வளைகாப்பு
வெளிச்சத்தையெல்லாம் வாரிச் சுருட்டிக்கொண்டு அப்போதுதான் கதிரவன் காணாமற் போயிருந்த நேரம். "ஏங்க, வெளீல போகும்போது இப்பிடிச் சோகமா முகத்தை வெச்சிகிட்டு?" அங்கலாய்த்தாள் பாப்பு.

"அதான்… சைலண்ட் மெஜாரிட்டி புத்தியக் காமிச்சிட்டாங்களே? நாம என்ன இருந்தாலும் பஞ்சம்பொழைக்க வந்த சிறுபான்மைப் பரதேசிகதானே?" அமெரிக்கத் தேர்தல் பாதிப்பில் நான்.

"கொஞ்சம் இருங்க, இப்ப வந்திடுறேன்" சொல்லிக்கொண்டே மேல்தளத்தில் இருக்கும் மாஸ்டர் பெட்ரூம் நோக்கி விரைந்தாள் பாப்பு.

*****


மூத்தவள் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முந்தைய ஒருநாள்! என் இருக்கையில் இருந்துகொண்டு அடுத்த நாள் புரடக்சனுக்குப் போகும் அப்ளிகேசனுக்கான அப்ரூவல் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்துகொண்டிருக்கும் போதுதான், அடுத்த க்யூபில் இருந்து கேள்வியை வீசியெறிந்தான் கோயமுத்தூர் கோயிந்து, "டேய் மணி, பொட்டிதட்டுறதுல நெம்ப முசுவாட்ட இருக்கூ?"

"கத்தாதறா… இன்னும் மத்த மத்த ஆளுகெல்லாம் லஞ்ச்சுக்குப் போகலையாட்ருக்கு!" சொல்லி முடிக்கும்போது பின்னால் நின்று கொண்டிருந்தான் கோயிந்து.

"இப்பத்தான் வீட்ல பேசிட்டு இருக்கும்போது சொன்னாங்க. பாப்புவுக்கு இன்னிக்கு சர்ப்ரைஸ் பேபி சவர் ஃபங்சனை சாய்ங்காலம் ஏழுமணிக்கு எங்க வீட்டுல நடத்த எல்லா ஏற்பாடும் செய்திருக்காங்ளாம். நீயும் பாப்புகிட்ட வாய விட்றாத. ஆப்பீசுல ஆரையெல்லாம் கூப்பிட்லாம்னு சொல்லு!" என்று அவன் மனைவி சுதா சொன்னதைச் சொன்னான்.

கோயிந்து, விசாகப்பட்டினம் விஜய், குண்டூர் பிரதீப், நான் என நால்வரும் பக்கத்து மீட்டிங் ரூமுக்குப் போனோம். நான், எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் தென்னிந்தியர்களை மட்டும் அழைக்கலாமென்றேன். குண்டூர் பிரதீப், அலுவலகத்தில் வேலைசெய்யும் எல்லா இந்தியர்களையும் அழைக்க வேண்டுமென்றான். பேச்சுக்குப் பேச்சு கலந்துரையாடல் நீண்டுகொண்டே இருந்தது.

பலதரப்பட்ட விவாதத்துக்குப் பிறகு தீர்மானமாகச் சொன்னான் கோயிந்து, "பாப்பு ஹெல்த்கேர்ல வேலை செய்றாங்க. அவங்களுக்கு இப்படி ஒரு சாராரை மட்டும் அழைச்சா நிச்சயம் பிடிக்காது. அவங்க சந்தோசத்துக்குத்தானே இந்த ஏற்பாடே! கம்பெனி பூராவும் அழைச்சி நடத்த, எங்க வீட்லயும் இடம் காணாது. அதனால உங்க டிப்பார்ட்மெண்ட்ல இருக்கிற எல்லாரும், அடிஷ்னலா விஜய் பேமிலியும் பிரதீப் பேமிலியும் போதும். டிப்பார்ட்மெண்ட்டுக்கு வெளியில இருக்கிற இந்தியர்களையும் அழைக்கத் தேவையில்லை."

கோயிந்தனின் யோசனை எல்லாருக்குமே பிடித்திருந்தது. சரியெனச் சொல்லவே, எல்லாரையும் கோயிந்துதான் அழைக்கப் போனான். நான், மீண்டும் என் வேலையை மேற்கொண்டு செய்யப்போனேன்.

நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் மூடப்போகிற நேரம். அன்றைய பங்கு நிலவரப்படி நம் கணக்கில் ஓட்டை விழுந்ததா, அல்லது போனாப்போகிறதென்று நாலு பணம் கூடிக் காண்பிக்கிறதாவெனப் பார்ப்பதற்காக இ-ட்ரேடு சைட்டுக்குப் போகலாமென நினைத்த பொழுதில்தான், பேண்ட் பாக்கெட்டிலிருந்த செவ்வகச்சட்டகம் சிணுங்கியது.

"சொல்றா பாப்பும்மா? ஒடம்புக்கு எப்டியிருக்கு? இன்னும் வீட்டுக்குப் புறப்படல?"

"இதா.. எல்லாத்தையும் எடுத்து வெச்சிகிட்டு இருக்கேன். புறப்பட வேண்டியதுதான். சுதா கூப்பிட்டிருந்தாங்க. எதொ பட்டுசேல ஆரோகிட்டச் சொல்லி ஊர்லிருந்து வாங்கியிருக்காங்ளாம்; எங்கிட்டக் காண்பிக்கணுமாம். வாங்க, பாத்துட்டு அப்படியே டின்னரும் இங்கயே முடிச்சிக்கலாம்னு கூப்பிட்டாங்க. இன்னிக்கு ஆறு மணிக்குள்ள வந்திருங் மாமாய், ப்ளீஸ்!"

நல்லாப் போடுறாங்கய்யா பிளானு! நினைத்துக்கொண்டே, "செர்றா பாப்பு. பாத்து வீட்டுக்குப் போய்ச்சேரு!"

"செரிங்க… நீங்க அந்த பட்டுசேல விசியத்த கோய்ந்துகிட்டெல்லாம் சொல்லீட்டு இருக்காதீங்க. எதுவும் தெரிஞ்சமாரி காமிச்சிக்க வேண்டாம். செரியா?"

"அய்யொ… அதெல்லாம் கூழை கோய்ந்தன்கிட்ட நான் ஏன் சொல்லிக்கிறன்? நீ பத்திரமாப் பாத்துக்க. நான் டாண்ணு ஆறுக்கெல்லாம் வந்திடுறன்!" பவ்யமாகப் பேசி மிகவும் மென்மையாகப் போனை ஆஃப் செய்தேன்.

பொண்டாட்டி பேச்சும் புள்ளத்தாச்சி அணுசரணையும் நெம்ப முக்கியமில்லையா பின்ன! ஆனால், அசரீரி போலத் திடுமெனப் பின்மண்டை வழியா காதுகளைப் பதம்பார்த்தது கோய்ந்தனின் குரல்.

"என்றாது, கோய்ந்துகிட்டெல்லாம் ஏன் சொல்லிக்கிறன்னு சொன்ன?"

"இல்லடா, சுதா பட்டுசேலை பார்க்க வரச்சொல்லி இன்வைட் செய்து இருக்காங்னு சொல்லிட்டு, அதைக் கோய்ந்துகிட்டச் சொல்லிடாதீங்கன்னு பாப்பு சொல்லுச்சு"என்றேன். அவன் நம்பிக்கையில்லாமல் பார்க்கவே, "டேய்… வேணுமின்னா நீ உம்பொண்டாட்டியக் கூப்பிட்டுக் கேள்றா" எனச் சொல்லவுமே ஆள் நிதானத்துக்கு வந்தான்.

என்பிஆர் ரேடியோ, அதாங்க, ஒரு விசியம்னா எல்லாருக்கும் தெரியப்படுத்துகிற எங்க டிப்பார்ட்மெண்ட் ப்ராஜக்ட் மேனேஜர் வேணி முத்துக்குமார் இருக்காள்பாருங்க, கிட்டத்தட்ட எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நூற்றைம்பது பேருக்கும் போய்ச் சேரும்படியான ஒரு பெர்ஃபார்மன்சைச் செய்து முடித்திருந்தாள். கோயிந்து, பிரதீப், விஜய், நான் என நான்கு பேரும் துரிதகதியில் டேமேஜ் கண்ட்ரோல் செய்ய வேண்டியிருந்தது.

"அய்யா, சாமிகளா, இது ஒரு சர்ப்ரைஸ் பேபிசவர் ஃபங்சன். எங்க ஊர்ல வளைகாப்புன்னு சொல்றது. இது நடத்துற விசியம் ஏழுமாத கர்ப்பிணியான அந்த அம்மணிக்குத் தெரியவே தெரியாது. எல்லாரையும் அழைச்சுக் கொண்டாடுற அளவுக்கு கோய்ந்து வீட்ல இடமும் காணாது. கோவிச்சுக்காதீங்க; முக்கியமா அந்த புள்ளத்தாச்சி அம்மணிக்குத் தெரியப்படுத்தீறாதீங்க!" என்று எல்லாரிடமும் சென்று யாசித்தோம்; குறிப்பாக சக இந்தியர்களிடம்.

மாலை ஐந்தரைக்கெல்லாம், மனைவி சொல்லுக்குக் கட்டுப்படும் சிறந்ததொரு கணவனாக வீட்டுக்குப் போய் நின்றேன்.

"என்னுங்க இது? என்னால நம்பவே முடியலை. சித்திரைக்கனிக்கு வரச்சொன்னா, ஆடிப் பதினெட்டாம் பெருக்குக்கு வர்ற ஆளாச்சே நீங்க. இன்னிக்கு எப்படி? திஸ் இஸ் அன்பிலீவபிள்! இருங்க, காப்பி போடுறன். அப்புறமாப் போய் ரெடியாகுங்க மாமாய்!"

என்னாவொரு குலாவல்! என்னாவொரு கவனிப்பு! நான் சிறுவனாக இருந்தபோது, அப்பா சம்பளக்கவர் மொத்தத்தையும் அம்மாவிடம் கொடுக்கும்போது இடம்பெறும் அம்மாவின் கவனிப்பு இன்றுதான் பாப்புவிடம் தோற்றுவிட்டிருக்கிறது.

காப்பியை ஆத்திக்கொண்டே மெதுவாக நடந்து வந்தாள் பாப்பு. "பாப்பும்மா, நீ அங்கயே இரு. நானே வந்து எடுத்துக்கிறேனே!"

நான் சொன்னதைப் பெரிதாகச் சட்டை செய்துகொள்ளாமல் நெருங்கி வரும்போது, "ஏங்க கோயிந்து பாவமில்ல? ஏன் இப்பிடி சுதா அவருக்குத் தெரியாம…?"

"பொண்டாட்டி புருசன்னா எல்லாம் இருக்கிறதுதான்!"

"என்னது? அப்படின்னா நீங்களும் எங்கிட்டச் சொல்லாம கொள்ளாம எதோ செய்திருக்கீங்ளா? நானெல்லாம்…." புலம்பல் புராணம் ஆரம்பிக்கும்போல இருந்தது. உடனே மடைமாற்றித் திருப்பிவிட்டேன்.

"அய்யய்யோ… பாப்பு, நானல்லவா உன்னைக் கேட்கணும்? நீயும் இதுபோலப் பட்டுசேலை வாங்கி இருக்கியான்னு?"

"என்னுங்க இதூ? உங்ககிட்டச் சொல்லாம நான் அப்பிடிச் செய்வனா?"

"சாரி பாப்பு, ஐ டோண்ட் மீன் டு ஹர்ட் யூ" அடித்தேனே சிக்சர்!

எங்கள் வளவிலிருந்து கிளம்பி, நான்கு வளவுகள் கடந்து இருக்கும் ஆர்ட்ரி சேசுக்குள் போய் கோயிந்தன் வீட்டு முன்றலில் காரை நிறுத்தினேன். பாப்புவைப் பக்குவமாக இறங்கச் சொல்லி கார்க்கதவினைத் திறந்ததுதான் மாயம்.

கோயிந்தன் மனைவி சுதா, விஜய் மனைவி மல்லிகா, பிரதீப் மனைவி சுந்தரி உள்ளிட்ட ஏழு பட்டணிந்த சுமங்கலிகளும் வீட்டுவாசலுக்கு ஓடோடி வந்து ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். பாப்புவின் முகம் பொன்னாய் மலர்ந்தது. புடைசூழ்ந்து கொண்ட அலுவலக நண்பர்கள் நடப்பதையெல்லாம் விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பதினாறு தட்டில் சீர்வரிசை, வண்ணவண்ண வளையல்களென கோயிந்தன், சுதா வீட்டு அக்கம்பக்கத்துத் தெலுங்குப் பெண்மணிகள் விழாக்கால ராஜ்ஜியம் நடத்தினர். தேங்காய்சோறு, புளிசோறு, எலுமிச்சைசோறு, மாங்காய்சோறு என விதவிதமாய்ப் புள்ளத்தாச்சி சாப்பாடு. கூடவே பூரி, பொங்கல் என நம்ம ஊர் விருந்து பின்னிப் பெடலெடுத்தது. அன்றைய நாள் நல்லவிதமாய்க் கொண்டாடினோம்.

அடுத்தநாள் இரவு எட்டரை மணிக்கு, நாங்கள் இருக்கும் கம்யூனிட்டிக்குள்ளேயே பாப்புவை வாக்கிங் அழைத்துப் போகலாமெனப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் போதுதான் வீட்டு அழைப்புமணி அடித்தது. திறந்து பார்த்தால், ஓரிரு அலுவலக நண்பர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது.

"நாங்க, இந்தமாரி நிகழ்ச்சியை இதற்கு முன்னாடி பார்த்ததில்லை. அதான் ஏமாந்திட்டோம்!" என்று பேசிக்கொண்டிருந்து விட்டுச் சென்றனர்.

*****


இதோ மேல்தளத்துக்குப் போயிருந்தவள் வந்துவிட்டாள். பெட்ரூமிலிருந்து வந்திருக்கும் பாப்புவைப் பார்த்ததும் எனக்கு மிகவும் தர்மசங்கடமாய் இருக்கிறது. நான் அப்படி நினைத்ததும் பேசியதும் தவறுதான்.

"ஐ ஏம் வெரி சாரி பாப்பும்மா!!"

வளைகாப்பில் கலந்துகொண்ட வெள்ளைக்காரர்கள் மாக்தாவும் பிரையன் வோஸ்னியும் கொடுத்துவிட்டுச் சென்ற அந்தத் தங்க வளையல்கள் பாப்புவின் கைகளில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.

பழமைபேசி,
சார்லட், வடகரோலினா

© TamilOnline.com