்துச் சமைப்பதில் ஒரு திருப்திதானே!

அனைவரும் பேசிச் சிரித்து சாப்பிட்டு முடிக்க 3 மணியானது. எண்ணெய் தேய்த்துக் குளித்து, இப்படி வகையாகச் சாப்பிட்டால் தூக்கம்தானே வரும். வந்தது. ஆனால் தூங்கக்கூடாது. இது கட்டாய விதி. மீறினால் ஜலதோஷம்தான் தண்டனை. எனவே அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு சூடான விவாதத்தை சிறு உடற்பயிற்சியுடன் தொடங்கினார் டாக்டர்காரு. முதலில் அதிகாலையில் எழவேண்டிய நேரம், வேளா வேளைக்கு அரிசி, கோதுமை இல்லாமல் என்னென்ன சாப்பிடலாம் என்று தொடங்கி, எப்படிச் சமைக்க வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவு நேரம் பதப்படுத்தலாம், அறுசுவைகளின் அவசியம், முளைகட்டிய தானியங்களின் பயன் போன்றவற்றை விவரித்தார். இடையே 5 மணிவாக்கில் சுக்குக்காப்பி போட்டுக் குடிக்கத் தந்தார்.

பின் அன்னப்பொடி, அகத்தியர் குழம்பு, அதிமதுரம், மருதம்பட்டைச் சூரணம் போன்ற பல சின்னச் சின்ன சித்தமருந்துகளின் பலன்கள், அவற்றை வீட்டிலேயே தயாரிக்கும் முறை, ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு பிரச்சனைகளைக் கட்டுக்குள் வைக்கப் பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள் என்று செய்திகள் அருவிபோலக் கொட்ட, நாங்கள் கைவலிக்க வலிக்கக் குறிப்பு எடுத்தோம்.

பிறகு அரைமணி நேரம் மனத்தை ஒருமுகப்படுத்தவும், உடல்நலத்திற்கும் உதவும் முத்திரைகள் சிலவற்றையும், புருவமத்தியில் நினைவை நிறுத்தும் தியானத்தையும் பயிற்றுவித்தார். கம்பங்கூழ், வேர்க்கடலை சுண்டல், பழங்களுடன் இரவு உணவு முடிந்தது. இங்கேதான் முதன்முறையாக குதிரைவாலி இட்லி, உளுத்தங்கஞ்சி, கம்பங்கூழ், இஞ்சித்தேநீர், சாமை கூட்டாஞ்சோறு, தினைப் பாயாசம் போன்றவற்றை சாப்பிட்டேன். இவ்வளவு சுவையான உணவுகள் இருக்க, அரிசிச்சோறும், சப்பாத்தியும் உலகின் பிரதான உணவுகளாக இருப்பது ஆச்சரியந்தான்.

ஒரு மருத்துவராக அல்லாமல், கலகலப்பாகப் பழகி, எங்கள் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதிலளித்து ஒரு நண்பராக டாக்டர் செல்வ சண்முகம் பழகியது, சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கையையும் ஈடுபாட்டையும் எங்களுக்குத் தந்தது. தொடர்ந்து உழைத்துக் கொண்டேயிருந்தார்கள் தன்னார்வலர்களான செல்வி ரவி, வாணி மனோகரன், டாக்டர் ரவி பழனியப்பன், டாக்டர் சரவணன் குப்புசுவாமி மற்றும் சிவசண்முகம் சிவக்கொழுந்து ஆகியோர். நாங்களும் குறிப்பு எடுத்ததோடு நின்றுவிடாமல் உடனடியாக ஒரு வாட்ஸப் குழுவைத் தொடங்கி, கற்றுக்கொண்டதை ஒவ்வொருவராகச் செய்துபார்த்து, அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறோம்.

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com